தேவ சாயல்

ஒரு அறிஞரைக் கௌரவிப்பதற்காக அரசவையில் வைத்து ஒரு ராஜா, ஒரு பை நிறைய பொற்காசுகளைக் கொடுத்தார். அப்படி ராஜா கொடுக்கும் போது, ஒரு நாணயம் அந்தப் பையிலிருந்து விழுந்து ராஜாவின் சிம்மாசனத்தின் கீழ் உருண்டது. அந்த அறிஞர் உடனே குனிந்து தரையில் ஊர்ந்து சென்று நாணயத்தை எடுத்தார். அந்த சூழ்நிலையைத் தர்மசங்கடமாக உணர்ந்த அரசன், “அடடா, எங்கள் விருந்தினரான நீங்கள் இதைச் செய்திருக்க வேண்டியதில்லையே. என் வேலையாட்களே அதை எடுத்திருப்பார்களே", என்றார். அதற்கு அறிஞர்; “ஆம், உண்மைதான் உமது வேலையாள் மீட்பது சாத்தியமே. ஆனால் நாணயத்தின் மீது எவருடைய காலாவது பட்டுவிட்டால், உங்கள் உருவம் மிதிபடுமே. உங்கள் உருவம் உள்ள நாணயம் மிகவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா"; என்றார் அறிஞர். இதனைக் கேட்ட ராஜா உண்மையிலேயே மிகவும் நெகிழ்ந்து போனார்.

தேவன் தன் சாயலில் மனிதர்களைப் சிருஷ்டித்துள்ளார். ஒவ்வொரு நபரும் அந்த உருவத்தின் காரணமாக விலைமதிப்பற்றவர்கள்.

1) தொலைந்த நாணயம்:
ராஜாவின் சிம்மாசனத்தின் கீழ் நாணயம் தொலைந்து போனது, அது மீட்கப்பட்டது. தொலைந்த நாணயத்தின் உவமையில், அதை தொலைத்த ஸ்திரீ நாணயத்தைத் தேடிச் சென்றாள் (லூக்கா 15:8-10). அது போல தான், மனிதர்களும் காணாமல் போன காசுகளைப் போன்றவர்கள். அந்த ஸ்திரீ வெள்ளிக்காசைத் தொலைத்தவுடன் வீட்டில் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை ஜாக்கிரதையாய் இருந்தாள். சிலுவை மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் மனிதகுலத்தை மீட்டெடுக்க, தேவன் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகின் ஒளியாக அனுப்பினார்.

2) கடைசி நாணயம்:
அனைத்து நாணயங்களிலும் அரசரின் உருவம் இருக்கும். எல்லா மனிதர்களுமே அவருடைய சாயலில் படைக்கப்பட்டவர்கள் தான். தேவன் ஒவ்வொரு நபரையும் நேசிக்கிறார் மற்றும் அவர்கள் மனந்திரும்பி இரட்சிப்பை பெற விரும்புகிறார். ஒவ்வொரு சபையும் சுவிசேஷம் சென்றடையாத அல்லது நற்செய்தி எட்டாத மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டும். சுவிசேஷம் உலகின் எந்த தொலைதூர மூலையிலும், கடைசி நபர் வரை சென்று அடைய வேண்டும் என்ற வாஞ்சை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். 

3) சிறிய நாணயம்:
ஒரு அரசன் நாணயங்களை அச்சிடும்போது, உலோகம், அளவு, வடிவம் மற்றும் எடைக்கு ஏற்ப வெவ்வேறு நாணயங்களுக்கு வெவ்வேறு மதிப்புகள் இருக்கும். இருப்பினும், மிகச்சிறிய மதிப்புள்ள நாணயத்தில் கூட அரசரின் உருவம் இருக்கும். அதேவிதமாக, மனிதர்களில் சிறியவர்கள் எளியவர்கள் என யாராக இருந்தாலும் தேவனின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள். பசி மற்றும் தாகத்தில் உள்ளவர்கள், அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது அந்நியர்கள் (புலம்பெயர்ந்தோர், அகதிகள், நாடு கடத்தப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள்) அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அல்லது சிறையில் அடைக்கப்பட்டவர்கள்; என அனைவரும் எளியவர்கள் அல்லது சிறியவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் (மத்தேயு 25:40,45). 

நான் அனைவரையும் கண்ணியமாக நடத்துகிறேனா, அனைவருக்கும் சேவை (ஊழியம்) செய்கிறேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download