“சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” - என
சாமுவேலின் இளைய மகன் ஷியாம் சத்தம் போட்டுப் படித்துக் கொண்டிருந்தான். ஷியாம் படித்த பாடல் வரிகள் அந்த நீல வண்ண பங்களாவின் வரண்டாவில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த சாமுவேலின் செவிகளிலும் அவரது நண்பர் செவிகளிலும் விழவே இருவரது பேச்சும் சாதிகள் பற்றித் திரும்பியது.
“சுந்தர்! இந்த சாதி பற்றி நீ என்ன நினைக்கிற!” என சாமுவேல் கேட்க,
“நீ போன வாரத்துக்கு முந்தின வாரம் “சர்ச்“க்கு வரலையா? இந்த ஜாதி பற்றித்தானே என் பிரசங்கமே இருந்தது?” கேள்விக் குறியோடு சாமுவேலைப் பார்த்தார்.
சுந்தர்ராஜ் ஆலயக் கமிட்டிலே பொருளாளராகப் பணியாற்றி வந்தார். ஊழிய வாஞ்சை மிக்க அவர் அவ்வப்போது ஆலயத்தில் செய்தியளித்தும் வந்தார்.
“நான் பிஸினஸ் விஷயமாக பெங்களுர் போயிட்டேம்பா! நானும் உன் பிரசங்கத்தைக் கேட்கணும்னு தான் நினைக்கிறேன். ஒரு நாளும் உன் அறுவையில் அகப்படலையே!” சிரித்தார் சாமுவேல்
“என் பிரசங்கத்தை அறுவைன்னா சொல்ற? ஒரு தடவை கேட்டுப்பார். அசந்திடுவ கொர்நேலியு வீட்டுக்குப் பேதுரு சென்ற நிகழ்ச்சியை வைத்து பிரசங்கம் பண்ணினேன். கொர்நேலியு வீட்டுக்குப் பேதுருவை போகச் சொல்வதற்கு முன் தேவன் தரிசனம் தருகிறார்.
“வானத்திலிருந்து நான்கு முனைகளும் கட்டப்பட்ட கூடு பேதுருவிற்கு முன் இறக்கி விடப்பட்டிருக்கிறதாகவும், அதில் பூமியிலுள்ள சகலவிதமான பறவைகளும், விலங்குகளும். ஊரும் பிராணிகளும் இருக்கிறதாகவும் கண்டார். அதோடு அடித்துப் புசி என்ற சத்தத்தையும் கேட்டார்” என இடைமறித்தார் சாமுவேல்.
“பேதுரு தீட்டும் அசுத்தமுமானதை தான் ஒருக்காலும் புசித்ததில்லை என்று மறுமொழி சொன்னபோது தேவன் சுத்தமாக்கிவவைகளை நீ தீட்டாக எண்ணாதே” என்ற சத்தம் உண்டானது (அப்.10-ல் கூறப்பட்டிருக்கிறது.) இப்படி 3முறை நடந்தது. 28 - ஆம் வசனத்தில் இந்த தரிசனத்திற்கான அர்த்தத்தைப் பேதுருவே கூறுகிறார். அந்தக் காலத்தில் யூதர்கள் அந்நிய ஜாதியாரோடே கலந்து போக்குவரவாய் இருக்க மாட்டார்கள். எனவே தான் எந்த மனுஷனும் தீட்டுள்ளவன் அல்ல! அசுத்தன் அல்ல! என்பதை பேதுருவுக்குத் தெரிவிக்க. தேவன் தரிசனத்தின் மூலம் பேசுகிறார் பேதுரு. கொர்நேலியு வீட்டுக்குப் போய் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருக்கும் போதே பரிசுத்த ஆவியானவர் கேட்டுக் கொண்டிருந்தவா்கள் மீது இறங்குவதைக் காண்கிறோம்” என்று சுந்தாராஜ் குட்டிப் பிரசங்கமே செய்ய அரம்பித்து விட்டார்.
