டேய்! சாமியார் வெளியே வாடா! - மத்தியப்பிரதேசத்தின் சின்னஞ்சிறு கிராமங்களில் ஒன்றான துகயிதட் கிராம அதிகாரி ஜெயச்சந்திர பாண்டேயின் குரல் கர்ண கடூரமாக எதிரொலித்தது.
“உன் வேஷமெல்லாம் வெளுத்துப் போச்சு வெளியே வாடா!” தொடர்ந்து ஒலித்தது. அக்கிராம முக்கியஸ்தாகளில் ஒருவரான சென்னா நாயகாவின் குரல்.
அந்தச் சின்ன வீட்டின் முன் மக்கள் கூட்டம் பலவாறு தரமற்ற வார்த்தைகளால் தாறுமாறாகக் கத்தியபடி இருந்தது. கூச்சல்கேட்டு வெளியே வந்தார் விஜய்! தூய்மையான வெண்ணிற ஆடை! தீர்க்கமான பார்வை! சாந்தமான முகம்! ஒளி வீசும் அவர் விழிகள் கூட்டத்தினரை ஒருகணம் திகைத்து நிற்க வைத்தது. ஆனால் மறு நிமிடம்...
கூட்டத்திலிருந்து ஒரு அழகிய இளம் பெண் தலைவிரி கோலத்துடன் முன் வந்தார்! அழுதழுது சிவந்த விழிகள்! கையில் ஒரு சின்னஞ்சிறு குழந்தை! விஜயசிங்கை நோக்கி வந்தாள்.
“என் வாழ்வை குலைத்த பாவி! இந்தா உன் பாவத்தின் சின்னம்!” என்று கூறி, அவர் காலடியில் போட்டுவிட்டு ஓடிவிட்டாள்! விஜயசிங் திடுக்கிட்டார். அவரால் பேசவும் முடியவில்லை! இறைவன் இயேசுவைத் தன் இதய தெய்வமாகக் கொண்ட விஜயசிங் தன் அன்புப் பெற்றோரைத் துறந்து, பணம், பதவி, பட்டம் அனைத்தையும் உதறித் தள்ளி ஆண்டவரின் மந்தையில் ஆடுகளைச் சேர்க்கும் அருட்பணிக்குத் தன்னை அர்ப்பணித்து, அன்னையின் கண்ணீருக்கும் அடிமையாகாமல் இல்லற வாழ்வினை ஏற்காமல் மத்தியப்பிரதேசத்தின் சின்னஞ்சிறு கிராமமான துகயிதட்டைத் தன் பணித்தளமாகக் கொண்டி ஊழியம் செய்து வந்தார். ஊழியத்தின் பாதையில் அவா் அடைந்த இன்னல்கள் எடுத்துரைக்க முடியாதவை! எம்பிரான் இயேசு தலைசாய்க்க இடமின்றி அலைந்தது போல் தங்க இடமின்றி அலைந்தார். சாலை ஒரங்களில் தலைசாய்த்த இரவுகள் உண்டு. உண்ண உணவின்றி வாடினார். கல்லடி, சொல்லடி அனைத்தும் ஏற்றார். பின் அவருடைய உன்னதப் பண்புகளால் கவரப்பட்ட ஒரு சிலா் உதவியால் தங்க இடம் கிடைத்தது. அந்த ஓலைக் குடிசையும் தீக்கிரையாகியது. இவை எல்லாவற்றிலும் விஜயசிங் கலங்கவுமில்லை. பின் வாங்கிச் சொந்த ஊர் நோக்கி ஓடவுமில்லை.
ஆனால் தற்போது அவருடைய பண்பான வாழ்விற்குப் பங்கம் விளைவிக்கும். மாபெரும் சோதனை அல்லவா இது! திகைத்தார்! என்ன சொல்லுவது! என்ன செய்வது என்று தெரியாது திகைத்தார். அவர் விழிகளினின்று கண்ணீர் முத்துக்கள் உருண்டன. குவா குவா” குழந்தையின் அழுகுரல் ஒலித்தது! விழிகளைத் தாழ்த்தினார்! குழவியின் விழிகளுடன் அவர் விழிகள் கலந்தன. எதையோ அக்குழந்தை அவரிடம் கேட்டது. இரு கரங்களிலும் குழந்தையை வாரி எடுத்தார். விண்ணை நோக்கி தூக்கினார். “இயேசப்பா! நன்றி!” அவர் இதழ்கள் இசைந்தன. அமைதியாக வீட்டிற்குள் சென்றுவிட்டார். களங்கமென்ற முகில் பண்பின் பெட்டகமாம் விஜயசிங் என்ற முழு நிலவை மறைக்க முயன்றது. ஒரு நாள் முகில் விலகும். முழு நிலவு வெளிவரும் என்பதை அறியாதவரா அவர்?
