தொடர் - 7
சகோதரி சுசீலாவின் இலட்சியக்கனவு அவர்கள் குடியிருந்த பகுதியாகிய குமரன் நகர் குமாரன் நகராக மாற வேண்டுமென்பதே! அங்கு ஆலயம் கட்ட வேண்டும். ஆலயமணி ஓசை கேட்க வேண்டும் என்பது அவர்களது அளவு கடந்த ஆசை. குமரன் நகர் பகுதியில் ஆலயம் கட்ட வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு ஏன் ஏற்பட்டது? அயனாவரத்தில் ஏகப்பட்ட ஆலயங்கள், பெரிய பெரிய ஆலயங்கள் இருக்கின்றன. அதேபோல் அண்ணா நகரிலும் நிறைய ஆலயங்கள் இருக்கின்றன. ஆனால் குமரன் நகரில்... ஆலயமே இல்லை.
“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்'' என முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். ஆலயமில்லா இடமெல்லாம் ஆலயம் எழும்பிட வேண்டும். என்பதே சகோதரியின் கனவு.
“நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள்'” என திருமறை கூறுவதற்கு ஏற்ப இயேசுவை இதய தெய்வமாக ஏற்ற எண்ணற்ற உயிருள்ள ஆலயங்கள் எழும்ப வேண்டும். அவர்கள் “சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள்.'” என்று வேதம் விளம்புவதற்கு ஏற்றபடி கர்த்தரை கூடி ஆராதிக்க ஆலயம் கட்டிட வேண்டும் என சகோதரி எண்ணியதில் வியப்பொன்றுமில்லை.
சபை வளர்ச்சி :
குமரன் நகர் ஊழியத்தை பேட்ரிக் அவர்களையும், சுசீலா பேட்ரிக்கையும் தன் பெற்றோராகவே கருதி அன்பு செலுத்தும் சகோதரர் தனபாலன் அவர்கள் பொறுப்பேற்றார்கள். ஊழியத்திற்கு அனுப்பாமல் அலுவலகத்திலேயே வைத்திருந்த காரணத்தால் இயக்கத்தை விட்டே வெளியே சென்று, மீண்டும் இயக்கத்திற்குத் திரும்பியவர்கள். குமரன் நகர் ஊழியத்தை அதிக உற்சாகமாகச் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களது இளமையும், ஆர்வமும், அசையாத விசுவாசமும், இவற்றிற்கெல்லாம் மேலாக சகோதரி சுசீலாவின் ஆழமான விடாப்பிடியான வேண்டுதலும் அடித்தளமாக அமைய ஊழியம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. தேவகிருபை அவர்களோடிருந்தது. 1./.5. ல் வேலை பார்க்கும் வசதிமிக்கக் குடியிருப்புதான் குமரன் நகர். ஏழைமக்களின் குடியிருப்பாகிய நகரையும் அருகில் கொண்டுள்ளது. தேவராஜ்ஜியத்திற்குள் சகோதரி பிரவேசிக்கும் முன்பே,
குமரன் நகரில் மூன்று இடங்களில் ஆராதனை நடத்த ஆரம்பித்தார் சகோதரர் தனபால். ஒரு இடத்தில் ஆண்களும், பெண்களும் கூடி வந்தனர். மற்றொரு இடத்தில் பெண்கள் கூடுகை மட்டும் நடந்தது. பிறிதொரு இடத்தில் இளைஞர் மட்டும் கூடிவந்து ஆராதித்தனர். மன மகிழ்ச்சியின் நாளாகிய ஓய்வு நாளிலேயே இந்த மூன்று இடங்களிலும் மூன்று ஆராதனைகளை நடத்தினார் சகோதரர் தனபாலன்.
