தொடர் - 9
தன் நண்பன் ஜானைப் பார்க்கப் புறப்பட்டவர், தன் தந்தையும் குருவானவரும் முன் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
“ஸ்தோத்திரம் ஐயா” கரம் குவித்தார்.
“ஸ்தோத்திரம்! என்ன ஜெபா சுகம்தானா? ஸ்கூல்ல மாற்றமெல்லாம் செய்திருக்கையாமே!”
“ஆண்டவர் ஆசீர்வாதத்தில் எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது!” மெல்ல முறுவலித்தார்.
“உட்கார் ஜெபா! கொஞ்சம் பேசவேண்டும்” உரையாடல் எங்கெங்கொ சென்று"திரும்பியது. சிறிது நேரத்திற்குப் பின் மெல்லப் பேச்சைத் துவக்கினார்.
“ஜெபா! பியூலா திருமணமாகிப் போயாச்சு! வீடு வெறுமையா இருக்கு. சீக்கிரம் மேரேஜ்க்கு சம்மதிச்சு உங்க அப்பா, அம்மாவுக்கு பேரன் பேத்திகளைக் கொடுப்பா” சிரித்தார் குருவானவர்.
அப்பா குருவானவரை சிபாரீசுக்கு அழைத்து வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட ஜெபா மெளனமாக இருந்தார்.
“ஜெபா! அப்பா சொல்ற குடும்பம் .எனக்குத் தெரிந்தவர்கள் பெண் நல்ல குணசாலி, படித்தவள், பண்பானவள், பக்தியான பெண்” அடுக்கிக் கொண்டே போனார் குருவானவர்.
“பணக்காரப் பெண், அதை மட்டும் ஏன்யா விட்டுட்டீங்க ஐயா! நான் ஒண்ணு கேட்கிறேன். கோவிச்சுக்காதீங்க. நம்ம சபையில் இருக்கிற எல்லார் குடும்பத்தையும் இப்படி சந்திச்சு பிரச்சனைகளை தீர்வு காணச் செய்வீங்களாய்யா?”. ஜெபாவின் கேள்வி தன்னைக் குறை கூறுவதுபோல் தோன்றவே துணுக்குற்றார்.
“என்னிடம் வந்து பிரச்சனைகளைக் கூறுபவர்கள் வீட்டிற்குச் சென்று சந்தித்து ஆவன செய்துதான் வருகிறேன்! சபையின் பொருளாளர் என்ற காரணத்திற்காக நான் உங்கள் " வீட்டிற்கு வரவில்லை” காரமாக பதில் கொடுத்தார் குருவானவர்.
“ஐயா! நம்ம சபையைச் சேர்ந்த ஜான் சுகமில்லாம ஹாஸ்பிட்டல்ல இருக்கானே...” குருவானவரை நேருக்கு நேர் நோக்கினார் ஜெபசிங்.
“அது எனக்குத் தெரியாது!” பட்டென்று பதில் வந்தது.
“ஐயா! நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதேங்க! நீங்க தயவு செய்து வீடுகள் சந்திக்க முயற்சி எடுங்க அதுவும் சுகவீனமா படுத்த படுக்கையா இருக்காங்களே அவங்களைப் போய் பாருங்க. குருவானவர் உடையில் உங்களைப் பார்க்கும் அவர்கள் உங்களை அல்ல, ஆண்டவரையே பார்க்கிறாங்களே, அவர்கள் மனம் மகிழ்ச்சியடையும். இரண்டே வார்த்தை, ஒரு சின்ன ஜெபம் கூட போதுமையா! அவர்கள் மனம் ஆறுதல் அடையும். வறண்ட பாலைவனத்தில் நீரோடையைக் கண்டதுபோல் களிப்படைவார்கள். அப்பொழுதே பாதி சுகம் அவர்களுக்குக் கிடைத்துவிடும். வியாதியில் வாடுபவர்களைப் பார்க்கப் பார்க்க உங்களுக்கு அவர்கள் மீது மனதுருக்கம் ஏற்பட தேவன் வழி செய்வார். உங்களை அறியாமலேயே அவர்களுக்குக் ஜெபத்தில் மன்றாட ஆரம்பிப்பீர்கள். திருமறையில் தேவன் வாக்குத்தத்தம் செய்த குணமாக்கும் வரத்தையும் உங்கள் மீது என்றும் மாறாதேவன் பொழிந்தருளுவார். அது மாத்திரமல்ல! துன்பத்தில் வாடுகிற ஏழை ஜனங்களை பாவப் பாரத்தால் நசுக்கும் பாமர்களை தயவுசெய்து சந்திங்கய்யா! பரலோக ராஜ்யம் செல்லும் போது நமது ஆண்டவரும். “பசியாயிருந்தேன்.... வியாதியாயிருந்தேன். என்னை விசாரிக்க வந்தீர்கள்...” (மத். 26:35-36) என்று தானே நம்மை வரவேற்பார்! ஐயா! நான் உங்களை விட வயதில் , அறிவில் சிறியவன்! ஆனாலும் கூட அபிகாயிலின் ஆலோசனைக்கு செவிமடுத்த தாவீதைப் போல (1 சாமு 25) யோவாபின் யோசனைப்படி வந்த ஸ்திரியின் (2 சாமு 14:13) ஆலோசனையை ஏற்றதாவீதைப் போல் இந்த சிறியேனுடைய ஆலோசனையையும் தாங்கள் தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள். தவறு இருப்பதாகக் கருதினால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” பணிவாக ஒரு சொற்பொழிவே நடத்திவிட்டார் ஜெபசிங்.
