நேபுகாத்நேச்சார் 43 ஆண்டுகள் ஆட்சி செய்து இறந்தான். பின்பு அவனது மகன், ஏவில் மெரொதாக் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் (2 இராஜாக்கள் 25:27-30; எரேமியா 52:31-34) மற்றும் அவனது மைத்துனன் நெர்கல்சரேத்சேரால் படுகொலை செய்யப்பட்டான், அவன் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்து இறந்தான் (எரேமியா 39:3;13). ஒன்பது மாதங்கள் ஆட்சி செய்த மனநலம் குன்றிய ஒரே குழந்தையான லபோரோசோர்கோட், சதிகாரர்களின் கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டான். சதிகாரர்களில் ஒருவனான நபோனிடஸ் ராஜாவானான். நபோனிடஸின் மூத்த மகன் பெல்ஷாத்சார். அவனது ஆட்சியின் கடைசி ஆண்டுகளில், நபோனிடஸ் அரேபியாவிலிருந்து ஆட்சி செய்தான், அதே நேரத்தில் பெல்ஷாத்சார் கிமு 553 முதல் கிமு 539 இல் பாபிலோனின் வீழ்ச்சி வரை பாபிலோனில் இணை ஆட்சியாளராக இருந்தான், தானியேல் சுவரில் எழுதப்பட்டதை விளக்கினான் (தானியேல் 5).
தற்செயல்:
தேசத்தைப் பாதுகாக்கவும், சட்டங்களை இயற்றவும், நீதியை நடைமுறைப்படுத்தவும் அரசர்களுக்கு பொறுப்பு உள்ளது. இருப்பினும், பெல்ஷாத்சார் தனது பொறுப்பை நிறைவேற்ற உண்மையுள்ள ஒரு காரியதரிசியாக இருக்கவில்லை.
கவலையற்று இருத்தல்:
அநேகமாக, நபோனிடஸ் போரை நடத்துவதில் முன்னணியில் இருந்தவன் மற்றும் மேதிய-பாரசீக இராணுவத்தால் கைப்பற்றப்பட்டான்; இராணுவம் பாபிலோனைச் சுற்றி வளைத்தது. அந்த நேரத்தில் பெல்ஷாத்சார் ஆபத்தை உணராமல் சுமார் ஆயிரம் தலைவர்களுடன் ஒரு பெரிய விருந்து செய்தான்.
நம்பிக்கை:
அவனது நம்பிக்கை பாபிலோனின் வலுவான பாதுகாப்பாக இருந்தது. பாபிலோனின் வெளிப்புறச் சுவர்கள் 17 மைல்கள் (27 கிலோமீட்டர்) நீளமாக இருந்தன; சுவர்கள் 22 அடி (7 மீட்டர்) தடிமன் மற்றும் சுமார் 90 அடி (28 மீட்டர்) உயரம்; வெளிப்புறச் சுவர்களில் மற்றொரு 100 அடி (30 மீட்டர்) பாதுகாப்புக் கோபுரங்கள் இருந்தன; நகர வாயில்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டன; வெளி மற்றும் உள் சுவர்களுக்கு இடையில் அகழிகள் இருந்தன.
அவமதிப்பு:
பெல்ஷாத்சார் யூதர்கள், எருசலேம் மற்றும் யூத மதத்தின் மீது அவமதிப்பு கொண்டிருந்தான். எருசலேம் ஆலயத்திலிருந்து இருந்து எடுக்கப்பட்ட பாத்திரங்களை கொண்டு வரும்படி கட்டளையிட்டான். தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றால் செய்யப்பட்ட கடவுள்களைப் போற்றிப் புகழ்ந்தான், ஆலய பாத்திரங்களைத் தனது குடி விருந்துக்கு பயன்படுத்தினான்.
கவனக்குறைவு:
தானியேல் சுவரில் எழுதப்பட்டதை வியாக்கியானம் செய்ய வந்தபோது, வரலாற்றிலிருந்து பாடங்களைப் புரிந்து கொள்ளாததற்காக பெல்ஷாத்சாரைக் கண்டித்தான்.
ஆலோசகர்:
நேபுகாத்நேச்சாரைப் போலவே, அவனும் மந்திரவாதிகளை தனது ஆலோசகர்களாக வைத்திருந்தான், மேலும் அவனது ஆலோசனைக்காக தானியேலை நாடவில்லை.
ஐபிராத் நதி வற்றிப்போயிற்று, தரியுவின் தலைமையிலான இராணுவம் வறண்ட ஆற்றங்கரையில் நடந்து கோட்டைக்குள் நுழைந்தது. தரியு ஆளுநராக கோரேசுவால் நியமிக்கப்பட்டான்.
தவறான விஷயங்களில் எனக்கு தவறான நம்பிக்கை இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்