தான் தவறு செய்யவில்லை என வாதிடுவார் என எதிர்பார்த்த அதிகாரிகள் ஏமார்ந்தனர். அவரை ஏசி ஊரைவிட்டுத் துரத்திவிட வேண்டும் என திட்டமிட்டிருந்தவர்கள் திடுக்கிட்டனர். விஜயசிங்கின் மீது வேண்டுமென்றே இக்களங்கம் சுமத்தப்பட்டிருக்கிறது என்பது கூட்டத்தினரில் பெரும்பான்மையோருக்குத் தெரிந்த உண்மைதான். ஆனால் அதிகாரிகளை எதிர்க்க முடியாத கோழைகள் ஒவ்வொருவராகக் கலைந்து செல்ல கூட்டம் கரைந்தது.
வெட்கம் தாளாமல் வேறு இடம் சென்றுவிடுவார் என எதிர்பார்த்த ஜெயச்சந்திர பாண்டே அதிலும் தோல்வி கண்டார். முன்போலவே விஜயசிங்கின் ஊழியம் தொடர்ந்து நடந்தது! அக்குழந்தைக்கு கிப்ட்சன் எனப் பெயரிட்டார். கடவுள் கொடுத்த பரிசான மகன் என மகிழ்ந்தார். நல்லொழுக்கத்திலும் கடவுள் பக்தியிலும் வளர்க்கப்பட்டான் கிப்ட்சன். இயேசுவின் மந்தையில் ஆடுகள் பல சேர்ந்து காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. பதினாறு வருடங்கள் ஓடி மறைந்தன.
“ஜயா, ஐயா” குரல் கேட்டு வெளியே வந்தார் விஜய்சிங். அவர் பாதங்களில் வீழந்து கதறினாள் ஒரு நடுத்தர வயதுடைய பெண். நரைத்த தலை, தளர்ந்த உடல்! குழி விழுந்த கண்கள்! வயதிற்கு மிஞ்சிய முதுமை.
“அம்மா நீ யார்? என் கால்களை விடம்மா கடவுளின் பாதத்தைப் பிடி” பதறியபடி தன் கால்களை விலக்க முயன்றார் விஜய்சிங். அவளோ விடவில்லை. முட்டி மோதி அழுதாள். கதறினாள். வெகுநேரம் கழித்து ஒருவாறு அவள் அமர்ந்தாள்.
“ஐயா! நான் ஒரு மாபாவி! ஏறக்குறையப் பதினாறு ஆண்டுகளுக்கு முன் இவ்வூர் அதிகாரி ஒருவரின் ஆலோசனைப்படி என்பாவத்தால் விளைந்த கனியை, உங்கள் பாதத்தில் வைத்துக் குற்றமற்ற உங்கள் மீது குற்றம் சுமத்திய படுபாவி தான் நானய்யா! என் பாவத்தை மறைக்கவும், பெரும் பணத்தைப் பெறவும் அன்று நாடகமாடினேன். பணத்தோடு ஊர் விட்டுச்சென்றேன். எங்கெங்கோ அலைந்தேன். பணம் கரைந்தது. பாவம் தொடர்ந்து. அன்றைய நிகழ்ச்சி நிழற்படம் போல் என் கண்முன் விரிந்தபடி இருந்தது. நிம்மதியின்றித் தவித்தேன். உறக்கமற்ற இரவுகள் ஓடி மறைந்தன. என்னால் பாவப் பாரத்தைத் தாங்க முடியவில்லை. உங்களிடம் மன்னிப்புக் கேட்டாலொழிய வேறு கதியில்லை என உணர்ந்தேன்! ஓடி வந்தேன். நீங்கள் இங்கு இருக்கிறீர்களோ. இல்லையோ என சந்தேகப்பட்டபடியே வந்தேன். கடவுள் இந்தப் பாவிக்கும் இரங்கினார். ஐயா என்னை மன்னித்தேன்! என்று ஒரு வார்த்தை கூறுங்களய்யா” மீண்டும் கதற ஆரம்பித்தாள் அப்பெண்.
