இலட்சிய தீபம்‌ சுடர்‌ விட்டது! ( நிறைவு)

தொடர் - 25 

நற்செய்திக் கூட்டத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பிய துரைராஜ், வசந்தியின் செவிகளில் துரைராஜின் தம்பி தனராஜின் கோப வார்த்தைகள் விழுந்தன. வீட்டினுள் நுழையும் முன்,

“அப்பா! நான் ஒண்ணும் இளிச்சவாயன் இல்லை! ஒருநாள், இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. பெரும்பாலும் “ஊழியம் ஊழியம்” என்று அண்ணனும் அண்ணியும் ஊர் சுற்றப் போய் விடுகிறார்கள். மூன்று குடும்பத்திற்கும் சேர்த்து உழைக்க நான் என்ன மாடா? மனிதனா? பேசாமல் என் பங்கைப் பிரித்துக் கொடுத்து விடுங்கள்” மகனின் வார்த்தைகள் அக்கினி அம்புகளாக தந்தையின் செவிகளில் பாய்ந்தது. அவர் செவிகளில் மட்டுமா? துரைராஜூம் வசந்தியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவர்கள் நெஞ்சில் ஈட்டியாக ஊடுருவியது. “தன் தம்பியா? இப்படிப் பேசுகிறான்? அண்ணா... அண்ணா என்று உயிரையே விடுவானே!” சிந்தனைகள் சிதறின.

“தனம்... தனம்! என்னப்பா சொல்ற” பதறினார்.

“என் முடிவு அதுதான், நீங்கள் பிரித்துத் தராவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் தனியாகப் போய்விடுகிறோம். பாடுபட்டு பிழைத்துக் கொள்கிறோம்.”

துரைராஜூம் வசந்தியும் அமைதியாக வீட்டினுள் நுழைந்தனர். ஒரு கணம் தனராஜ் திகைத்தான். “தம்பி அவனருகே சென்று அவனது கரங்களைப் பற்றிய துரை.

“உனக்கு இனிமேல் மூன்று வீடுகளுக்கு உழைக்க வேண்டி இருக்காதுப்பா. நானும் வசந்தியும் மிஷனெரிகளாக ஜம்மு காஷ்மீர் செல்ல ஒப்புக்கொடுத்துவிட்டோம். நாங்கள் போய்விடுவோம். நீ உன் குடும்பத்திற்கு உழைத்தால் போதுமானது. அம்மா, அப்பா தங்கையை உன் குடும்பமாகப் பாவித்துக்கொள். என் கடமையை உன் மீது சுமத்திச் செல்கிறேன். தயவுசெய்து எனக்காக நிறைவேற்று. உனக்குத்தான் எல்லாம் என்னுடைய சொத்து இயேசு மாத்திரமே!” தனராஜ் பதிலொன்றும் கூறவில்லை. தன் கரங்களை விடுவித்துக்கொண்டு தன் அறையினுள் நுழைந்துவிட்டான்.

தனராஜ் போட்ட சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து வந்த ஜான்ஸியும், (தனராஜின் மனைவி) செண்பகத்தம்மாவும் கூட அதிர்ச்சியடைந்தனர். 

துரைராஜின் தந்தைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. “ என்னப்பா துரை... என்ன சொல்ற? தம்பி ஏதோ... யார் கொடுத்த போதனையோ? உளர்நான். நீ பொறுமையா இருப்பா! நாளைக்கு சரியாயிடுவான்”.

“ஆமாப்பா துரை, அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்திடாதே. எங்களை விட்டுட்டுப் போகாதப்பா!” தாயின் கண்களில் நீர் மல்கியது.

ஜான்ஸியின் கண்களும் கண்ணீரில் நீந்தின. “எனக்கு ஒண்ணுமே... தெரியாதே” அவள் வார்த்தைகள் தடுமாறின. ஜான்ஸி பக்தியுள்ள பெண் திருமணத்திற்குப் பின் எந்த ஒரு மனத்தாங்கலும் யாருக்கும் அவளால் வந்ததில்லை.

“ஜான்ஸி! உன்னைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா என்ன? நீ கவலைப்படாதே! யாரோ அவன் மனதைக் கலக்கி இருக்கிறார்கள். நீ போய் அவனை கவனித்து சாப்பிட வை. கர்த்தர் எல்லாவற்றையும் நன்மையாகவே முடிப்பார்” துரைராஜ் உறுதியாகச் சொன்னான். ஜான்ஸி தலையை ஆட்டியபடி நகர்ந்தாள்.

