தொடர் – 3
திருமண வேலைகள் துரிதமாக நடைபெற ஆரம்பித்தன. ஆவிக்குரிய வாழ்வில் சீராக வளர்ந்து வரும் இவ்விருவரும் இணைந்தால் தேவராஜ்ஜிய விருத்தி தீவிரமடையும் என்பதையுணர்ந்த சாத்தான் சும்மா இருப்பானா என்ன?
கருவிலேயே சுசீலாவை அழிக்க முனைந்த அவன் மூளை தீவிரமாக வேலை செய்தது. திருமணத்திற்கு தடை கொண்டுவர அன்பு அவர்கள். மூலமாகவே செயல்பட ஆரம்பித்தான்.
பேட்ரிக் - சுசீலா திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதித்ததில் அதிக சந்தோஷம் அனுபவித்தவர்களில் அன்பு அவர்களும் ஒருவர்.
சுசீலாவைக் காண அவர் அறைக்கு வந்தார் அன்பு. அன்பைக் கண்ட சுசீலா வரவேற்று அமர வைத்தவர்,
“இங்க பாரேன் அன்பு! நேற்று இரவெல்லாம் தூக்கமே இல்லை. அந்தப் பக்கமிருந்து 'டொட்ரிக்'ன்னு ஒரு எலி குதிச்சு வருது. இந்தப் பக்கமிரந்து “டொட்ரிக்ன்னு ஒரு எலி வருது, பார்த்துக்க. எப்படித் தூங்கறது?'” தனக்கே உரிய நகைச்சுவையில் பேச,
அன்பு, 'இங்க பாருங்க!” எங்க வீட்டுக்கு வந்த பின்னால் நீங்க பாட்டுக்கு. “*டொட்ரிக்... டொட்ரிக்ன்னு சொல்லிட்டு, இருந்தீங்கன்னா. என் இரண்டு அண்ணனும் ஓடி வருவாங்க. என் மூத்த அண்ணன் பெயர் பேட்ரிக், இரண்டாவது அண்ணன் பெயர் பிரடரிக். தெரிந்ததா?'' என்று கூறி சிரிக்க,
சுசீலாவின் செந்தாமரை முகம் நாணத்தால் மேலும் சிவந்தது!
நாட்களுக்குத்தான் எவ்வளவு வேகம்? திருமணநாள் நெருங்கியது. இன்னும் சிலநாள் இருக்கும்போது...
இதுவரை தன் ஒரே மகள் சுசீலாவிற்கு விதவிதமாக புடவைகள் எடுத்துக் கொடுத்திருந்தார் ஆர்.வி. சகாயம் அவர்கள். பட்டுச் சேலைகள் நிறம், டிசைன் எல்லாம் எப்படி இருக்க வேண்டுமென கூறி, நெசவு செய்ய வைத்து வாங்கிக் கொடுத்திருந்தார். எனவே உடன் வேலை பார்க்கும் ஆசிரியைகள் ஆச்சரியப்படும் வகையிலும், பயிலும் மாணவிகள் வியந்து மகிழும்படியும் நிறைய புடவைகள் உண்டு, சுசீலாவிடம். ஒருமுறை உடுத்திய சேலையை மீண்டும் உடுத்துவதற்கு வெகு காலமாகும். இவ்வளவு செல்வச் சிறப்புடன் வளர்க்கப்பட்டிருந்ததால் “திருமணப் புடவையை பெண் வீட்டாரிடமே எடுக்கச் சொல்லி பணம் கொடுத்து விடுவோம்'' என முடிவு செய்து சகாயம் அவர்களிடம் பேசினார்கள், மாப்பிள்ளை வீட்டார். பிறந்த வீட்டில் பேணி வளர்க்கப்பட்டிருந்தாலும் புகுந்த வீட்டில் தீபமாய் ஒளிதர வேண்டியவள் தன் மகள் என்பதை உணராதவரா அவர்?
“நீங்கள் எந்த சேலை எடுத்துக் கொடுத்தாலும், என் மகள் அணிந்துகொள்வாள். நீங்களே எடுத்து வாருங்கள்” எனப் பெருந்தன்மையுடன் பதில் கூறிவிட்டார் சுசீலாவின் தந்தையார். திருமண உடைகள் எடுக்க அன்பையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றனர் பெற்றோர்.
