ஞானத்தின் அடித்தளம்

ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, கர்த்தருடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள், அவர்களுக்கு ஞானமேது?” (எரேமியா 8:9). கர்த்தருடைய போதனைகளை, அந்த “ஞானமுள்ள ஜனங்கள்” கவனிக்க மறுத்துவிட்டனர். எனவே உண்மையில் அவர்கள் ஞானம் உடையவர்கள் அல்ல. அந்த “ஞானமுள்ள ஜனங்கள்” பிடிபட்டுள்ளனர். அவர்கள் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்துள்ளனர். ஞானம் தேவனிடம் இருந்து வருகிறது என்றும், அந்த உன்னதமான ஞானத்தின் பண்புகளை அப்போஸ்தலனாகிய யாக்கோபு வழங்குகிறார் (யாக்கோபு 3:17).

1. தூய்மையானது மற்றும் பரிசுத்தமானது 
தேவனின் வெளிப்பாடு நமக்கு பாலியல் ஒழுக்கம், தூய்மை மற்றும் பரிசுத்தத்தை போதிக்கிறது. தேவன் பரிசுத்தமானவர், மனிதர்களைக் குறித்ததான அவருடைய விருப்பமும் அவரைப் போன்றதான பரிசுத்தமே. இத்தகைய பரிசுத்தம் அன்றாட வாழ்க்கையில் நீதியாக நிரூபிக்கப்படுகிறது. அவர்கள் காமம், பொறாமை, பேராசை, பெருமை மற்றும் சுயநலம் ஆகியவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். 

 2. சமாதானமானது 
 தேவனின் வெளிப்பாடு மனிதர்கள் தேவனுடன் சமாதானமாக இருக்கக் கற்றுக்கொடுக்கிறது, அதாவது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தைக் காத்துக் கொள்வதன் மூலம் இது சாத்தியம், அதற்கு ஒரே வழி அவருடனான ஆவிக்குரிய ரீதியில் ஒப்புரவாகுதல் ஆகும்.  அவர் புரிதலுக்கு அப்பாற்பட்ட சமாதானத்தைத் தருகிறார், மேலும் அனைத்து உறவுகளையும் விரிவுபடுத்தி மாற்றுகிறார்.

 3. மென்மையானது 
 மென்மையாக நடந்து கொள்பவர்கள் சாந்தகுணமுள்ளவர்கள், மற்றவர்களின் சிறந்த நோக்கங்களை அடையாளம் காணக்கூடியவர்கள், அவர்களுக்கு உதவவும், வழிகாட்டவும், அறிவுரை வழங்கவும் தயாராக இருக்கிறார்கள்; மேலும் அவர்களின் மீட்பை எதிர்பார்க்கிறார்கள், அவர்களின் நோக்கம் மற்றவர்களை கண்டனம் செய்வது அல்ல. 

 4. ஆயத்தமுள்ளது 
ஞானவான்கள் மற்றவர்களின் சரியான விமர்சனங்களுக்கு, நியாயமான காரணங்களுக்கு மற்றும் மாற்றத்திற்கு எப்போதும் தங்களை ஆயத்தமாக வைத்திருக்கிறார்கள்.   அவர்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், மன்னிப்பு கேட்கவும், மற்றவர்களிடமிருந்து ஞானத்தையும் ஊழியத்தையும் பெற தயாராக இருக்கிறார்கள். 

 5. இரக்கமுள்ளது 
 இரக்கமுள்ளவர்கள் மற்றவர்களை மன்னிக்க தயாராக இருக்கிறார்கள், ஆவி உடைக்கப்படாமல் காயங்களைத் தாங்குகிறார்கள்.  அவர்கள் மற்றவர்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துகிறார்கள், மேலும் தேவைப்படுபவர்களிடம், அந்நியர்களிடம் கூட இயல்பான இரக்கத்தைக் காட்டுகிறார்கள். 

  6. இணக்கமானது 
 பசித்தோருக்கு உணவளித்தல், ஏழைகளுக்கு ஆடை வழங்குதல், சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் போன்றோருக்கு வாழ்வில் மேலும் உயர்ந்து வருவதற்கான வாய்ப்புகளை வழங்குதல் போன்ற நல்ல பணிகளை தேவையில் இருக்கும் ஜனங்களுக்கு மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள்.   

  7.  பாரபட்சமற்றது 
 அப்படிப்பட்டவர்கள் சுயநலம், பண லாபம், மனித பயம் ஆகியவற்றால் சளைத்தவர்கள் அல்ல.   அவர்கள் சாதி, மொழி, பாலினம் அல்லது வர்க்க அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. தேவனின் ஞானமுள்ள மக்கள் ஊழல் செய்பவர்கள் அல்ல, பாரபட்சம் பார்ப்பதும் இல்லை.

 8.  அன்புள்ளது 
நேர்மையாக தங்கள் பணியைக் கருத்தாய் செய்பவர்கள், பாசாங்குக்காரர்கள் அல்ல. அவர்கள் தங்கள் இலக்குகள், உறவுகள், வாழ்க்கை முறை மற்றும் வேலை ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள்.

  இப்படிப்பட்ட உன்னதமான ஞானத்தை நான் தேவனிடம் கேட்டு பெற்றுள்ளேனா? 
 

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download