“அம்மா இங்க வாங்க.. இப்டி உட்காருங்க” என்றவன் பேச ஆரம்பித்தான். “அப்பா! தம்பியின் கோபத்தைத் தெரிந்து நான் இந்த முடிவுக்கு வந்தேன் என நினைக்காதீங்க. நேற்று மிஷனெரி கூட்டத்தில் மிஷனெரிக்கு அழைப்புக் கொடுத்த போது, என்னால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. ஏதோ ஒரு உந்துதல்! என்னுள்ளத்தில் தெளிவாக எழுந்தது ஒரு குரல்! “மகனே! எனக்காக நீ போகமாட்டாயா?” நான் எழுந்து என்னை ஒப்புக்கொடுக்கும் மட்டும் அந்தக் குரல் நிற்கவில்லை! கர்த்தர் சத்தம் என உணர்ந்தேன். அவர் சித்தத்திற்கு என்னை அர்ப்பணித்தேன் அப்பா! கிருபையின் காலம் முடியம் முன் நாம் செயல்படவேண்டும். வட இந்தியாவில் தேவை அதிகம் அப்பா!”

“இங்கேயே இயேசுவைப் பற்றி அறியாத மக்கள் அதிகம் இருக்காங்களே துரை! இங்கேயே ஊழியம் செய்யப்பா! எங்களை விட்டுவிட்டுப் போக நினைக்காதேப்பா!” தந்தையின் வார்த்தைகள் கெஞ்சின.

“அப்பா சொல்றதை கேளு துரை!” அன்னையும் பரிந்துரைத்தாள்.

“அப்பா! அன்றைக்கு சீஷர்கள் எருசலேமிலேயே இருந்திருந்தால் சுவிசேஷம் பரவியிருக்காதே! தோமா இந்தியாவிற்கு வராவிட்டால் நாம் எப்படி இயேசுவை அறிந்திருக்க முடியும்?நான் நாடு கடந்து கூடபோகவில்லையேப்பா! நம் நாட்டிற்குள்ளே ஒரு பகுதிக்குத் தானே போகிறேன்” நிதானமாக நிறுத்திப் பேசினார்.

தந்தையிடமிருந்து ஒரு பதிலும் இல்லை.

“அப்பா! உங்க மூத்தமகனை தேவபணிக்கு அர்ப்பணித்தீகள் என்ற பெருமை உங்களைச் சேருமப்பா” துரைராஜின் வார்த்தைகள் அவர் மூளையைத் தட்டிவிட்டது. நிமிர்ந்து அவனைத் தாக்கமாகப் பார்த்தார். பழைய நினைவுகள் உள்ளத்தில் எழுந்தன. மூத்தபிள்ளை கோவில் காரியங்களில் ஈடுபட வேண்டும் என்பது தானே அவர் குல வழக்கம், அவர் விருப்பம். அப்படியானால் இப்பொழுது இயேசு அவர் தெய்வம் என்றால் தேவ பணி செய்ய வேண்டியது அவருடைய முதற்பிள்ளைதானே! அவர் உள்ளம் தெளிந்தது.

“துரை! கடவுள் விருப்பம் அதுவானால் நான் கீழ்ப்படிகிறேனப்பா!” உறுதியாகச் சொன்னார். எண்ண அலைகள் எழுந்து மோத கனத்த உள்ளங்களுடன் அன்றைய இரவைக் கடத்தினர்.

மறுநாளே தனராஜ் துரையிடம் வந்தான் “அண்ணா! என்னை மன்னித்துவிடுங்கள். முட்டாள் தனமாக சிலர் பேச்சை கேட்டுக்கொண்டு பேசிவிட்டேன். தயவு செய்து எங்கும் போகாதீர்கள். நீங்க இங்க இருந்து கொண்டே தினம் ஊழியத்திற்குப் போங்க! கெஞ்சினான். கண்ணீர் உகுத்தான். துரை அவனைத் தேற்றினான். தனராஜின் கோப வார்த்தைகள் காரணமாக தான் போகவில்லை என்றும் தேவனுடைய திட்ட அழைப்பு என்பதையும் எடுத்துரைத்தான். ஆனாலும் தனராஜைத் தேற்றுவது. பெரிய கஷ்டமாக இருந்தது.

