மோசேயின் ஐந்து சாக்குபோக்குகள்
உலகத்தில் தம்முடைய திட்டத்தையும் நோக்கங்களையும் நிறைவேற்றும்படி தேவன் தம் மக்களுக்கு கட்டளையிடுகிறார். அதில் இடர்கள் உண்டு என்பதால் சாக்குப்போக்குகளைக் கூறுவது மனித இயல்பு. மோசே, எரேமியா மற்றும் யோனா போன்றவர்கள் தயக்கம் காட்டியதற்கு சில உதாரணங்களாவார்கள். மோசே ஐந்து காரணங்களைக் கூறி தப்பிக்க முயற்சிக்கிறார்.
1) அடையாளம்:
"அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்" (யாத்திராகமம் 3:11). மீதியான் தேசத்தின் அகதியும், எகிப்தில் தேடப்படும் குற்றவாளியுமான ஒரு எண்பது வயது முதியவரால் எப்படி இப்படிச் செய்ய முடியும்? இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க உலக வல்லரசையே எதிர்கொள்ளவா? நாம் அவருடைய பிள்ளைகளாக இருப்பதால், நம்முடைய அடையாளம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ளது. ஆம், "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவான் 1:12). தேவ பிள்ளைகள் தேவனுக்கு மகிமை சேர்க்கும் நோக்கத்திற்காக உலகில் உள்ளனர்.
2) ஆதாரப்பூர்வம்:
ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் தேவன் என்பதையும், வாக்குத்தத்தையும், உடன்படிக்கையையும் மற்றும் சிறுவயதில் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்ட பிற விவரங்கள் ஆகியவற்றை மோசே நினைவுகூர்ந்தார். இருப்பினும், அவருக்கு அந்த அறிவு போதுமானதாக இல்லை. "நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்" (யாத்திராகமம் 3:13-14). அதற்கு தேவன் மோசேயிடம் தன்னை வெளிப்படுத்தி "இருக்கிறவராகவே இருக்கிறேன்" என்றார். அதுமாத்திரமல்ல இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்கும் அவருடைய உடன்படிக்கையையும், வாக்குத்தத்தங்களையும், சர்வவல்லமையையும் தேவன் நினைவு கூர்ந்தார்.
3) நம்பகத்தன்மை:
மோசே அவர்களின் தலைவராக தனது நற்சான்றுகளை எவ்வாறு காண்பிக்க முடியும் என்று வியந்தார். மோசே தன்னை எகிப்தில் கொல்லப்படப்போகும் நாடோடி என்பதாக நினைத்தார், ஆனால் தேவன் அவரை அனுப்புவதற்கான தற்போதைய யதார்த்தத்தை நினைவுபடுத்தினார். அதோடு, இஸ்ரவேலின் மூப்பர்கள் மோசேயை நம்பும்படியான அதாவது இது தேவன் தான் செய்தார் என்பதற்கான அடையாளமான அற்புதங்களை தேவன் கொடுத்தார் (யாத்திராகமம் 4: 1-9). தேவன் நம்மை அழைக்கும்போது, அவர் தம்முடைய கிருபையால் நம்மை உறுதிப்படுத்துகிறார்.
4) தொடர்பு:
மோசே தேவனிடம்; "நான் வாக்குவல்லவன் அல்ல" என்றான் (யாத்திராகமம் 4:10). மோசேக்கு தனது தலைமையைப் பற்றிய திறமையோ அல்லது அடிமைகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை திறன் பற்றியோ உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், "மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்" என்று வேதாகமம் உறுதிப்படுத்துகிறது (அப்போஸ்தலர் 7:22). ஆனாலும், அந்த மாபெரும் பணிக்கு தன்னை தகுதியற்றவனாக உணர்ந்தான்.
5) யாரையாகிலும் ஆண்டவரே:
மோசே இப்படி வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபாடு காட்ட விரும்பவில்லை. அவனைப் பொறுத்தவரையில் அவனுக்கென்று அடையாளமோ, நம்பகத்தன்மையோ, அறிவோ அல்லது திறமையோ என எது இருந்தாலும், "நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்" (யாத்திராகமம் 4:13) என்றே தேவனிடம் சொன்னான். உதவிக்கு உறுப்பினர்களை வழங்குவதாக தேவன் பதிலளித்தார்.
நான் சாக்குபோக்கு கூறுகிறேனா அல்லது அவருடைய சத்தத்திற்கு விருப்பத்துடன் கீழ்ப்படிகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran