சாத்தான் முதல் ஜோடியை பாவத்திற்கு இழுத்தது மட்டுமல்லாமல், கள்ள போதனையையும் அறிமுகப்படுத்தினான், அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான் (யோவான் 8:44), அதுமாத்திரமல்ல அனைத்து கள்ள போதகர்களுக்கும் தந்தை அவனே. ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் தந்திரமாகப் பேசினான் (ஆதியாகமம் 3:1-5). சாத்தானின் தந்திரோபாயத்தில் உள்ள ஆறு கருவிகள்/ விஷயங்கள் தெளிவாக உள்ளன, அவை இன்று கள்ள தீர்க்கதரிசிகள்/ போதகர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
1) சந்தேகம்:
"தேவன் சொன்னது உண்டோ?" என சாத்தான் இந்த சொற்றொடரை தந்திரமாக பயன்படுத்தினான். இன்றும் கூட, கள்ள போதகர்கள் தேவ வார்த்தையை மக்களுக்கு விளக்குவதில் தங்களுக்கு ஏற்றாற்போல் தங்கள் சொந்த திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் பேசுகிறார்கள்.
2) பொய் வாக்குறுதி:
கள்ள போதகர்கள் எப்போதும் ஏராளமான பொய் வாக்குறுதிகளை வழங்குவார்கள். இன்றும் சில பிரசங்கியார்கள் இருக்கிறார்கள், தாங்கள் மரிப்பதில்லை என்றும், தங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் அதே வாக்குறுதியை அளிக்கிறார்கள். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சாத்தான் "நீங்கள் சாகவே சாவதில்லை" என்பதாக வாக்குறுதி அளித்தான். வெறுமனே சாவதில்லை என்று சொல்வதற்குப் பதிலாக அதில் நம்பகத்தன்மையை சேர்ப்பதற்காக சாகவே அதாவது நிச்சயமாக சாகமாட்டீர்கள் என்றான். உண்மையில், அவன் அவர்களுக்கு ஆவிக்குரிய மரணத்தை அளித்தான்.
3) கடவுள் ஆனந்த கொலையாளியா:
சாத்தான் எப்பொழுதும் தேவனை தவறாக சித்தரிக்கிறான், அதே தான் கள்ளப் போதகர்களும் செய்கிறார்கள். "நீங்கள் அதை உண்ணும் போது அதை தேவன் அறிவார்" என்றான், ஏதோ தேவன் சந்தோஷத்தைக் கொல்பவராகவும், மக்கள் மகிழ்ச்சியாகவோ அல்லது சந்தோஷமாகவோ இருப்பதை விரும்பாதவர் போலவும் சாத்தான் ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்கினான்.
4) புதுமை:
அவர்களுடைய கண்கள் திறக்கப்படும் என்று சாத்தான் வாக்குறுதி அளித்தான். உண்மையைச் சொல்லப் போனால், அவன் ஆதாமையும் ஏவாளையும் மற்றும் அனைத்து அடுத்தடுத்த தலைமுறைகளையும் குருடாக்கினான் (2 கொரிந்தியர் 4:4). மக்களைக் கவரும் வகையில் இந்தக் கள்ளப் போதகர்கள் எப்போதும் சில தந்திரங்கள், புதிய யுக்திகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் கொண்டிருப்பதுண்டு. கள்ளப் போதகர்கள் தாங்கள் சொல்வது அல்லது நிரூபிப்பது இதற்கு முன் நடந்ததில்லை என்று உரிமைக் கொண்டாடுவார்கள்.
5) நாட்டம்:
"நீங்கள் தேவர்களைப் போல் இருப்பீர்கள்" என்று கள்ளப் போதகர்கள் மக்களுக்கு தவறான ஆசையை அல்லது நாட்டத்தை உருவாக்குகிறார்கள். எல்லா விளம்பரங்களும் அத்தகைய ஆவலை உறுதிப்படுத்துவதில்லை. ஆதாமிற்கும் ஏவாளுக்கும் தேவர்களைப் போல் இருப்பது என்றால் என்னவென்று தெரியுமா? அநேகமாக தெரியாது. இருப்பினும், அவர்கள் தங்களுக்குத் தெரியாத ஒன்றாக மாற விரும்பினர்.
6) மேலான அறிவு:
ஆதாமும் ஏவாளும் நன்மை எது தீமை எது என அறியுமளவு புதிய அறிவைப் பெற முடியும் என்று சாத்தான் கூறினான். உயர்ந்த அல்லது மாய அல்லது இரகசிய அல்லது புனிதமான அறிவுக்கான திறவுகோல் தங்களிடம் இருப்பதாகவும் கள்ளப் போதகர்கள் கூறுகின்றனர்.
சீஷர்கள் கள்ளப் போதகர்களை அவர்களது ஊழிய முறையைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
நான் சாத்தானை எதிர்க்கிறேனா அல்லது சாத்தானுக்கு உதவுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்