ஜெபசிங் நல்ல மேய்ப்பர் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று இரு. திங்கள் ஓடிவிட்டது. தனது இலட்சியக் கனவுகளை எல்லாம் தனது பள்ளியில் செயல்படுத்த ஆரம்பித்தார். “நல்ல மேய்ப்பர் பள்ளி அனைவரது பாராட்டையும் பெறக்கூடிய ஒரு சிறந்த கிறிஸ்தவப் பள்ளியாகத் திகழ்ந்தது. கிறிஸ்தவர் மட்டுமின்றி ஏனையோரும் தம் பிள்ளைகளை நல்ல மேய்ப்பர் பள்ளியில் சேர்க்கவே விழைந்தனர். துரையும், வசந்தியும் மிஷனரிகளாகச் செல்லப்போகிறார்கள் என்ற செய்தி எட்டியது. சாந்தி திடுக்கிட்டாள். ஜெபாவின் உள்ளம் பொங்கியது. தன் மாணவன், தம்பி மிஷனெரியாகச் செல்கிறான். கரைகாண கலமென கடவுளை அறியாமல் கலங்கிடும் உள்ளங்களுக்கு கலங்கரை விளக்கமாக தன்னையே தருகிறான் என்ற செய்தி தேனாக, தெளிதேனாக, திகட்டா அமுதாகத் தித்தித்தது.

மதுரை புகைவண்டி நிலையத்தில் டேனியல் குடும்பம், இராமசாமித்தேவர் குடும்பம், சுவிசேஷ நண்பர்கள் குடும்பங்கள் என பலர் சூழ்ந்து விடை கொடுக்க துரைராஜூம், வசந்தியும் விடைபெற்று புகைவண்டியில் ஏறினர்.

மணி ஒலிக்க, புகைவண்டி. நகர்ந்தது. புகைவண்டி கண்ணைவிட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்த அனைவரும் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினர். தன்னருகே நடந்து வரும் கணவனை நிமிர்ந்து பார்த்தாள் சாந்தி. அவள் விழிகள் கண்ணீரில் நீந்தின.

“வசந்தி தைரியசாலி! துணிந்து போகிறாள்” என்றாள். “தைரியத்தைத் தருவது தேவனல்லவா?” பதிலுரைத்தார் ஜெபா.
“மிஷனெரிகளாகப் போவதுதான் சிறந்த ஊழியம் இல்லையா? 

“மிஷனெரி ஊழியம் சிறந்த ஊழியம் தான். ஆனால் ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு. காத்தர் ஒருவரே. 1கொரிந்தியர் 12 ஆம் அதிகாரத்தை திரும்பத் திரும்ப வாசி .ஒருவருக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும்... வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும் .... வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும் அளிக்கப்படுகிறது. அனைத்தையும் நடப்பிக்கிறவர் தேவனே! அவனவனுக்குத் தேவன் தமது சித்தத்தின்படி பகிர்ந்தளிக்கிறார். ஊழியங்கள் வேறுபட்டாலும் அதில் நமது இலக்கு இயேசுவை இவ்வுலகிற்கு அறிவிப்பதாக இருக்க வேண்டும். நம் வாழ்வு திறக்கப்பட்ட புத்தகம். அதைப் பலர் படிக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு கிறிஸ்துவை வாழ்வில் பிரதிபலித்துக் காட்டுபவர்களாக வாழ வேண்டும். இறை மகன் இயேசு எதற்கு நம்மை அழைக்கிறாரோ அதில் உண்மையும் உத்தமுமாக வாழ வேண்டும் என்றார் ஜெபா. :

“இலட்சிய வாழ்வு என்றால் போராட்டமான வாழ்வு தான் போலும்” சாந்தியின் சொற்களில் விரக்தியும் எட்டிப் பார்த்தது.

வீசுகின்ற புயலினிடை ஏற்றி வைக்கப்பட்ட தீபம் இலட்சிய தீபம். அ..து அணையாது! அழகாக சுடர் விடும்!”

நன்றி!

 இந்த கதை  இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Latchiya Deepam - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download