அரசனாக அறிவிக்கப்பட்டபோது தன்னை மறைத்துக் கொண்ட ஒரு தாழ்மையான நபர் ஆனால் பின்நாட்களில் தேவனால் நிராகரிக்கப்பட்ட நிலையை அடைந்தான். அவனது ஆவிக்குரிய வீழ்ச்சி கீழே பட்டியலிடப்பட்டுள்ளது;
1) பொல்லாத ஆவியால் பாதிக்கப்பட்ட சவுல் :
கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கியதும், ஒரு பொல்லாத ஆவி சவுலை கலங்கடித்தது. அதனால் சவுலின் ஊழியக்காரர்கள் "சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்" (1 சாமுவேல் 16:16). தாவீதுக்கு இந்த திறமை இருந்ததால் அங்கு வந்தான். அநேகமாக, தாவீது திரைக்குப் பின்னால் இருந்து சுரமண்டலம் வாசித்திருக்க வேண்டும்.
2) பொறாமையால் பாதிக்கப்பட்ட சவுல்:
ஒரு மகத்தான யுத்தத்தில் தாவீது கோலியாத்தை தோற்கடித்தான். ஈட்டி அல்லது வாள் இல்லாமல் வெறும் கவணைக் கொண்டு தாவீதுக்கும் இஸ்ரவேலருக்கும் கர்த்தர் வெற்றியை வழங்கினார். 'கர்த்தருக்கே ஸ்தோத்திரம்' என்று கூறினாலும் இஸ்ரவேல் தேசம் அவனை ஒரு ஹீரோவாகப் பார்த்தது மற்றும் இதன்மூலம் ஒரு நாட்டுப்புற பாடல் பொதுவானது, பிரபலமானது. "சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்" (1 சாமுவேல் 18:7). இதெல்லாம் தாவீதுடனான உறவில் பொறாமையையும், கோபத்தையும், எரிச்சலையும் மற்றும் தாவீதை கொல்ல வேண்டும் என்றளவுக்கு சவுலை ஆக்கியது.
3) சித்தப்பிரமையால் (மன நோய்) பாதிக்கப்பட்ட சவுல்:
தாவீது தனக்கு எதிராக கலகம் செய்வதாக சவுல் நினைத்தான், அவனுக்கு ஆதரவாக பலர் இருந்தனர். தாவீது தப்பியபோது, அவன் நோபில் தங்கினான். ஆசாரியனாகிய அகிமெலேக்கு பரிசுத்த அப்பத்தையும் கோலியாத்தின் பட்டயத்தையும் கொடுத்தான். சவுல் தாவீதை தேடி வந்தான், ஆனால் துரதிர்ஷ்டவசமாக எண்பத்தைந்து அப்பாவி ஆசாரியர்களை படுகொலை செய்தான் (I சாமுவேல் 21,22,23).
4) பழிவாங்கும் எண்ணத்தால் பாதிக்கப்பட்ட சவுல்:
சவுல் ஒரு இராணுவத்தை திரட்டினான் மற்றும் தாவீதை இடைவிடாமல் வேட்டையாடினான். சவுலைக் கொல்வதற்கு தேவன் இரண்டு முறை தாவீதிற்கு வாய்ப்பளித்தார். இருப்பினும், தாவீது சவுலின் உயிரை இரண்டு முறை காப்பாற்றினான். அப்போதும், சவுல் மாறவோ அல்லது மனந்திரும்பவோ இல்லை (I சாமுவேல் 24 & 26).
5) தன்னலத்தால் (தற்பெருமை) பாதிக்கப்பட்ட சவுல்:
"சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான்" (1 சாமுவேல் 15:12).
6) மரண பயத்தால் பாதிக்கப்பட்ட சவுல்:
தேவன் தனது ஜெபங்களுக்கு பதிலளிக்கவில்லை என்று சவுல் பயந்தான். மோசே நியாயப்பிரமாணத்தின்படி, அவனே தடை செய்த அஞ்சனம் பார்க்குதல், குறி சொல்லுதல் போன்றவற்றோடு ஆலோசனை செய்தான் (I சாமுவேல் 28: 3-25; லேவியராகமம் 19:31). கில்போவா மலையிலே சவுலும் அவனது மூன்று மகன்களான யோனத்தான், அபினதாப் மற்றும் மல்கிசூகா ஆகியோர் பெலிஸ்தியர்களுடனான யுத்தத்தில் இறந்தனர் (1 சாமுவேல் 31).
சவுலைப் போல நான் நிராகரிக்கப்படாமல் இருக்க நான் கவனமாக இருக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran