பள்ளத்தாக்கின் வாசல்  

பள்ளத்தாக்கின் வாசலை ஆனூனும், சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.. (நெகே 3:13)

எருசலேமின் தாழ்வான பள்ளத்தாக்குப் பகுதியில் இது இருந்ததால், பள்ளத்தாக்கின் வாசல் என்று இது அழைக்கப்பட்டது. சுட்டெரிக்கப்பட்டுக் கிடந்த இதையும் பழுதுபார்த்துக் கட்டினார் நெகேமியா.

இது தாழ்ந்த நிலையைக் குறிக்கிறது. "இந்தியா ஒளிர்கிறது.." "இந்தியா மிளிர்கிறது.." என்று என்னதான் தேசபக்திக்காரர்கள் கோஷம்போட்டு மார்தட்டிக் கொண்டாலும், நாட்டின் உண்மைநிலையை வைத்துப் பார்த்தால் இன்னும் இது இருப்பது Third world country என்னும் தாழ்நிலையில் தானே? இரண்டாம் உலகப்போரின் காலத்திற்கும் இன்றைய நாளுக்கும் ஒப்பிட்டால், படிப்பறிவு சதவிகிதத்திலும், விஞ்ஞான முன்னேற்றத்தில், பொருளாதாரத்திலும், இராணுவத் தரத்திலும் நாம் முன்னேறியிருந்தாலும், மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை எல்லாத்துறையிலும் காணப்படும் ஊழல், ஏழ்மை, கிராமப்புறக் கல்வி, போதிய சுய மருத்துவ வசதி வளர்ச்சி பெறாத மாநிலங்கள், பாலியல் வன்முறைகள், வரதட்சணைக் கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள், கடத்தல், விவசாயிகளின் தற்கொலை மரணங்கள், தீவிரவாதம், வட இந்தியப் பகுதிகளில் பெருமளவில் காணப்படும் கொடூரமான குற்றங்கள், சாதியியல், மதக்கலவரங்கள், விலைபோய்விட்ட ஊடகங்கள் என்று இன்னும் எத்தனை எத்தனையோ காரியங்களைக் கண்கூடாகக் காணும் போது ஏழ்மையும் தாழ்மையுமான அதல பாதாளமான பள்ளத்தாக்கில் அல்லவோ நாம் இன்னும் கிடக்கிறோம்?

எல்லாவற்றைப் பார்க்கிலும் நாட்டின் சமுதாயத்தில் தாழ்நிலையையும் கீழ்நிலையையும் ஏழ்நிலையையும் அன்றாடம் நம் கண்களாலே காண்கிறோமே!

* நகரங்களுக்கும் கிராமங்களுக்குமான மிகப்பெரிய பாகுபாடும் வேறுபாடுமான நிலை!

* கல்வியறிவில் தாழ்நிலை!

* மருத்துவ வசதியில் கீழ்நிலை!

* பொருளாதாரத்தில் ஏழ்நிலை!

* சாதியத்தின் இழிநிலை!

* சமூக முன்னேற்றத்தில் தாழ்நிலை!

* பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் கீழ்நிலை!

* நீதிமன்றங்களின் இழிநிலை!

* காவல் நிலையங்களின் கொடும்நிலை!

இன்னும் எத்தனை எத்தனை எத்தனை!

■ இந்த "எலும்புப் பள்ளத்தாக்கின்" உலர்ந்த எலும்புகள் உயிரடையுமோ? (எசே 37:1) - உயிரைடையும் என்ற விசுவாசத்தோடு ஜெபிப்போம்!

■ சமீபித்திருக்கும் கர்த்தரின் நியாயத்தீர்ப்புக்கென்று இந்த இந்திய "நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே" திரள்திரளாய் நிற்கும் ஜனத்துக்காய்த் திறப்பிலே நிற்போமோ? ஐயோ, பயிர் முதிர்ந்து, ஆலை நிரம்பி வழிகிறதே! இந்த ஜனத்தின் பாதகங்களுக்காய் இதோ இந்தப் "பள்ளத்தாக்கின் வாசலைப்" பழுதுபார்க்க எழுந்து நிற்போம் வாருங்கள்!" (யோவேல் 3:13, 14),

■ சாத்தானின் இந்த "சங்காரப் பள்ளத்தாக்கை", (எரே 19:6) நீர் ஜீவனின் பள்ளத்தாக்காய் (சங் 104:10) மாற்ற மாட்டீரோ என்று ஜெபிப்போம்.

■ இது "மரணப்பள்ளத்தாக்கு" தான் (சங் 23:4). ஆனாலும் இந்த அழுகையின் பள்ளத்தாக்கை" உருவ நடக்கும் நமக்கு தேவன் இதை நீரூற்றாக்கும்படியாய் ஜெபிப்போம்.

■ வாருங்கள்! தேசமென்னும் இந்தப் "பள்ளத்தாக்கு" எங்கும் ஜெபமாகிய வாய்க்காலை இன்று வெட்டுவோம் (2 இரா 3:16). தேவன் தமது எழுப்புதல் நதியை நாளை நம் மத்தியிலே வெள்ளமாய் அனுப்புவார்! ஆமென்!

Author: Pr. Romilton



Topics: Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download