அன்பிற்கு தொண்டைவலி ஆரம்பித்தது. வலது கால் பெருவிரல் வீங்கியது. சுளுக்கு எனக் கூறி, ஒரு அம்மா எண்ணெய் பூசி தடவி விட்டார்கள். ஆனால் அடுத்த விரலும் வீங்கி விட்டது. வலி அதிகரித்தது. எனவே விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வர பஸ்ஸில் ஏறினார்கள். வலதுகால் முழுவதும் வீங்கி வலிக்க ஆரம்பித்தது. அவர்களைத் தாக்கியிருந்தது இருதயத்தை பாதிக்கும் 'ருமேடிக்' காய்ச்சல் ஆகும். வேதனையோடு பஸ்ஸில் அமர்ந்திருக்க, பஸ் நாங்குநேரி வரவும், அக்காலத்திய நெறிப்படி கல்யாண விருந்து வைப்பதற்கு தாசில்தாரிடம் அனுமதி வாங்க வந்த அன்புவின் தந்தை நாங்குநேரியில் பஸ் ஏறினார். மகளைப் பார்த்தவர், தனக்கு உதவிக்காக மகள் விடுப்பு எடுத்து வந்துள்ளாள் என எண்ணிக் கொண்டார். இடையன் குடி வரவும், அன்புவால் இறங்க முடியவில்லை. நிலைமையறிந்த தந்தை தன் மகளை இறக்கி அமரவைத்தார். வீட்டிற்கு செய்தி பறந்தது. தாயும் சித்தியும் வந்து மகளைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றனர்.
திருமண மகிழ்ச்சி பொங்கிய வீட்டில் திகைப்பு சூழ்ந்தது. கவலையின் ரேகைகள் படிய ஆரம்பித்தன. மருத்துவர் அழைக்கப்பட்டா. இரு கால்களும் வீங்கி விட்டன. அன்புவைத் தாக்கியிருந்த நோயை அறிந்தனர் இருதயம் வீங்கியிருந்ததை அறிந்து; வேதனையடைந்தனர். மருத்துவ விடுப்பு எடுக்கப்பட்டது. விபரீதமான பேச்சுகள் ஊரில் நடமாட ஆரம்பித்தன. தொடர்ந்து 4 நாட்களும் படுக்கையிலேயே கழித்தார். வலி! வேதனை! சற்றும் அசையக் கூடாது என்ற மருத்துவரின் ஆலோசனை அனைவரையும் கலங்க வைத்தது. கால்களில் களிம்பு தடவி பஞ்சு வைத்துச் சுற்றிக் கட்டுப் போடப்பட்டிருந்தது. திருமணத்திற்கு முன்கூட்டியே வாருங்கள்" என பெண் வீட்டாரிடமிருந்து தந்தி வந்து கொண்டே இருந்தது.
என்ன மறுமொழி கொடுப்பது எனத் தெரியாத நிலையில் இருந்தனர் மாப்பிள்ளை வீட்டார். திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று கூட எண்ணங்கள் ஓடின.
“உனக்கு இப்படி இருக்கிறதே! நாங்கள் என்ன செய்வோம்?'' எனக் கூறி அன்புவின் தமக்கை ஜெபக்கனி கதறி அழுதார். திருமண நாளுக்கு 4 நாட்களுக்கு முன் சனிக்கிழமை 1964 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் அசாதாரண விசுவாசம் அன்பு அவர்களை ஆட்கொண்டது. தன் அண்ணன் திருமணம் தன்னால் தடைபடக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார். தாயும் தகப்பனும் அந்த அறைக்குள் இருந்தனர்.
“நான் நடக்கப் போகிறேன் உங்களில் யாருக்காவது விசுவாசம் இல்லாவிட்டால், தயவுசெய்து இந்த அறையை விட்டுப் போய் விடுங்கள்'' என்று,தீர்க்கமாகக் கூறிய அன்பு, தன் தாய், தகப்பன் கரங்களைப் பிடித்தபடி எழுந்தார். நடக்க ஆரம்பித்தார். பெற்றோர் இதழ்களும் ஸ்தோத்திரம் கூறியபடியே இருந்தது. அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.