தேடுவோர் முகாம் ஒன்று ஏற்பாடு செய்தார். தேடுவோர் முகாம் நடத்த சென்னையிலே ஒரு சுற்றுலாத்தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு அழைத்துச் சென்று சுவிசேஷம் அறிவித்து. அவர்களை அர்ப்பணிப்புக்குள்ளாக வழி நடத்துவது. நுழைவுக் கட்டணமும், மதிய உணவும் பங்கு பெறுவோர் கொண்டு வரவேண்டும். பஸ்கட்டணம் மட்டும் சபை பொறுப்பெடுக்கும். அப்பொழுது குறைந்த செலவில் நிறைய ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய இயலும். பங்கு பெற்றோருக்கும் சுற்றுலாத்தளத்தைப் பார்வையிட்டது போலவும் அமையும், பரமன் இயேசுவிற்குத் தம் வாழ்வை அர்ப்பணிக்கவும் முடியும்.
தேடுவோர் முகாமை ஒழுங்கு பண்ணிய ஊழியர் யாரெல்லாம் இதில் பங்குபெற வேண்டுமென நினைத்தாரோ அவர்கள் பெயரையெல்லாம் எழுதி, சகோதரி சுசீலாவிடம் கொடுத்தார். இப்படிப்பட்ட கூடுகைக்கு ஒரு சிலர் தாமாகவே வர விரும்புவர். சிலருக்கு வர விருப்பம் இருந்தும், வர இயலாத சூழ்நிலை இருக்கும். இன்னும் ஒருசிலர் வர விரும்புவதில்லை. ஆனால் இவர்கள் அனைவருமே தேவனுக்கு வேண்டும் இல்லையா? எனவே இரண்டாம், மூன்றாம் பிரிவினரின் பெயர்கள் சகோதரி சுசீலாவிடம் கொடுக்கப்பட்டன. அச்சமயம் சகோதரி சுகவீனமாய் இருந்த நேரம்! சகோதரி அவர்கள் சரீரம் பாதிக்கப்பட்டிருந்ததே ஒழிய அவர்கள் ஆத்துமா அதிக உற்சாகமாய் இருந்தது. சரீர பெலன் குறையக் குறைய ஜெப ஊழியமும் வாஞ்சையும் அதிக அதிகமாக விருத்தியடைந்தது. தேடுவோர் முகாம் நடந்தது. யாருடைய பெயர்கள் எல்லாம் சகோதரியிடம் கொடுக்கப்பட்டிருந்தனவோ? அவர்கள் எல்லோரும் தேடுவோர் முகாமில் பங்கு பெற்றனர். இந்த நபர்கள் எல்லாம் பங்கு பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த அரிதான காரியத்தை முடித்தது சகோதரியின் ஜெபமே! தேடுவோர் முகாம் சிறப்பாக நடைபெற்றது. ஊழியத்தில் கனிகள் கிடைத்தன.
இம்மானுவேல் மெதடிஸ்ட் சபை, வெப்பேரி, சென்னை. ஆலயத்தில் முதல் திருமுழுக்கு ஆராதனை நடைபெற்றது. 10 பேர் திருமுழுக்குப் பெற்றனர் சகோதரிக்கு அறுவை சிகிச்சை முடிந்து வந்திருந்த சமயம் அது! வெளியே வரக்கூடாத நேரம். ஆனால் சகோதரி, திருமுழுக்கு ஆராதனையில் பங்கு பெற்றார். சரீர பெலவீனத்தைப் பொருட்படுத்தவில்லை. அவர்களுடைய ஜெப ஊழியத்தின் முதல் அறுவடையைக் காண வாஞ்சித்தார்:
இன்று குமரன் நகர் சபையில் 75 பேர் திருமுழுக்குப் பெற்றுள்ளனர். சகோதரி அதிகமாகப் பாதிக்கப்பட்ட பொழுது குமரன்நகர் வீட்டைக் காலி செய்துவிட்டு, விருந்தினர் இல்லத்தில் அவர்களைத் தங்க வைத்துப் பராமரித்தால் நன்றாக இருக்கும். அமைதியான அந்த இடம் சகோதரியின் உடல் நலத்திற்கு நல்லது எனக்கருதி சகோதரியை அழைத்த போது கண்டிப்பாக வர மறுத்துவிட்டார்கள். 'இந்தக் குமரன் நகர் மக்கள், குமாரன் இயேசுவைக் கண்டு கொள்ளும் மட்டும் இதே குமாரன் நகர் பகுதியில் இருந்து அவர்களுக்காக ஜெபிப்பேன்.'' எனக் கூறிவிட்டார்கள். அவர்களது வைராக்கியத்தைக் கண்டபின் அவரை வற்புறுத்த யாராலும் முடியவில்லை.
