தொடர் - 10
கவிதா'? என அலறிய தனராஜைப் பார்த்து,அப்பா? எதையும் நினைக்காதீங்கப்பா? கவலைப்படாதீங்க! இயேசப்பா! எல்லாவற்றையும் நன்மையாகவே முடிப்பார். மாப்பிள்ளை வீட்டாரை வந்து சுதாவையும் குழந்தையையும் கூட்டிட்டு போகச் சொல்லி கடிதம்போடுங்க, கவிதா நிதானமாகச் சொன்னாள் !
அக்கா! பணம்! பணம்! என்று அலைகிற வீட்டிலே நான் போய் வாழணுமா? அப்படி நான் போகப் போறதில்லை? கோபத்தில் குதித்தாள் சுதா.
சுதா! பைத்தியக்காரி மாதிரி பேசாதே? அங்கபோய் உன் கணவருக்காகவும், அவர் பெற்றோருக்காகவும் உபவாசமிருந்து ஜெபி இங்க எப்படி இருக்கறையோ அதே மாதிரி அங்கேயும் போய் வேதம் வாசிப்பு ஜெபம், ஆலய ஆராதனை என்று பக்திக்குரிய வாழ்வு நடத்து. ஆண்டவர் அவர்களை மாற்றுவார் !... சரி நேரமாயிட்டு இன்றைக்கு கன்வென்ஷனுக்கு போகணும் அம்மா அம்மா சீக்கிரம் புறப்படுங்க!'? தன் தகப்பனை நோக்கித் திரும்பியவள், ஏப்பா நீங்களும் வாங்களேன் ஆறுதலாக இருகும், அவள் வார்த்தைகள் கெஞ்சின. சிலை போல் சிரமசைத்தார் தனராஜ்.
பந்தல் அமைக்கப்பட்டு மின்விளக்குகளால் ஒளிமயமாய்த் திகழ்ந்தது ஆலயவளாகம் லெந்து கால தியானக் கூட்டங்கள் வாரந்தோறும் நடைபெற்று வந்தன. ஆலயம் நிரம்பி வழிய பந்தலில் இடம் போதாத அளவு கூட்டம், இளைஞர் குழாம் ஒன்று விதவித இன்னிசைக் கருவிகளுடன் இசை பாடிக் கொண்டிருந்தனர். தனராஜ் அறிந்தவர்களுடன் அமராமல் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்திருந்தார், அவர் உள்ளம் அலைமோதிக் கொண்டிருந்தது. கடந்த கால நிகழ்ச்சிகள் கண் முன் விரிந்தன.
கவிதா! மழலை மொழி பேசி மயக்கிய குழந்தைக் கவிதா! பள்ளிப் பருவத்திலே நினைத்ததெல்லாம் வேண்டுமெனப் பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைக் கவிதா! **அப்பா, அப்பா” என சுற்றிச் சுற்றி வந்து காரியம் சாதிக்கும் கல்லூரிக் கவிதா வியாபார வீழ்ச்சியால், தேர்வில் தவறியதால் தந்தையின் கோபத்திற்கு ஆளான கவிதா! பின்வீட்டின் மகள் ஜாய்ஸியுடன் சேர்ந்து உருவான பக்தியுள்ள இன்றைய கவிதா! சிந்தனை சிறகடித்தது. அன்றும் இன்றும் எவ்வளவு மாற்றம்? எல்லாம் தனக்கே. தனக்குப் பின் மற்றவர்களுக்கு என்று வாழ்ந்தவள் இன்று தனக்கென எதையுமே ஒதுக்கத் தெரியாதவளாக மாறியுள்ளது நினைவில் எழுந்தது இயேசுவின் பிள்ளையாக கவிதா மாறியபின், தான் அவளை வேதனைப்படுத்திய நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்தன. ரவியைப் பாசத்தைக் கொட்டி பணத்தைக் கொட்டி படிக்க வைத்து, மூத்தவள் கவிதா இருக்க இளையவன் ரவி சுதாவிற்கு திருமணம் செய்தது. அவள் சம்பாதிக்கும் பணத்தை மட்டும் மாதந்தோறும் முதல் தேதி அப்படியே பறித்து விடுவது; நல்ல உடைகளோ வேறு எதுவுமோ வாங்கித் தராதது, இவ்வளவு செய்தும் மனங் கோணாமல் மகிழ்ச்சியோடு வாழும் தன் மகளை நினைத்தார். தகப்பனுக்குரிய பொறுப்பை நிறைவேற்றாத தன்னை “அப்பா” என அழைக்கும் அவள் அன்பை எண்ணி நாணினார். தனக்கிருந்த ஒரே செயினையும் கொடுத்துவிட்ட அவள் தியாகத்தை நினைத்துக் குமுறினார்.
