கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவிக்குரிய கனியின் ஒவ்வொரு அம்சங்களையும் நாம் சிந்தித்து வருகிறோம். இந்த மாதத்தில் ஆவியின் கனியாகிய நீடிய பொறுமை குறித்து காண்போம். ’பொறுத்தார் பூமியாழ்வார்’ எனவும் ’பொறுமைக்கும் எல்லை உண்டு’ எனவும் உலகவழக்கில் பலர் சொல்ல, நாம் கேள்விப்பட்டதுண்டு. எல்லையில்லாத பொறுமை, அதாவது தொடர்ச்சியாக நிலைத்து நிற்கும் பொறுமை தான் நீடியபொறுமை. கடினமான சூழ்நிலைகளில் உறுதிப்பாட்டுடன் தன்நிலையை தக்கவைத்துக் கொள்ளுதல் (long suffering) நீண்ட நேரம் நிதானத்துடன் நடந்துகொள்ளும் நிலை (long temper) என்ற இருவேறு காரியங்களுக்கும் பொறுமை என்ற ஒரே சொல்லே பயன்படுத்தப்படுகிறது.
பலரும் பலவிஷயங்களில் பொறுமையிழக்கும் போது நாம் பொறுமையுடன் இருந்தால் நம்மில் ஏதோ ஒரு வெறுமை இருப்பதாக நினைக்க வேண்டியதில்லை. மாறாக, பொறுமையிழப்பது தான் நம் கிறிஸ்தவ வாழ்வில் ஆவியானவர் செயல்படாத வெறுமையைக் காண்பிக்கிறது. மேலும், நம்மை பூரணராக்குவதே இந்த பொறுமை தான். ’நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது’ (யாக்கோபு 1:4 ). ’பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்’ (பிரசங்கி 7:8). பொறுமையாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள் (யாக்கோபு 5:11).
பொறுமை ஒரு நல்ல பண்பு என்பதைக் காட்டிலும் அது ஒரு கிறிஸ்தவப் பண்பு என்பது தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் நமது தேவன், அவர் நீடிய பொறுமையுள்ள தேவன் (சங்கீதம் 86:15, 2 தெச 3:5). நாம் முதலில் இரட்சிக்கப் பட்டு அவருடைய பிள்ளைகளாக மாறியதே அவருடைய பொறுமையினால் தான் (1 தீமோ 1:16). நமது அனுதின வாழ்க்கையில் ஏற்படும் நமது மீறுதல்களிலும் அவர் பொறுமையுள்ளவராகவே இருக்கிறார் (ஏசாயா 48:9). நீடிய பொறுமையுள்ளவராக இருப்பதினால் தேவன் அநியாயங்களை சகித்து நீதியுள்ளவர்களுக்கு அநியாயஞ் செய்பவரல்ல. ’அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?’ (லூக்கா 18:7).
ஒருவரின் பொறுமை உபத்திரவத்தில் வெளிப்படுவது மட்டுமல்ல, பொறுமையை விருத்தியடையச் செய்வதே உபத்திரவங்கள் தான். ஒரு பொறுமைசாலியினால் மட்டுமே கடினமான துன்பமான சூழ்நிலைகளிலும் முறுமுறுக்காமல் தாங்கிக் கொள்ள முடியும். அடுத்தவர் மீதே தவறுகள் காணப்பட்டாலும் நீதியுள்ள நியாதிபதி பார்த்துக் கொள்வார் என நினைக்கும் பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே அதற்காக கோபப்படாமலும் புகார் கொடுக்காமலும் மாறாக மன்னித்து மறக்கும் அனுபவத்தை நடைமுறைப் படுத்த முடியும். இந்த நீடிய பொறுமை அது ஆவியின் கனி. பரிசுத்த ஆவியானர் நமது வாழ்க்கையில் செயல்பட முழுவதும் விட்டுக் கொடுக்கும் போது தான் இந்த கனி நம் வாழ்க்கையில் வெளிப்படும்.