சகோதரி ஆண்டவர் சமூகத்திற்குச் சென்றபின் அவர்கள் குடியிருந்த குமரன் நகர் வீடு, அனைவரும் கூடி ஆராதிக்கும் இடமாக அமைந்தது. மூன்று இடங்களில் கூடி வந்தவர்கள். மொத்தமாக இந்த வீட்டில் பங்கு பெற்றனர்.
சகோதரியின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடம் ஆலயத்தின் புனித அகமாக (ஆல்டராக) அமைந்தது. இது ஊழியர் தனபாலன் அவர்களோ, மற்றவர்களோ இப்படி முடிவெடுக்கவில்லை. எதேச்சையாக அப்படி அமைந்திருந்தது. இரண்டு, மூன்று வாரங்கள் கடந்தபின் ஊழியர் மனதில் '“ஆஹா... இன்று புனித அகமாக' உள்ள இந்த இடம் சகோதரியின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடமல்லவா?'' என எண்ணினார். குமரன் நகருக்காக கோதுமை மணியாக மண்ணில் விழுந்த சகோதரியின் சரீரம் வைக்கப்பட்ட இடம் (ஆல்டராக) புனித அகமாக அமைந்தது ஆச்சரியம் அல்லவே!
தேவ சித்தமும் அதுதான் போலும்.
சகோதரர் பேட்ரிக் அவர்களின் மேஜை, நாற்காலி போன்றவை ஆலயத்தில் பயன்படுத்தப் படுகிறது. சகோதரி சுசீலாவின் வேதப்புத்தகம் ஆலயத்தில் உள்ளது. சகோதரி அவர்களுடைய மாமியாரின், அதாவது பேட்ரிக் அவர்களின் அம்மாவுடைய பைபிளும் சகோதரர் தனபாலன் அவர்களிடம் உள்ளது.
இதை அவர் கூறும்போது... '“நான் பேட்ரிக் அவர்களின் பிள்ளை. எனவே அவர்களுடைய பிரதான செல்வத்தை தாயின் வேதப்புத்தகத்தையும் அருமை மனைவியின் திருமறையையும் அவர்களுடைய பிள்ளையாகிய எனக்குக் கொடுத்துள்ளார்கள்'” என மகிழ்ச்சியோடு கூறுகிறார்கள்.
அற்புதங்கள் :
இரத்தப்புற்று சுகமானது : இரத்தப்புற்று நோயால் கணேசன் என்ற சகோதரன் பாதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய நோயை குணப்படுத்தும்படி சகோதரி சுசீலா ஆண்டவர் பாதத்தில் காத்திருந்தார். எப்படி எப்படி ஜெபித்தாரோ? நாமறியோம் தேவனே அறிவார். ஆனால் அவர் ஜெபத்திற்கு நல்லபதில் கிடைத்தது. இரத்தப்புற்று நோயிலிருந்து கணேசன் விடுதலை பெற்றான். பரிபூரண சுகம் பெற்று இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றான். சகோதரியின் ஜெபம் புற்றுநோயிலிருந்து விடுதலை வாங்கித் தந்தது அவனுக்கு. ஆனால் அதே புற்றுநோய் சகோதரியை மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்குக் கொண்டு சென்றது. இது ஏன்? இந்தக் கேள்விக்கு விடை நம் சிற்றறிவுக்கு எட்டாததே!
