எசேக்கியாவின் உடன்படிக்கை :
"இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கை பண்ண என் மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன்." (2 நாளா 29:10)
என் தேசமும், என் நகரமும் பாழாய்க்கிடந்தாலும், அவற்றை சரி செய்யுமுன், தேவனின் உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு நான் அவரோடே உடன்படிக்கை செய்ய என் மனதிலே நிர்ணயம் செய்து கொண்டேன் என்று சொல்லி, தானும் உடன்படிக்கை செய்து, தன்னோடே இருந்தவர்களையும் அந்த உடன்படிக்கைக்கு உட்படுத்தினான் எசேக்கியா.
இன்று...
* சபை தேவனை விட்டு தூரம் போயிருப்பது உண்மை.
* சபை கிறிஸ்துவையே வெளியேவிட்டுக் கதவை மூடியிருப்பது உண்மை.
* கர்த்தர் தமது பிள்ளைகளை வளர்த்து ஆதரித்து வந்தாலும் அவர்களோ, அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி நிற்பது உண்மை.
* மாடு தன் எஜமானனையும் கழுதை தன் ஆண்டவனின் முன்னணையும் அறிந்தாலும், தேவ ஜனமோ அறிவில்லாமலும் உணர்வில்லாமலும் இருப்பதும் உண்மை.
* சபை இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனது உண்மை.
* சபையின் தலையான தலைவர்களும் போதகருமெல்லாம் ஆவியில் வியாதியிலும், இருதயமான மனசாட்சியெல்லாம் பலட்சயமாகிக் கிடப்பதும் உண்மை.
* சபையின் ஸ்திரத்தன்மையாய் அதைத் தாங்கும் ஆவிக்குரிய உள்ளங்கால் தொடங்கி, அபிஷேகத்தில் நிறைந்திருக்கவேண்டிய உச்சந்தலை முதல் அதிலே சுகமேயில்லாதிருப்பதும் உண்மை.
* சபையானது பாவ காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமாய், அது வசனத்தால் சீழ்பிதுக்கப்படாமலும், அபிஷேக எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருப்பது உண்மை. (ஏசா 1: 3 - 6)
அந்தோ! தேசத்தின் நிலையைத் திரும்பிப் பார்த்தால் வேதனையிலும் வேதனை!
ஆனாலும் இவைகளையெல்லாம் சரிசெய்ய வேண்டியது அவசியத்திலும் அவசியமென்றாலும், இவைகளை விட அத்தியாவசியம், நான் என் தேவனோடு உடன்படிக்கை செய்துகொண்டு, அவரோடு உள்ள என் உறவைப் புதுப்பித்துக்கொள்வதே என்றான் எசேக்கியா.
இன்று சபையின் நிலையும் தேசத்தின் நிலையும் பரிதாபத்திலும் பரிதாபமேயானாலும், இதிலே நாம் செய்யவேண்டிய வேலைகள் தலைக்கு மேல் இருந்தாலும், மீதியான ஜனம், ஜெபிக்கும் ஜனம், தேவனோடுள்ள தனது உடன்படிக்கைகளைப் புதுப்பித்துக்கொள்வது அத்தியாவசியமில்லையோ ?
தங்கள் பாவங்களுக்காகவும், தங்கள் ஜனத்தின் பாவத்துக்காகவும் தேவனுக்கு முன்பாகக் கெஞ்சி மன்றாடி நின்ற தானியேலைப் போலவும், நெகேமியாவைப் போலவும் தேவனுக்கு முன்பாகத் தலையில் சாம்பலை அள்ளிப் போட்டுக்கொண்டு இரட்டுடுத்தி, உபவாசத்தோடும், விண்ணப்பத்தோடும், ஓங்கிய குரலோடும் கண்ணீரோடும் மன்றாடி தேவனோடு ஒப்புரவாக வேண்டியதில்லையோ?
தாங்கள் உடைத்துப்போட்ட உடன்படிக்கைகளைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியதில்லையோ?
தேவனோடு உடன்படிக்கை செய்ய தன் மனதிலே நிர்ணயித்துக்கொண்ட எசேக்கியா, தன்னோடு கூடிவந்த ஆசாரியரையும் லேவியரையும் நோக்கி, "என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள், நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படிக்கு அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களாகவும், தூபங்காட்டுகிறவர்களாக இருக்கவும் அவர் உங்களைத் தெரிந்து கொண்டாரே!" (2 நாளா 29:11) என்று சொல்லி அவர்களையும் தேவனோடு உடன்படிக்கை செய்து கொள்ள அவர்களது அடிப்படை அழைப்பையே அவர்களுக்கு நினைவூட்டி அவர்களைப் பாரப்படுத்துகிறான்.
அப்படியே நாம் ஒருவரோடு ஒருவருக்குள்ள உறவுகளைப் புதுப்பித்து, ஒருவரையொருவர் மன்னித்து, ஒருவரையொருவர் தங்களிலும் மேலாக எண்ணி, ஒருவரோடொருவர் ஒப்புரவாகி, சமாதானம் பண்ணி, தேவனுக்கு முன்பாக ஒருவரோடொருவர் உடன்படிக்கை செய்து கொள்வோம்!
தேவன் இறங்கி தேசத்திலே தமது கிரியைகளைச் செய்வாராக!
Author : Pr. Romilton