“இதைச் சொல்லி, கடவுள் பார்வையில் யூதர்கள் மேலானவர்கள் புறஜாதியார் கீழானவர் என்ற பேதம் இல்லை என்று சொன்னாயாக்கும்” என்று சாமுவேல் பேச்சை முடிக்க முற்பட்டபோது,
“அதோடு விட்டேனா? கிரேக்கத் தகப்பனுக்கும், யூத தாய்க்கும் பிறந்த (அப்.16:1,2). தீமோத்தேயு ஞானமுள்ளவனும், எபேசுவின் கண்காணியாகவும் திகழ்ந்தான் என்பதை எடுத்துச் சொல்லி ஜாதி இல்லை என்பதை மட்டுமல்ல, கலப்புத் திருமணத்தின் மேன்மையைக் கூட எப்படி எடுத்துச் சொன்னேன்.... தெரியுமா?” தன் காலரை தூக்கி விட்டு கொண்டார் சுந்தர்ராஜ்.
“சுந்தர் என் ஆரம்பப்பள்ளி வாழ்க்கையிலே எனக்கு மேரின்னு ஒரு டீச்சர் பாடம் சொல்லித் தந்தாங்க. வெறும் புத்தக அறிவை மட்டும் அவங்க எனக்குத் தரலை கடவுள் பக்தியையும், நற்பண்புகளையும் என்னுள் வளர்த்தார்கள். அதோடு பின் தங்கிய சமுதாயச் சூழலிலிருந்து பள்ளிக்கு வந்த என் போன்றோர் மீது தனிக்கவனம் வைத்து “மனிதர்களிடையே சாதி வேற்றுமை கிடையாது”, “நற்பழக்கவழக்கங்களும், சுத்தமும் உடையவர்களே மேலோர். முயன்று படித்தால் முன்னுக்கு வரலாம். “சமுதாயத்தில் உயர்ந்து விளங்கலாம் என்பதை எங்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிய வைத்தார்கள். அவர்களிட்ட வித்தால் நான் படித்தேன் பட்டம் பெற்றேன். பதவியையும் அடைந்தேன் என்றால் அது பொய்யில்லை சுந்தர்!” அவருடைய விழிகள் நன்றியால் நிறைந்திருந்தன.
சதீஸ் அருகில் அமர்ந்து அவனுடைய புத்தகங்களுக்கும், நோட்டுகளுக்கும் அட்டைபோட்டுக் கொண்டிருந்த, சாமுவேல் கம்பெனியில் பியூனாகப் பணியாற்றும் டேவிட்டின் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.
சாமுவேல், சுந்தர்ராஜ் இருவரும் இந்த சமுதாய நோக்குப்படி இருவேறு இனத்தைச் சேர்ந்தவராயிருப்பினும் அன்போடு பழகி வந்ததை அறிந்து ஆரம்பத்திலேயே ஆனந்தமடைந்த அவனின் உள்ளம் இருவரது நெஞ்சிலும் சாதியே இல்லை என்ற கருத்து ஆழப்பதிந்திருப்பதை எண்ணி, எண்ணி உளம் பூரித்தான். இப்படிப்பட்டவர்கள் இச்சமுதாயத்தில் நிறையப்பேர் இருந்தால்... மோட்சமே இங்குதானே அவன் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது.
டேவிட் தனக்குரிய புதிய யூனி..பாமில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். இன்று நேர்முகத் தேர்வு! கம்பெனிக்கு புதிய நபாகளை பணிக்கு அமர்த்தவேண்டும். சீரான உடையில், சிறப்பான கல்வித்தகுதிகளுடன் ஏங்கிய உள்ளமும், எதிர்பார்க்கும் விழிகளுமாக அவ்வலுவலகம் முன் பலதரப்பட்ட பட்டதாரி இளைஞர்கள் குழுமியிருந்தனர்.
நேர்முகத் தேர்வு முடிந்தது. ஒரு வாரம் உருண்டோடியது. ஹெட் கிளார்க் பரந்தாமன் டைப்பிஸ்ட் ரங்கராஜனிடம் புலம்பிக்கொண்டிந்தார்.
“நம்ம கம்பெனி மானேஜர் வேலையைப் பார்த்தாயா? புதிய நபர்கள் 10ல் 8பேர் அவர் காஸ்ட் (சாதி) பார்த்தாயா? யாரும் அவர்மீது பழி சொல்லக்கூடாது என்பதற்காக இரண்டே பேர்தாம்ப்பா அடுத்தவங்க!”
“சார் கவர்மெண்ட் அவங்களுக்குத் தானே சலுகை காட்டுது! அதன்படி எடுத்திருப்பார்!” சமாதானம் சொன்னார்.
“ரங்கா! பாதிக்குப் பாதியாவது கல்வித்தகுதிக்கு இடம் கொடுத்திருக்கலாமே. உன்னதமான மதிப்பெண்களுடன் வந்திருந்தவர்கள் எத்தனைபேர் தெரியுமா? இவர் நியாயத்துக்குப் புறம்பா நடந்திருக்கிறார் காரணம்!
“இவர் உள்ளத்தின் இனப்பற்று இருக்கலாம், சார்!”
“ இனப்பற்று இல்லப்பா! இனவெறி. தன்னினமெல்லாம் முன்னேறிவிட வேண்டும் என்ற வெறியே இருக்கிறது!”
இதைக் கேட்டுக்கொண்டிருந்த டேவிட், அன்றொரு நாள் சாமுவேல் தன்னில்லத்தில் பேசிய வார்த்தைகளை நினைவுப்படுத்தி பார்த்தான். அது பொய்யோ? வேதனை மேகம் அவன் இதயவானில் மெல்லச் சூழ்ந்தது. இன்று மாலை சுந்தர்ராஜ் அவர்கள் இல்லத்திற்குச் செல்ல வேண்டும். அதுவும் தோல்வியாகி விடுமோ?
“சார்!” டேவிட்டின் அழைப்பைக் கேட்டு வெளியே வந்த சுந்தர்ராஜ், வாப்பா! டேவிட் வா! சாமுவேல் வரச் சொன்னாரா?” உற்சாகமா வரவேற்றார்.
“இல்லை சார்! நான்தான் உங்களைப் பார்க்க வந்தேன்” மெதுவாகச் சொன்னான். வா! உட்கார் என்ன விஷயம்?”
"சார்! எனக்கு ஒரு சித்தப்பா இருக்காங்க சார்! அவங்க என்ன மாதிரியில்லை! நல்லசவதி படைத்தவர்கள் சார், அவங்க பையன் டாக்டருக்கு முடிச்சிட்டு சொந்தமா பெரிய ஆஸ்பத்திரி வைச்சிருக்கார் சார்! பையன் வாட்டசாட்டமா இருப்பான். நல்ல நிறம்! பக்தியுள்ள பையன் சார்! திருமணத்திற்கு பெண் பார்க்கிறாங்க சார்...! தயங்கியபடி நிறுத்தினான்.
“ஓ! அப்படியா விஷயம்? சரி! யாராவது பெண் வீட்டுக்காரங்க கேட்டா சொல்றேன்! சரி! அப்ப நீ போயிட்டு வர்றையா?”
“சார் நம்ம வீட்டில் கூட நம்ம கீதாம்மாவுக்கு வரன் பார்க்கிறதா சொன்னாங்க. அது தான் உங்கிட்ட... நேரடியா...” அவன் வார்த்தையை முடிப்பதற்குள் புலியென சீறினார்.
“ஏண்டா? உனக்கு எவ்வளவு துணிச்சலிருந்தா.. என் வீட்டுப் படியேறி வந்து பொண்ணு கேட்ப?... தரங்கெட்ட பயலே! உன்னை உள்ள விட்டதே தப்பு. நம்ம வீடு... நம்ம கீதாம்மா.. ராஸ்கல்! ஓடுடா இங்க இருந்து கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிடுவேன்.” அவர் காட்டுக் கத்து கத்த, தலை தப்பியது தப்பிரான் புண்ணியம் என டேவிட் அவர் வீட்டை விட்டு வெளியே ஒடினான்.
அன்று சாமுவேலின் இல்லத்தின் அவர் ஆற்றிய அருளுரை அவன் இதயத்தில் வெண்கல மணியோசை போல ஒலித்தது.
இவர்களைப் பார்த்துதான் எம்பெருமான் இயேசு “மாயக்காரர்” என்று சொன்னாரோ? என நினைத்தான். ஏமாற்றத்தில் அவன் இதழ்கள் இசைத்தன.
சாதிகள் உண்டடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் லாபம்.
இந்தக் கதை நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.