மரணப்பள்ளத்தாகிலிருந்து விடுதலை :
நரசம்மா என்றொரு அருமையான குமரன் நகர் விசுவாசி. வயிற்றில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்தார்கள். அவர்களுக்கு க்ளுகோஸ், மருந்துகள் ஏற்றப்பட்ட போது ஏதோ சிக்கல் ஏற்பட்டு சரீரமெல்லாம் வீங்கி ஆபத்தான் நிலையை “அடைந்தார்கள். மருத்துவர்கள் முயற்சி அனைத்தும் வீணாகி விடும்போல் ஒரு காலக்கட்டம். ஊழியர் தனபாலனுக்கு உடனே இச்செய்தி அறிவிக்கப்பட்டது. தனபாலன் உள்ளம் உடைந்தார். இந்த நரசம்மா, குமரன் நகரில் முதல் விசுவாசி. அவர்கள் மரணத்தைத் தழுவினால்... ''இவள் அந்த சாமியைக் கும்பிட்டதாலேதானே இப்படி ஆகிவிட்டது'” என அந்த சமுதாயம் பேச ஆரம்பித்து விடும். ஊழியம் மிகவும் தடைபடும்.'” என்பதை உணர்ந்த போது அவர் வேதனை இன்னும் அதிகமானது.
சகோதரி சுசீலாவின் திருமறையை எடுத்து வைத்துக் கொண்டு ஜெபிக்க ஆரம்பித்தார். ஏன்? சகோதரியின் திருமறையை வைத்து ஜெபிக்கும் போது, இந்தக் குமரன் நகர்மீது தீராத தாகம் கொண்ட ஆத்துமாவாகிய அவர்களோடு, ஒருமித்த ஆவியோடு இணைந்து ஜெபிப்பது போன்ற உணர்வு மேற்கொள்வதை அவர் உணர்கிறார்.
உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக் கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால் பரலோகத்திலிருக்கிற என்பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத். 18 : 19) என்று கர்த்தராகிய இயேசு திருவாய் மலர்ந்தருளியுள்ளார் அல்லவா? எனவே பிரச்சனைகள் நெருக்கும்போது, சகோதரியின் திருமறையோடு சேர்ந்து ஜெபிப்பதை ஊழியர் தம் வழக்கமாக்கிக் கொண்டார்.
விளைவு... நரசம்மா! மரண இருளின் பள்ளத்தாக்கினின்று வெளியே வந்தார்கள். ஆம்! இயேசு ஜீவிக்கிறார். தம் அன்புப் பிள்ளைகளின் வேண்டுதலுக்குப் பதில் தருகிறார். தம் பிள்ளைகள் வெட்கப்பட்டுப் போக விடமாட்டார்.
பிசாசின் பிடியினின்று விடுதலை :
குமரன் நகர் விசுவாசி ஜெஸிந்தாள் கோவிந்தம்மாள். ஆரம்பகால விசுவாசி ஞானஸ்நானம் பெற்றவர்கள்தான். பயந்த சுபாவம். ஒருநாள் இவர்கள் வந்து கொண்டிருந்த போது சுழல்காற்று அடித்தது. சுழல் காற்று அடித்தாலே அதைப்பேய் எனக் கருதுவது மக்கள் இயல்பல்லவா? கோவிந்தம்மா மீது சுழல்காற்று சுழன்றுவிடவே அதிகமாகப் பயந்து விட்டார்கள். அவ்வளவுதான் அசுத்த ஆவி ஆட்கொண்டு விட்டது. கோவிந்தம்மா திருமணமானவர்கள் கணவன், பிள்ளைகள் இருக்கிறார்கள். கோவிந்தம்மா ஆண் சட்டையைப் போட்டுக்கொண்டு, தாறுமாறாகப் பேசியபடி வீட்டில் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஊழியரின் மனைவி, கோவிந்தம்மா வீட்டிற்குப் போய் ஜெபித்திருக்கிறார்கள். அவர்கள் வெளியே வரவும் கோவிந்தம்மா கேலி செய்வது போல் அதிகமாகச் சிரித்திருக்கிறார்கள்.
கோவிந்தம்மாவின் கணவர், ஊழியரின் மனைவியிடம் '*எப்படியாவது பாஸ்டர் ஐயாவை வீட்டிற்கு வரச்சொல்லுங்கள். 12 மணியானாலும் பரவாயில்லை. வரச் சொல்லுங்கள்.” என்று வற்புறுத்திக் கூறினார்.
