ஒரு கணக்கெடுப்பில், மக்களிடம் உங்கள் வீட்டில் அடிக்கடி என்ன கேட்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. சிலருக்கு உடனே பதில் சொல்லமுடியாமல், சிறிது யோசித்து பதில் அளித்தனர். மூன்று சொற்றொடர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தன. அந்த மூன்று சொற்றொடர்கள் என்னவென்றால்; 'நான் உன்னை நேசிக்கிறேன்'; 'நான் உன்னை மன்னிக்கிறேன்,' மற்றும் 'இரவு உணவு தயாராக உள்ளது'. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வரும் அனைவருக்கும் நற்செய்தி இதுதான். விசுவாசிகள் தேவ குடும்பத்தின் அங்கத்தினர்கள், ஒன்றாக நாம் அவருடைய வாசஸ்தலம் (எபேசியர் 2:19-22).
தேவன் உங்களை நேசிக்கிறார்:
"அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்" (1 யோவான் 4:8) என்று வேதாகமம் சொல்கிறது. இது உணர்வுபூர்வமான அன்பு அல்லது பிரயோஜனமற்ற அன்பு அல்லது நம்பிக்கையற்ற அன்பு அல்ல. பாவமுள்ள, வீழ்ந்த மனிதர்களான நம்மை அவர் முதலில் நேசித்தார் என்பது தேவனின் செயலூக்கமான குணம். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16). தேவ அன்பு ஒரு தியாகமான அன்பு, பாவத்தின் சம்பளம் மரணம் என்பதால் தேவ குமாரன் அவமானத்தையும் வேதனையையும் மரணத்தையும் அனுபவித்தார். தேவ அன்பு எல்லா வரம்புகளையும் அளவீடுகளையும் மீறுவதால் அதனை அளவிடவோ அல்லது பரிமாணங்களை கொடுக்கவோ முடியவில்லை.
தேவன் உங்களை மன்னிக்கிறார்:
தம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாவிகளை தம்முடன் ஒப்புரவாகச் செய்ய தேவன் தயாராக இருக்கிறார் (2 கொரிந்தியர் 5:18-20). விசுவாசிகள் நியாயப்படுத்தப்பட்டு நிரபராதிகள் என்று மட்டும் அல்ல, நீதிமான்களாக அறிவிக்கப்படுகிறார்கள் (ரோமர் 8:33). கிறிஸ்துவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தப்படுத்துகிறது. ஒருவன் தன் பாவங்களை ஒப்புக்கொண்டால் கர்த்தர் உண்மையுள்ளவராகவும் நீதியுள்ளவராகவும் இருக்கிறார் (1 யோவான் 1:7,9). தேவனை நேசிப்பது என்பது பாவத்துடன் சமரசம் செய்யாது, மாறாக உலகின் பாவத்தை மாற்றியமைக்கும் தேவ ஆட்டுக்குட்டியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வழங்குகிறது (யோவான் 1:29).
ஆட்டுக்குட்டியினாவரின் இரவு உணவு:
தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ? என்று அவநம்பிக்கையில் இருந்த இஸ்ரவேலருக்கு, தேவன் மன்னாவை அளித்து நாற்பது வருடங்கள் அவர்களை அற்புதமாக வழிநடத்தினார் (சங்கீதம் 78:19-20). கர்த்தருடைய பந்தியில், விசுவாசிகள் அப்பம் பிட்டு, திராட்சை ரசம் அருந்தி கொண்டாடுகிறார்கள், இது இந்த வாழ்க்கை பிரயாணத்தில் நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கான தேவனின் ஏற்பாடாகும். "ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்" (வெளிப்படுத்தின விசேஷம் 19:9).
அவருடைய வாசஸ்தலத்தில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்