அதே சமயம்! பணம், பதவி, புகழ் என ஓடி, ஓடி ஏமார்ந்த தன் வாழ்வால் எதிர்த்துப் பேசாத தன்னருமை மனைவி கண்ணீரில் வாழ்கிறாள். மகள் கவிதா வாழ்வின்றி வதைபடுகிறாள். இதையெல்லாம் எண்ணி எண்ணிக் கலங்கிய தனராஜை சோகம் கலந்த இனிய குரல் கனவுலகிற்குக் கொண்டு வந்தது. இளைஞன் ஒருவன் உள்ளமுருக பாடிக் கொண்டிருந்தான்.
“கொல்கதா மலையிலே
இரத்தம் சிந்தும் குருசிலே
எந்தன் தெய்வம் தொங்குதே
எந்தன் தெய்வம் தொங்குதே
என் சிந்தனைப் பாவங்கள்
உன்சிரசில் முள் முடியோ
என் கரங்களின் கறைகளால்
உன் கரங்களில் ஆணியோ?
தனராஜ் துடித்தார். “எனது சிந்தனையில் நான் இழைத்த பாவம் என் இயேசுவுக்கு முள் முடியோ! ஐயோ! என் கரம்... கரம்... கலப்படத்தில் தேர்ந்த என் கறைபடிந்த என் கரம் அதற்குப் பதிலாக இறைவன் கரத்தில் ஆணியா?”!
பாதை தவறிய என் பாதம்
வதைபடுவதோ உன் பாதம்
இருண்ட என் நினைவுகள்
உன் நெஞ்சிலே ஈட்டியோ?
பணத்திற்காகவும், பதவிக்காகவும், பெருமைக்காகவும் எப்படியெல்லாம் வாழ்ந்தேன் ? எத்தனைப் பொய்கள்! எத்தனை வேஷம், இதற்கெல்லாம் என், இயேசு வதைப்பட்டாரா?
வீணான வார்த்தைகள்
தவறான பார்வைகள்
தந்தையே உன் முகத்திலே
நிந்தையான எச்சிலோ ?
ஐயோ இயேசுவே ! எனக்காக, என் பாவத்திற்காகவா தந்தையே ! நீர் சிலுவையில் அறையப்பட்டீர்? நான் பாவி! நான் தண்டிக்கப்பட வேண்டியவன்! அவர் உள்ளம் குமுறியது. வார்த்தைகள் வெளிவரவில்லை. கண்ணீர் கொட்டியது!
வதைப்பட்டீர் எனக்காக
வாங்கித் தந்தீர் மீட்பையே
என்னையே நான் தருகிறேன்
ஏற்று என்றும் நடத்துவீர்! (கொல்கதா)
எனக்காக மரித்த இயேசுவுக்கு என்னையே நான் தரவேண்டுமா ? எப்படித் தருவது' தனராஜ் சிந்தித்தார்.
அன்றைய செய்தியாளர், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலால் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை விவரித்து, உனக்காக மரித்த அவருக்கு உன்னையே நீ. தருவது என்பது இயேசுவிடம் உன் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவது. அதன் பின் அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு இவ்வுலகில் எதுவரினும் இறைவன் இயேசு விரும்பும் வண்ணம் வாழ்வது தான்”? என பிரசங்கித்துக் கொண்டிருந்தார். தனராஜின் உள்ளம் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. ஜெபவேளையில் தன்னை முற்றிலும் தேவனுக்கு அர்பணித்த அவர் உள்ளத்தில் அமைதி நிலவியது.