அன்றைய தினம் ஊழியத்தை முடித்துக் கொண்டு ஊழியர் வீடுவந்து சேர்ந்தபொழுது, இரவு மணி 11/2. மனைவி நடந்ததைக் கூறி எப்படியாவது கோவிந்தம்மா வீட்டிற்குச் செல்லும்படி வற்புறுத்திக் கூறினார்கள். தானும் உடன் வருவதாகக் கூறினார்கள். அந்தக் குடும்பத்தார் படும்பாடுகள் இவருடைய உள்ளத்தில் இரக்கததை ஏற்படுத்தியிருந்தது. எப்படியாவது அந்த அம்மாவை பிசாசின் பிடியினின்று மீட்க வேண்டுமென்ற வேகம் இருந்தது.
ஆனால் ஊழியருக்கு கோவிந்தம்மா வீட்டிற்குச் செல்ல மனமில்லை. ஊழியத்தில் அலைந்து வந்திருந்த காரணத்தால் உடல் களைத்திருந்தது! சரீரம் பலவீனமுள்ளதுதானே! எனவே காலையில் போகலாம் என இருந்துவிட்டார்.
தன் குடும்பம் விடியலைக் காண வேண்டுமே என்ற ஆதங்கத்துடன் கோவிந்தம்மாவின் கணவர் ஊழியர் வீட்டிற்கு விடியற்காலையிலேயே வந்துவிட்டார்.
““பாஸ்டர் ஐயா! கட்டாயம் நீங்க வரணும் ஐயா! இராத்திரி தொந்தரவு தாங்க முடியலை! தயவு செஞ்சு சீக்கிரம் வாங்கய்யா!'' கெஞ்சினார்.
ஊழியருக்கு இந்த அனுபவம் எல்லாம் இல்லையா? நல்ல அனுபவம் உண்டு. எத்தனையோ பேய்களை அவர் விரட்டியிருக்கிறார். வீட்டில் புதைத்து வைத்திருக்கும் செப்புத் தகடுகள் போன்ற பொருட்களை எல்லாம் எடுத்து எறிந்திருக்கின்றார். அஞ்சா நெஞ்சன்தான். ஏனென்றால் அவர் தன் நம்பிக்கையைக் கன்மலையாகிய இயேசுவிடம் அல்லவா வைத்திருக்கிறார்.
இவற்றை எல்லாம் நடப்பிப்பவர்: தான் அல்ல! தன்னுள் வாசம் செய்யும் ஆவியானவரே நடப்பித்து வருகிறார் என்பதை நன்கு உணர்ந்திருந்தார்.
ஒரு எடுத்துக்காட்டை அவரே கூறுகிறார்.
“நாகராஜன் என்பவர் அசுத்த ஆவியால் கஷ்டப்பட்ட போது இதே அலுவலக வளாகத்தில் ஜெபித்து, அவரிடமிருந்த தாயத்து போன்றவற்றை நெருப்பில் போட்டு எரித்திருக்கிறேன். அவர் விடுதலை பெற்றபின் பால் நாகராஜனாக மாறி தேவ நாம மகிமைக்கென்று வாழ்ந்து வருகிறார்.
ஆனால் அன்று எனக்குள் ஒரு தயக்கம், அவிசுவாசம். என் மனைவியைப் பார்த்து சிரித்த அசுத்த ஆவி என்னையும் பார்த்து சிரித்து, '“பாஸ்டரய்யா!'' ன்னு கேலி பண்ணிடுமோன்னு பயம். ரிச்சர்டு அண்ணனைக் கூட்டிக் கொண்டு போகலாம் என நினைத்தேன். அப்பொழுது அக்காவின் நினைவு வந்தது.
'பேய்வீடு' என அனைவராலும் அழைக்கப்பட்ட வீட்டில் குடியிருந்த சுசீலா அக்கா, ஜெபித்து, ஜெபித்தே அங்கிருந்த பேயை விரட்டியிருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய ஆவிக்குரிய பிள்ளையாகிய நான் வீணே பயப்படுதல் தவறு என உணர்ந்தேன். அசாத்திய விசுவாசம் என்னுள் வந்தது. புறப்பட்டேன், அவர்கள் வீடு நோக்கி, அக்கா அவர்கள் “என்ன தம்பி நீங்க! இப்படி? போனாத்தானே தெரியும்? நீங்க போங்க தம்பி. உள்ள போங்க... எல்லாம் சரியாகும்!'” என உற்சாகப்படுத்துவது போல் உணர்ந்தேன். என்னை உள்ளே தள்ளி விடுவது போல் இருந்தது. வீட்டினுள் நுழைந்தேன்.
