பெரிய வியாழன் என்ற இறுதி இராவுணவு

கிறிஸ்தவத்தில் சில மரபுகள் மிக முக்கியமானவையாக மக்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவற்றுள் இயேசுவின் இறுதி இரவுணவு எனப்படும் கிறித்தவ வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, இயேசு சிலுவையில் அறைந்து கொலைசெய்யப்பட்ட நாளுக்கு முந்தின நாளான வியாழன் கிழமை நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வு.

இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு, மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த செய்தி, வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நிசான் மாதம் 15 ஆம் நாள் புளிப்பில்லா அப்பப் பண்டிகை எனப்படும் பஸ்க்கா பண்டிகைக்கு முதல் நாள் (மத்26:17) இயேசு தம் சீடர்களோடு இறுதி இராவுணவு உண்டதாக விவிலியத்தில் புதிய ஏற்பாட்டில் மத்தேயு( 26:12) மாற்கு(14:12) லூக்கா(22:7), யோவான் 13:1:15) போன்ற பகுதிகளில் கூறப்பட்டுள்ளது.

இயேசு தம் சீடர்களோடு மரணத்திற்கு முன் உண்ட கடைசி உணவு இதுவே.அவர் இதற்கு முன்பு பலமுறை சீடர்களோடு உணவருந்தியிருப்பினும் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் நேரத்தில் ,இனி தாம் மிகவும் நேசித்த தம் சீடர்களோடு இணைந்து புவியில் உணவு உண்ணப்போவதில்லை என்பதை அறிந்திருந்த இயேசு கடைசியாக அவர்களுக்குப் போதிக்க வேண்டிய சில முக்கிய விசயங்களையும் இந்நிகழ்வில் போதித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதில் ,தாம் சிலுவையில் மரித்து பின்னர் மூன்றாம் நாள் உயிருடன் எழும்ப போகும் அதிசயத்தை, சீடர்களுக்கு மறுபடியும் முன் அறிவிக்கிறார் ( மாற்கு 14:28). அத்தோடு இந்த இராவுணவில் இறுதிப் பிரிவுரையாக ஓர் ஒப்பற்ற உரையையும் இறை வேண்டுதலையும் நடத்துகிறார்.

நீர் அவர்களை( சீடர்களை) உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக் கொள்ளாமல் ,நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்( யோவான்17;15) என்ற அவரது வேண்டுதல் மிகவும் நுட்பமானது. இன்றுவரை இவ்வார்த்தைகள் கிறித்தவர்களது நம்பிக்கை மற்றும் போதனைகளில் முக்கிய இடம் வகிக்கிறது. மேலும்
தன்னை நம்புகிற அனைவருக்காகவும் அவ்வாறே உள்ளம் உருகி வேண்டுதல் செய்கிறார் (யோவான்17:20).
ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாக வாழ வேண்டும் என்ற தனது உள்ளக்கிடக்கையை வேண்டுதலாக்கியிருக்கிறார் (யோவான் 17:23)

இந்நிகழ்வில் இயேசு, தம்மை உரோமர்களிடம் காட்டிக் கொடுக்கப் போகும் நபரான யூதாஸ் காரியோத்தை முன்னரிவிக்கிறார்(மத் 26:25 ). அத்தோடு தன்னை யாரென்றே தெரியாது என்று விடியும் முன்( சேவல்கூவும்முன்)
மூன்றுமுறை மறுதலிக்கவுள்ள பேதுரு என்னும் சீடனைக் குறித்தும் முன் அறிவிக்கிறார்(,மத் 26;34). ஆனால் அந்த சீடன் அதை மறுக்கிறார். உம்மோடே சாக வேண்டுமனாலும் சாவேன் என்று உறுதியாக கூறுகிறார். ஆனால் இயேசு சொன்னபடியே இயேசுவை மூன்றுமுறை பேதுரு என்ற அந்த சீடன் இவர் யாரென்றே தெரியாது என்று மூன்றுமுறை மறுதலிக்கிறான். மூன்றாம் முறை மறுதலிக்கும் போது இயேசு சொன்னபடியே சேவல் கூவுயது (யோவான்13:38).

இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் மிக எதார்த்தமாக நடைபெற்றவைகளாக அந்நேரத்தில் தெரிந்தாலும் பின்னர் கிறிஸ்தவம் துளிர்விடத் தொடங்கியபோது அச்சீடர்கள் அவற்றை நினைவூகூர்ந்து தங்கள் நம்பிக்கையை வலுபடுத்திக் கொள்ள ஏதுவாக இருந்ததை அறிய முடிகிறது( விவிலியம்) உலக வரலாற்றில் நடைபெற்ற இந்த மாபெரும் மரணமும் உயிர்த்தெழுதலும் நடந்து முடிந்த பிறகு, யூத மதத்திலிருந்து தோன்றிய இக்கிறித்தவம் கிளைவிட்டு எண்திசையும் வேகமாக பரவியது.
அந்த ஆரம்பக்கால கட்டத்திலிருந்தே இந்த இறுதி இரவுணவு இயேசுவின் நினைவாக கிறித்தவர்களால் வழிபாட்டு முறையாக கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது, அப்(20:7). அதற்கு முக்கிய காரணம், இந்நிகழ்வை என் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூரும்படியாக தொடர்ந்து இதைச் செய்யுங்கள் (லூக்கா22:19 ) என்று இயேசுவே தம் சீடர்களுக்கு அன்பு கட்டளை கொடுத்திருந்தார்.

அவர் அன்று தம் சீடர்களுக்கு ஆற்றிய உரை கிறித்தவத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு உயிரோட்டமானது. உலகில் எத்தனையோ தலைவர்கள், புரட்சியாளர்கள் ஆற்றிய உணரவுப் பூர்வமான உரைகள் பெரிய மாற்றங்களுக்கு அடித்தளமாகியிருக்கின்றன.

ஆனால் இயேசு கிறிஸ்துவின் இந்த இறுதி உரையும் இறைவேண்டலும் மிகப்பெரிய சமய மருமலர்ச்சிக்கும் சமுதாய மாற்றத்திற்கும் இன்றுவரை வித்திட்டுக் கொண்டே இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

இறுதி இராவுணவில் இயேசுவே அவர்களுக்கு உணவை பரிமாறுகிறார். முதலில் அப்பத்தை ( உணவு) தம் கையில் எடுத்து அதை ஆசீர்வதித்து ,இதை என்னிடத்திலிருந்து வாங்கி உண்ணுங்கள் இது உங்களுக்காக பிட்கப்படுகிற என்னுடைய உடல் என்றார். பின்னர் திராட்சரசமுள்ள பாத்திரத்தையும் எடுத்து ஆசீர்வதித்து அதை அவர்களுக்கு கொடுத்து இது உங்களுக்காகச் சிந்தப்படுகின்ற என் இரத்தத்திற்கு சமானம். இதை குடியுங்கள் என்றார்( மாற்கு 14:22,23).

இதில் மிகப் பிரதானமாக இயேசு தனது அன்புக் கட்டளையை வலியுறுத்துகிறார்: ”நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை” (யோவான் 15:12). என்கிறார்.

அன்பை மட்டுமே வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழப்போதிக்கும் இயேசு கிறிஸ்துவின் இந்த இறுதி இராவுணவின் மாதிரியை இன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது வழிபாட்டுத்தலங்களில்
முக்கியச் சமயச்சடங்காகக் கடைபிடித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இயேசுவின் இறுதி இராவுணவு நடைபெற்ற அதே நாள்( பஸ்க்காவிற்கு முந்தினநாள்) ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது. அதில் அந்நாளில் நடைபெற்ற அனைத்து விஷயங்களும் நினைவுகூரப்படுகிறது.

திருச்சபைகளில் இந்த இறுதி இராவுணவை நினைவுகூர நற்கருணை என்னும் ஒழுங்குமுறையாக அது நிறைவேற்றப்பட்டு வருகிறது. சீர்திருத்தக் கிறித்துவத்தில் பதினான்கு வயது நிறம்பியவர்களுக்கு கிறித்தவக் கோட்பாடுகள் மற்றும் திருச்சபை ஒழுங்குகள் போதிக்கப்பட்டு அவர்களைத் திடப்படுத்துதல் என்னும் ஒழுங்குமுறையில் தேர்ச்சியடையச் செய்து அதன் பிறகே இந்த நற்கருணை எனப்படும் இயேசுவின் இறுதி இராவுணவின் மாதிரியில் பங்கு கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
வரலாற்றில் இறுதி இராவுணவு அல்லது கடைசி விருந்து( The last supper) என்று வர்ணிக்கப்படும் இந்நிகழ்வை லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) என்ற புகழ்பெற்ற ஓவியர் மிகத் தத்ரூபமாக வரைந்து அழியாப் புகழ்பெற்றவராவார்.

Author: Dr. Jansi Paulraj



Topics: Lent Meditation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download