அவளை' அமைதிப்படுத்தித் தன் வீட்டினுள் அழைத்துச் சென்றார் விஜய்சிங். தூய்மையான வெண்ணிற ஆடையுடன் இளைஞன் ஒருவன் எதிர்வந்தான். ஞான ஒளி வீசிய அவ்விளைஞன்தான் தன் மகன் என அறிந்த அப்பெண் தலைகுனிந்தாள். கதிரவனாகிய அவன் முன் அவன் தாயாகிய தான் காரிருள் என உணர்ந்தாள். பாவிகளை மீட்க வந்த பரமன் இயேசுவைப் பற்றி எடுத்துரைத்தார், விஜய்சிங். பார்வேந்தன் இயேசு பாவியான சமாரியப் பெண்ணைத் தேடிச் சென்று பாவத்தை உணர்த்தி பரகதி வாழ்வுக்குப் பங்குள்ளவளாக மாற்றியதையும், (யோவான் 4:5-42) தன் பாவங்களைப் போக்க பரமன் பாதத்தைப் பற்றிப் பிடித்துப் பரமானால் மீட்கப் பட்டவளாகச் சமாதானம் பெற்றதையும் எடுத்தியம்பினார் விஜய்சிங் (லூக்கா 7:35-50) தன் பாவங்களைப் போக்க வேண்டி. பரமனின் பாதங்களைப் பற்றினாள் அப்பெண். உண்மையான மனஸ்தாபக் கண்ண் சொரிந்தாள். இறை மகன் இயேசுவின் இணையற்ற, கறையற்ற இரத்தத்தால் கழுவப்பட்டாள். மரியாள் என்ற பெயரோடு ஞானஸ்நானம் பெற்றாள். விஜயசிங் வீட்டிலேயே பணிவிடை செய்து வரலானாள். நாட்கள் நகர்ந்தன.
“ஐயா! என்னை மன்னிச்சிடுங்க! உங்க தெய்வத்தின் மகத்துவத்தையும், உங்க அன்பையும், பண்பையும் அறியாத இந்தக் கபோதியை மன்னியுங்கய்யா! உங்களை ஊரைவிட்டே விரட்ட எண்ணினேன். அதே சமயம் என் வீட்டு வேலைக்காரியோட நான் முறைகேடாக நடந்ததால் விளைந்த பாவத்தின் சின்னத்தையும் அழித்துவிட நினைத்தேன். அவளை வைத்து நான் போட்ட நாடகம்தான் அன்று நடந்தது. நான் செய்த மாபாவம் தான் ஐயா இன்று புற்று நோயால் நான் வாடுவதற்குக் காரணம். இன்னும் சில நாட்களில் நான் இந்த உலகத்தை விட்டுப் போய்விடுவேன். அதற்குள் உங்களிடம் மன்னிப்புப்பெற விரும்பினேன். 'ஐயா! என்னை மன்னித்தேன் என்ற ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லுங்கள் ஐயா!” விஜயசிங்கின் கரங்களைப் பிடித்துக்கொண்டு சிறு குழந்தையைப் போலத் தேம்பி தேம்பி அழுதார் ஜெயசந்திர பாண்டே. ஆஜானுபாகுவான அவர் உடல் இன்று மெலிந்து குலுங்கியது. விஜய்சிங் அக மகிழந்தார். பாவிகளைத் தேடிவந்து மன்னிக்கும் மன்னவன் இயேசுவைப் பற்றி எடுத்துரைத்தார். தன் பாவங்களைச் சிறு பிள்ளையைப் போல ஒவ்வொன்றாகக் கூறி அறிக்கையிட்டார் ஜெயசந்திர பாண்டே.
சிலுவையில் தன்னை தியாக பலியாக ஈந்த அந்த நேரத்தில் தன்னை நோக்கிக் கெஞ்சிய வலப்புறக் கள்வனுக்குப் பரத்தில் இடம் கொடுத்த பரமன், ஜெயசந்திர பாண்டேயையும் இரட்சித்தார். ஜெயசந்திர பாண்டேயின் முகத்தில் எல்லையில்லா சாந்தமும், அமைதியும் நிலவியதைக் கண்ட விஜய்சிங் மன நிறைவுடன் விடை பெற்றார். முகில் விலக முழுநிலவு அழகாக வெளி வந்தது.
இந்தக் கதை நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.