கட்டிலில் ஜெஸியாள் படுத்திருந்தார்கள். கைலியும் ஆண்சட்டையும். அணிந்திருந்தார்கள். பணக்கார வீட்டில் இருக்கிற ஒரு வாலிபப்பையன் போல சென்னை பாஷையில்,
“டேய் மச்சி!'” என்று பேச ஆரம்பித்தாள்.
கையை சொடக்குப் போட்டு, '*எங்க அந்த வேலைக்காரி? அவள கூப்பிடு! எனக்கு முட்டைக் குழம்பு வச்சித் தரச் சொல். என் கட்டில் எங்கே? மெத்தை எங்கே? என் கட்டில் என்ன ஆச்சு?'' என்று பேசினாள்.
அவள் கணவர் '*கோவிந்தம்மா, கோவிந்தம்மா'' என எழுப்பவும்,
““ஹேய்!'' என்று சத்தம் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். என் மனதில் விசுவாசம் குடிகொண்டது. தைரியம் பிறந்தது.
நானும் சொடக்குப் போட்டு '*இங்கே! வா! இப்படி உட்கார்'' என கம்பீரமாகச் சொன்னவுடன், கீழே இறங்கி உட்கார்ந்தாள். நான் பிரமாண்டமான ஜெபம் ஒன்றும் பண்ணவில்லை. மிகச் சாதாரணமான ஜெபம்தான் பண்ணினேன்.
“ஆண்டவரே! இந்த ஸ்தலத்தில் உம்முடைய இராஜாங்கத்தைக் கட்டுவதற்கு, நீர் முன்குறித்து வைத்தது உண்மையானால் இந்த அசுத்த ஆவி பேசாமலே இந்த அம்மாவை விட்டு வெளியேற வேண்டும். அசுத்த ஆவியோடு பேசுவதற்கு நான் வரவில்லை. உம்மோடு பேசத்தான் வந்திருக்கிறேன். நீர் உதவி செய்ய வேண்டும்.'' என்று அவளுடைய நெற்றிப் பொருத்தில் எண்ணெய் வைத்து ஜெபம் பண்ணினேன். உடனே பிசாசு அந்த அம்மாவை விட்டுச் சென்றுவிட்டது.
அவர்கள் சாதாரண நிலைக்கு வந்தார்கள். தன்னைப் பார்த்தவர்கள் “பாஸ்டர் வந்திருக்கிறாரே! நான் சர்ட்டும் கைலியும் போட்டிருக்கிறேனே!' என நினைத்தார்கள் போலும். கூச்சத்துடன் காணப்பட்டார்கள, அதைப்புரிந்து கொண்ட நான், '“என்னம்மா!'' என்றேன். ஸ்தோத்திரம் பாஸ்டர்'' என்றவர்கள் வீட்டிற்குள் சென்று வேறு உடை உடுத்தி வந்தார்கள்.
“ரொம்ப களைப்பா இருக்கு, பாஸ்டர்!'' என்றார்கள். நான், உணவருந்தும்படி கூறிவிட்டு வந்து விட்டேன். பாஸ்டர் தனபாலன் இந்த அற்புதத்தை முகமலர்ச்சியோடே கூறிவிட்டு,“எனக்கு தைரியம் வந்ததற்குக் காரணமே அக்காவின் விசுவாச வார்த்தைகள் நினைவிற்கு வந்ததுதான்'' என்று நன்றிப் பெருக்கோடு கூறுகிறார்.
குழந்தை பாக்கியம் :
திருமதி. அம்சா, திருமதி. பொன்னம்மா, திருமதி. தனம் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. சகோதரி சுசீலா இவர்களுடைய பெயர்களைக் கூறி ஜெபித்து வந்திருக்கிறார்கள், இன்று திருமதி. பொன்னம்மா, திருமதி. தனம், இவர்கள் குழந்தைகளுடன் வாழ்கிறார்கள். திருமதி. அம்சாவிற்கும் இறைவன் திருவருளால் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பக்கனி கிடைத்தது.