இவ்வுலக வாழ்க்கையில் இயேசுவும் கூட தனது பொறுமையை இழந்திருக்கிறார். ஆனால் அது நம்மைப் போன்று சிறுசிறு காரியங்களுக்காக அல்ல. விசுவாசக் குறைச்சலால் பிசாசின் பிடியில் அகப்பட்டவர்களை விடுவிக்க முயற்சி செய்யாமல் கடமைக்கு காலத்தைக் கடத்தின தன் சீடர்களையும் (மத்தேயு 17:17, லூக்கா 9:41), பிதாவின் வீட்டை வியாபார வீடாக்கினவர்களையும் (யோவான் 2:13-17) அவர் பொறுமையிழந்து கடினத்துடன் நடத்த வேண்டியதாயிற்று. நாமும் பல வேளைகளில் பொறுமை இழக்கிறோம். ஆனாலும், தேவன் நமது பொறுமையை அறிந்திருக்கிறார் (வெளி. 2:2,3,19). எனவே, அந்த நிலைகளில் நம்மை நாமே நிதானித்து அறிந்து நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருமுறை பொறுமையிழந்தாலும் நீடியபொறுமை என்ற நிலையில் இருந்து நாம் தவற வேண்டியதுள்ளது. எனவே நீடிய பொறுமையில் நிலைத்திருக்க பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை நம் வாழ்வில் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். நமது நீடிய பொறுமை அவரது வருகை வரையும் நிலைத்திருப்பதாக இருக்க வேண்டும் (யாக்கோபு 5:7a).
குறிப்பாக நமக்கு எந்தெந்த காரியங்களில் பொறுமை வேண்டும்? முதலாவதாக, நமது ஜெபத்தில் பொறுமை வேண்டும். தாவீது கூறுகிறார், ‘கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்’’(சங்கீதம் 40:1). ’நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்‘ (நீதி 25:15). எனவே முதலில் ஜெபத்தில் பொறுமை தேவை. இரண்டாவதாக, வேதவசனங்களை கேட்கிற நாம் அவைகள் நம் வாழ்வில் ஏற்ற பலன்களைக் கொடுக்க பொறுமையுடன் செயல்பட வேண்டும். ’நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்’ (லூக்கா 8:15). இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான் (யாக்கோபு 5:7b) என்ற வசனத்திற்கேற்ப, ஆவிக்குரிய வாழ்க்கையில் பலனை எதிர்பார்த்து செய்து கொண்டிருக்கும் அனைத்து காரியங்களிலும் உரிய பலனை அடையும் வரை பொறுமையுடன் செயல்பட வேண்டும். மூன்றாவதாக, நமக்கு வரும் உபத்திவங்களில் பொறுமையாய் இருக்க வேண்டும் (ரோமர் 12:12).
பொறுமை நமது வாழ்வில் பெருக இவை நமக்கு அவசியமாகின்றன.
1) வேத வசனம்: ’தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது’ (ரோமர் 15:4).
2) தேவ கிருபை: ரோமர் 15:6 கூறுகிறது, ‘பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக’.
3) ஒருவருக்கொருவர் ஜெபம்: சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்’ (கொலோ. 1:11).
4) நல்ல முன்மாதிரிகள்: ’நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களுமாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்’ (எபிரெயர் 6:11,12) என்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல்.
கிறிஸ்துவின் பொறுமைக்கு உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவான் (வெளி. 1:9), பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்ட ஆபிரகாம் (எபிரெயர் 6:15), தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, பேழையை ஆயத்தம்பண்ணிக் கொண்டிருந்து நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா (I பேதுரு 3:20, 2 பேதுரு 2:5), பொறுமைசாலியான யோபு (யாக்கோபு 5:11) இவர்களெல்லாம் நமது கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் நமக்கு நீடியபொறுமையை புகட்டும் நல்ல முன்மாதிரிகள். இவர்களைப் பின்பற்றி, நமது விசுவாச ஓட்டத்தை பொறுமையோடே ஓடி முடிக்க தேவன் கிருபை தருவாராக.
ஆமென்.
Dr. Pethuru Devadason