இரவு! அக்கா”” தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த கவிதா குரல் கேட்டு எழுந்து உட்கார்ந்தாள். சுதா கலங்கிய கண்களுடன் நின்றிருந்தாள்.
“*உட்கார் சுதா ! என்ன விஷயம் ?”” அவளைத் தன் அருகே அமரச் செய்தாள்.
ஏங்க்கா ! இப்படி உன்னையே தியாகம் பண்ணிட்டு இருக்கே? உன் செயினைக் கழட்டிப் போட்டுட்டேயே! உன்னைத் தான் அப்பா வெறுக்கிறாரே! உனக்கு திரும்ப செய்தா போடப்போகிறார்? நீ ஆபீஸ்க்கு வெறுங்கழுத்தோடவா போவாய்? ஏங்க்கா? அம்மா தான் பெரிசா திருமாங்கல்யச் செயின் போட்டிருக்காங்க. அதுகூட இன்னொரு செயினும் போட்டிருக்காங்க அவங்க கழட்டிப் போட்டாக் கூட நான் வருத்தப்பட மாட்டேன்”. மடமட வென்று பேசிக் கொண்டே போன சுதாவை இடைமறித்தாள் கவிதா.
“அம்மா கழட்டிப் போட்டா நீ வருத்தப்படமாட்டே ஆனால் உன் கணவர் வீட்டில் ரொம்ப வருத்தப்படுவாங்க? சிரித்தாள் கவிதா.
“ஏங்க்கா?'” தன் மலர் விழிகளைப் படபடவென அடித்து ஆச்சரியமாகக் கேட்டாள் சுதா.
“மக்கு! அம்மா போட்டிருக்கிறது எல்லாம் தங்கம் இல்லை. கவரிங் !”
கவரிங்கா? அதையா? அம்மா போட்டிருக்காங்க? இகழ்ச்சி அவள் சொற்களில் மிளிர்ந்தது.
“சுதா! அப்பா ரவியை பணத்தைக் கொட்டி படிக்க வைத்தார். தன் மகன் டாக்டராயிட்டா பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுமென நினைத்தார். பணக்கார இடத்தில் பெண் எடுத்தார் உங்க இரண்டு பேருடைய திருமணத்தை ஆடம்பரமா கடன் வாங்கி நடத்தினார். ரவி ஏமாற்றிட்டுப் போயிட்டான். வியாபாரத்திலும் நஷ்டம். அந்தஸ்தை விடவும் அவரால் முடியவில்லை! அம்மா நகையெல்லாம் வித்தாச்சு அதற்கு பதிலாக அதேமாதிரி கவரிங் வாங்கிப் போட்டிருக்கிறார். அம்மாவிற்கு விருப்பமில்லை அம்மாதான் அப்பாவின் அடிமை ஆச்சுதே! விலங்கா அதை சுமந்துகிட்டு இருக்காங்க'* பெருமூச்சோடு முடித்தாள்
அப்படி ஒரு போலி அந்தஸ்து வேணுமாக்கா? எனக்கு அப்பாவைக் கண்டாலே!” வெறுப்புடன் சொன்னாள் சுதா.
அப்படிச்சொல்லாதே சுதா! இந்த உலகில் எல்லோருமே ஏதாவது ஒரு மாயையில் விழுந்து பாவிகளாக வாழ்றாங்க, அவங்களுக்கு வழிகாட்டனும், கிறிஸ்துவைக் காட்றதுதான் உண்மைக்கிறிஸ்தவன் வாழ்வு! அப்பாவும் திருந்த முடியும். இன்றைக்கு நீ அப்பா முகத்தை பார்த்தாயா? ஏதோ மாற்றம் தெரியுது. மாயவலையிலிருந்து அப்பாவை விடுவிக்கனும் என்று நான் ஜெபித்த ஜெபத்திற்கு பதில் கிடைச்சிட்டது என்று நம்புகிறேன். சுதா அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
இதன் தொடர்ச்சி கண்ணீரின் விதைப்பும் கெம்பீர அறுவடையும் என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.