ஜெபம்! ஒருநாளும் வீண்போவதில்லை. மன்றாடி ஜெபித்தவர் மண்ணுலகை விட்டுப் போனாலும், அவர் வேண்டுதலுக்கு விடையருளப்பட்டதை இவ்வுலகம் காண்கிறது.
இப்பொழுது ஞாயிறு காலை 8.00 மணி முதல் 10.00மணி வரை அம்பேத்கார் நகரிலும், காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை குமரன் நகரிலும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. மதியம் 2.30 மணி முதல் 4.00 மணி வரை கக்கன் நகரில் ஊழியம் நடைபெறுகிறது. சபையின் வாலிபர்கள் தனித்தாள் பிரதிகளுடன் உற்சாகமாக ஊழியத்தில் பங்கேற்கின்றனர். செவ்வாய்க்கிழமையும் குமரன் நகரில் ஆராதனை நடைபெறுகிறது.
காணிக்கை :
குமரன் நகர் ஆலயத்திற்கு வருபவர்களில் பெரும்பாலோர் எளிய மக்களே இருப்பினும் கூட தேவனுக்குக் கொடுக்க சளைக்காதவர்கள். அன்றாடம் கூலி வாங்கினாலும் அதில் பத்தில் ஒன்றை பரமனுக்கு கொடுக்க பேரவா கொண்டவர்கள்.
மக்கெதோனியா நாட்டுச் சபையார் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில் கொடிய தரித்திரம் உடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்கள் என (॥ கொரி8:2, 3) வேதம் கூறுவதற்கு ஏற்றபடி குமரன் நகர் விசுவாசிகள் கொடுக்கும் விசுவாசிகளாய் இருந்தனர். அந்த எளியவர்கள் சபையில் ஆலயத்திற்காக ரூ 28,000 காணிக்கை வந்தது.
சரோஜா என்ற அம்மையாருக்கு அவருடைய கணவரின் பணம் அரசிடமிருந்து வரவேண்டியுள்ளது. அவர்கள் '“எனக்கு வரவேண்டிய தொகை வந்தவுடன் அதில் ஆலயத்திற்கு மணி வாங்கி வைக்கிறேன்.'' என்று உற்சாகமாகக் கூறுகிறார்கள்.
“குமரன் நகரில் ஆலயமணி ஓசை கேட்க வேண்டும்'' என்ற சகோதரி சுசீலாவின் வாஞ்சை நிறைவேறப் போகிறது என எண்ணும் போது நம் உள்ளம் உவகையால் துள்ளுகிறது.
விழுதுகள் :
ஆலமரத்தின் அருமையை அதன் நிறைந்த விழுதுகள் விளம்புகின்றன. ஒவ்வொரு விழுதும், மண் நோக்கி வளர்ந்து, மண்ணிலே வேருன்றியதும் தனி மரமாக தழைத்தோங்குகிறது.
ஒரு குடும்பம் என்ற ஆலமரத்தின் விழுதுகள் அவர்களின் குழந்தைகளே!
சகோதரி சுசீலாவின் குடும்பத்தினரும் நற்செய்திப் பணியில் நன்முறையில் திகழ்வதைக் காணலாம்.
தலைமகன் திரு. ஷலோம் தேவபாலன் டெஸ்மண்ட், தன் அருமைத் துணைவி திருமதி. வைலட் ஷலோமுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் (டாக்டரேட்) பட்டப்படிப்பு பயின்று கொண்டிருக்கிறார்.
இரண்டாவது திருக்குமாரன் திரு. ஜிம் எலியட் எம்.எஸ். டபிள்யூ பயின்று, பீஹார் மாநிலத்தில் எபிகார் நிறுவனத்தில் சமுதாயப் பணியில் ஈடுபட்டிருந்தார். தனக்கென எதையுமே பேணி வைக்கத் தெரியாது, பிறர் நலனே வாழ்வின் இலட்சியமென வாழ்ந்த அந்த அன்பு உள்ளம், அன்பில் பரிபூரணரான தெய்வத்தைக் காண விழைந்ததோ?