“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு கூட இருப்பேன். நீ ஆறுகளைக் கடக்கும் போது அவைகள் உன்மேல் புறளுவதில்லை. நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய். அக்கினி ஜுவாலை உன் பேரில் பற்றாது'” என்ற திருமறையின் வாக்குப்படி கஷ்டங்கள் வந்தாலும், கர்த்தர் துணை நின்று, அவைகளினின்று மீட்டெடுப்பார். அல்லவா? விசுவாசத்தினால் வியாதியின் கொடூரத்தை அடக்கினார்கள். மருத்துவர் அழைக்கப்பட்டார். திருமணத்திற்கு காரில் மெதுவாக அழைத்துச் செல்லலாம். என அனுமதி கொடுத்தார். தேவனுக்கு துதி செலுத்தி விருதுநகர் செல்ல ஆயத்தம் செய்தனர்.
திருமண ஏற்பாடுகள் விருதுநகரில் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. மாப்பிள்ளையை யானை மீது அமர்த்தி அழைத்து வர வேண்டுமென முயன்று கொண்டிருந்தார் சுசீலாவின் தந்தையார். ஒரு சில காரணங்களால் அந்த முயற்சி கடைசியில் கைவிடப்பட்டது. 1964 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் புதன்கிழமை, திரு. மாசிலாமணி பரிமளம் தம்பதியினரின் சேஷ்ட புத்திரன் பேட்ரிக் ஜாஷ்வாவிற்கும், திரு. ஆர்.வி. சகாயம் - நல்லம்மாள் தம்பதியினரின் திருநிறைச் செல்வி சுசீலா மார்கிரேட் பியூலாவிற்கும் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காளிமார்க் - சோடா உரிமையாளருடைய புதுவீட்டை கல்யாணத்திற்காகப் பயன்படுத்த அன்னார் உவந்தளித்தார். அதில்தான் மாப்பிள்ளை வீட்டார் தங்கினார்கள். பணியில் நேர்மையுடையவரும், பழகுவதற்கு இனிமையுடையவருமான திரு. சகாயம் அவர்களை விருதுநகர் பெருமக்கள் பெரிதும் விரும்பி மதித்து வந்தனர். எனவே திருமணத்திற்கு கூட்டம் மிகவும் அதிகமாய் இருந்தது. திருமண விருந்து 18 வகை கூட்டுகளுடன் பரிமாறப்பட்டது. அவை கடைசி பந்தி வரை அனைவருக்கும் நிறைவாக இருந்தது. அனைவரும் மனமுவந்து பாராட்டினர்.
சாதாரணமாக திருமண வீடுகளில் முதல் பந்தியில் இடம் பெறும், இனிப்புகள், விசேஷித்த கூட்டுகள் இறுதி வரை இருப்பதில்லை. சாம்பாருடன் ரசம் சங்கமம் ஆவதும், மோரும் நீரும் இணைவதும் நாம் அறிந்ததே. பாயாசம் பாதியிலேயே பறந்து விடுவதும் உண்டு.
கானாவூர் திருமணத்தில் கர்த்தர் இயேசு இருந்ததால், நீர் திராட்ச ரசமாக மாற்றப்பட்டு, பறிமாறப்பட்டதால் “*ருசியள்ள ரசத்தை இதுவரை வைத்திருந்தீரே!'' என பந்தி விசாரிப்புக்காரன் மணமகனைப் பாராட்டியது போல், அகிலம் முழுவதையும் படைத்த ஆண்டவர் இத்திருமணத்தில் அகம் மகிழ்ந்து அங்கம் வகித்திருந்ததால் திருமண வைபவத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் சீரும் சிறப்புமாக நிறைவேறின.
புயலிடை ஏற்றப்பட்டாலும் பொன்விளக்கு பிரகாசித்தது.
இதன் தொடர்ச்சி இல்லற ஜோதி! என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை அணையா தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.