சாத்பூரா மலைத்தொடரையொட்டி ஓடிக்கொண்டிருந்த தபதி நதியை கண்கொட்டாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சார்லஸ்! பாறைகளில் மோதி, சுழித்து பொங்கி ஓடும் நதியின் ஒட்டத்தோடு அவன் எண்ண அலைகள் போட்டியிட்டன.
அன்று சென்னை மாநகரை விட்டு, இந்த மலைத் தொடரில் வாழும் ஆதிவாசி ஜனங்களிடையே ஊழியம் செய்ய மிஷனெரியாகப் புறப்பட்டபோது தன்னைக் கேலி செய்த உறவினர்கள் அவன் கண்முன் தோன்றினர்.
அருமை நண்பன் டேவிட், “சார்லஸ்! உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? M.Phil., பட்டம் பெற்ற நீ எங்கோ காட்டிலே போய் ஊழியம் செய்யப் போகிறாயா என்னடா பெரிய ஊழியம்? உணர்ச்சிக் கொந்தளிப்பில் முடிவெடுத்து கஷ்டப்படாதே! வேலை கிடைக்காத, வாழ வழியில்லாதவன் போவான்! உனக்கு என்னடா இல்லை? பணக்கார வீட்டு ஒரே பையன்!
வாழ்வின் இன்பத்தை அனுபவிக்க வேண்டிய இளமையை வீணாக வெந்தணலில் போடாதேடா மடையா” அறிவுரை கூறுவதாக வசைமாரி பொழிந்தான்.
தாய் கண்ணீரில் கரைய, தந்தை, “சார்லஸ்! ஊழியம் இங்கேயே செய்யப்பா! உனக்காக காத்திருக்கிற அத்தை மகள் ஆனந்தியை மேரேஜ் பண்ணிட்டு இங்கேயே செய்யப்பா! எந்த மிஷனெரி ஸ்தாபனத்திற்கு எவ்வளவு பணம்' அனுப்பச் சொல்றையோ, அவ்வளவு பணம் அனுப்பி விடுகிறேன். நீ மட்டும் எங்களை விட்டுப் போகாதேப்பா!”
எதற்கும் கலங்காத தந்தையின் கண்களும் கலங்கியிருந்தன.
சார்லஸ் தடுமாறினான். ஜெபவேளையின்போது தான் கேட்ட இறைமகன் இயேசுவின் குரலை அலட்சியப்படுத்த முடியவில்லை. உண்ணாவிரதப் போராட்டத்தினால் பெற்றோரின் அனுமதி பெற்று இங்கு வந்து சேர்ந்து மாதம் ஒன்று, ஓடி மறைந்துவிட்டது.
ஆனால் ஒருவரையாவது கண்டு பேச முடியவில்லை. சார்லஸைக் கண்ட ஆதிவாதிகள் ஒடி ஒளிந்தனர். சில சமயங்களில் மறைவிலிருந்து கற்களையும் விட்டெறிந்தனர். மனம் உடைந்து போனான் சார்லஸ்! தன் நண்பன் கூறியது போல் “பைத்தியக்காரத்தனமாகத்தான் நடந்து கொண்டோமோ?” என்ற எண்ணம் அவன் இதயத்தில் எழவும், பயங்கரமான அலறல் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
திடுக்கிட்டு எழுந்தான். கூப்பிடும் தூரத்தில் ஒரு பையன் வில்லையும், அம்பையும் போட்டபடி கீழே சாய்வதையும், அவன் அங்கேயிருந்து வேகமாக செல்லும் பாம்பையும் கண்டான். ஓடிச் சென்று சிறுவனை தாக்கித் தன் குடிசைக்குத் கொண்டு வந்து முதலுதவி செய்தான். ஏதோ ஒரு வேகம்! ஒரு மின்னல்! ஜெபத்தில் அமர்ந்தான். கண்கள் குளமாயின.
சிறுவன் உயிர் பெற்றான். அவன் வாழ்வில் ஒரு திருப்பம். நற்செய்திக்கான திறந்த வாசல் கிடைத்தது. குடிசையை நோக்கி கூட்டம் வந்தது.
காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. குடிசையின் உள்ளே படுத்திருந்தார் சார்லஸ்! அவர் தலையின் அருகே வலப்புறம் ஒரு தீபம் எரிந்து கொண்டிருந்தது. அவரைச் சுற்றி அமர்ந்திருந்த சிறு பிள்ளைகள், “மேகங்கள் நடுவே வழி பிறக்கும் என பாடிக் கொண்டிருந்தனர். ஆடையின்றி மிருகங்கள் போல் வாழ்ந்துவந்த அந்தமக்கள் ஆடையணிந்து கண்களில் கண்ணீர் பெருக அமர்ந்திருந்தனர்.
சார்லஸ் கண் திறந்து பார்த்தார். அவரது பாதங்களைத் தன் இரு கரங்களாலும் பற்றி, தன் கண்ணீரால் கழுவிக் கொண்டு, முழங்காலில் நின்றிருந்த 45 வயது மதிப்புமிக்க அந்த ஆளைப் பார்த்தார். அவர்....... அன்று பாம்பு கடிந்து வீழ்ந்த சிறுவன் - சார்லஸ், “பவுல்! அழாதே. என் அப்பாவிடம் தானே போகப் போறேன். நீ என் வேலையை செய்” - இதழ்கள் மூடின! இமைகள் விரிந்தன! அதோ வானம் திறந்தது! தூதர் கூட்டம் துதி பாட இயேசு கிறிஸ்து தன் கரங்களில் முத்துக்கள் பதித்த கிரீடத்தை கையில் ஏந்தி புன்கையோடு தன்னை அழைப்பதைக் கண்டார். சரீர கண்கள் மூடின. அவர் முகம் பிரகாசித்தது. இதழ்களில் புன்னகை நிலைத்தது. பைத்தியத்திற்குப் பரிசு கிடைத்துவிட்டதே!
இந்த கதை இதயம் தந்த பரிசு என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.