சகோதரி மண்ணுலக வாழ்வை நீத்த மூன்றரை மாதங்களுக்குப் பின் டிசம்பர் திங்கள் முதல்நாள் திரு. ஜிம் எலியட்டின் உடல்நலன் பாதிக்கப்பட்டது. எம்பெருமான் இயேசு 'ஜிம்மை' அழைத்துக் கொண்டார். மீண்டும் கண்ணீரின் பள்ளத்தாக்கு! சகோதரியின் கணவர் கர்த்தருக்குள் திடப்பட்டாரே ஒழிய திகைத்து துக்கத்தில் ஆழ்ந்து விடவில்லை.
ஆனால் செல்வன் பிராங்கோ மனம் கசக்கிப் பிழியப்பட்டது. தேவனது அரவணைக்கும் கரம், அன்பு நெஞ்சங்களின் அரவணைப்பின் மூலம் வெளிப்பட்டு பிராங்கோவைத் தேற்றி வழி நடத்தியது.
“அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து, அதை நீரூற்றாக்சிக் கொள்கிறார்கள்” என்ற சங்கீதத்தின் சங்கநாதம் போல் இக்குடும்பம் திகழ்கின்றது.
மூன்றாவது அன்பு மகள் சபைன் மொழியியலில் முனைவர் (டாக்டரேட்) பட்டம் பெற்ற. டாக்டர் எட்வர்ட்பால்' என்பவரை திருமணம் செய்து கல்கத்தாவில் இனிய இல்லறமாம் நல்லறத்தை நடத்தி வருகிறார். “மோ பை: என்ற கம்பெனியில் நிர்வாகியாகப் பணி புரிந்து வருகின்றார்.
“கர்த்தருடைய . ஊழியத்திற்கு வந்ததால். நாங்கள் குறைபட்டுப் போகவில்லை. எடுத்துக்காட்டாக நாங்கள் (பிள்ளைகள்) திடப்படுத்தல் எடுத்த சமயம் பிரியாணியுடன் அந்த வைபவத்தைக் கொண்டாட. கர்த்தர் கிருபை செய்தார். திருமணங்ள் சிறப்பாக நடைபெற அருள் புரிந்தார்'' என கர்த்தரின் கிருபையை மன நிறைவோடு கூறுகிறார்கள். விதை ஒன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்? சகோதரி: சுசீலா அவர்களின் . பிள்ளை எப்படி இருப்பார்கள்?
நான்காவது செல்லமகன் திரு. பிராங்கோ எம்.எஸ்.டபிள்யூ முடித்து, மிஷனரி ஜோட்சனா-வை திருமணம் செய்து குஜராத்தில் சமூகப்பணி செய்து வருகிறார்கள். தன் அண்ணன் பணி செய்த இடத்தில் தானும் பணியைத் தொடர அளவுகடந்த ஆசை அவருக்கு!
முத்துக்களைப் பார்க்கிலும் விலையேறப்பட்ட குணசாலியான ''பெண்ணின் கணவர் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறார்.'” (நீதி 31 : 23)
“அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி'' என்கிறார்கள். அவள் கணவனும் அவளைப் பார்த்து : “அநேகம் பெண்கள் குணசாலிகளாய் இருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள்'” என்று அவளைப்புகழுகிறார். (நீதி 31:28, 29) என்ற ஞானி சாலொமோனின் கூற்று சகோதரி வாழ்வில் பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது.
அன்பின் அகல விளக்காய் அவனியில் அவதரித்து,
ஞானதீபமாய் கல்வித்துறையில் சிறந்து,
இல்லற ஜோதியாய் குடும்பத்தில் இன்ப ஒளி வீசி,
கோபுர தீபமாய் ஊழியப் பாதையில் உயர்ந்து,
தியாக தீபமாய் கரைந்து,
இலட்சிய தீபமாய், நின்று நிலைத்திடும் நற்செய்திப்
பணியில் திகழ்ந்த சகோதரியின்
ஆர்ப்பாட்டமற்ற அமைதி வாழ்வு
நித்திய ஜீவனை சுதந்தரிக்கும்
அணையா தீபமே!
இந்த கதை அணையா தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.