குருவானவர் முகத்திலே ஒரு தெளிவு பிறந்தது போல் தோன்றியது. “ஜெபா! இங்கு வருவதற்கு முன் நான் ஒரு சின்ன சபையில் வேலை பார்த்தேன். வாரத்தில் ஒருநாள் புதன்கிழமை தோறும் ஓரிரு வீடுகளை சந்திப்பேன். ஆனால் இது பெரிய சபை. எனக்கிருக்கும் வேலை பளுவில் எல்லா வீடுகளையும் சந்திப்பது கடினம் என நினைத்து, யாராவது கூப்பிட்டால் செல்லலாமென முடிவெடித்தேன் ஆனால் நான் செய்த முடிவு தவறானது என்று கர்த்தர் உன் மூலம் பேசுகிறார் என்று நம்புகிறேன். ஜெபா! நீ... இல்லை... உன் மூலம் தேவன் உணர்த்தியதை உணர்ந்து இனி செயல்படுவேன் * புது மகிழ்வோடு சொன்னார் குருவானவர்.
தன் வேண்டுகோளை இவ்வளவு சீக்கிரம், மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட குருவானவரின் பெருந்தன்மையை எண்ணி மகிழ்ந்தார் ஜெபா.
டேனியல், தான் நினைத்தது ஒன்று , நடந்தது ஒன்றாக இருப்பது கண்டு திகைத்தார். அடித்துவைத்த சிலை போல் அமர்ந்திருக்கும் டேனியலைப் பார்த்த குருவானவர் நிலையுணர்ந்தார்.
“ஜெபா! நீ சொன்னதை நான் ஏற்றுக்கொண்டேன். உன் மேரேஜ் விஷயமாகக் கேட்டேனே அதுக்கு பதில் என்ன?”
“ஐயா! நம்மிடம் செல்வம் இருக்கிறது. எனவே உத்தமமான கிறிஸ்தவ ஏழைப் பெண்ணை அப்பா பார்த்து ஏற்பாடு செய்தால் திருமணம் செய்துகொள்கிறேன்” என்றவர் “ஐயா நான் ஜானைப் பார்க்கப் போகிறேன்” கரம் குவித்தார்.
“ஜெபா! நானும் ஜானைப் பார்க்க வருகிறேன்.” என்றவர் டேனியலைப் பார்த்து,
“மிஸ்டர் டேனியல், தம்பி சொல்வது சரின்னு எனக்குத் தெரியுது. நீங்க நல்லா யோசித்து முடிவெடுங்க. நாங்க வருகிறோம்”. விடை பெற்றார். இருவரும் வெளியே சென்றனர். ஒரு டாக்ஸி வாசலில் வந்து நின்றது. தன்னந்தனியே டாக்ஸியிலிருந்து இறங்கி வந்த உருவத்தைக் கண்ட டேனியல் அதிர்ச்சியடைந்தார்.
தனியாக வரும் மகளைப் பார்த்தவர். “என்னம்மா பியூலா? மாப்பிள்ளை எங்கே?” பதற்றத்துடன் விசாரித்தார் தளதளவென்றிருந்தவள், வாடி வதங்கி மெலிந்து இருந்தாள்.
ஓ” வென அழுதாள். “பியூலா, என்னம்மா? என்ன நடந்தது?” பதறினார் டேனியல் சத்தம் கேட்டு வந்த குணசீலி தன் மகளை அணைத்துக் கொண்டாள், “ஏன்? ஏன்?” வினாவில் உள்ளம் நைந்தது.
“அப்பா! அவர் குடிக்கிறார், நேரம் கழித்து வருகிறார். தினம் தினம் சண்டை!” விம்மினாள். நேற்று நான், “எங்க அப்பா என்னை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார்ன்னு அதுக்காக என்னை அடிச்சிட்டார்ப்பா. அத்தை.... எப்பப் பார்த்தாலும் என்ன கொண்டு வந்தே? என்ன கொண்டு வந்தே? அப்படின்னே கேட்கிறாங்கப்பா! நான்... வந்துட்டேன்”. தேம்பித் தேம்பி அழுதாள். முந்நூறு பவுன் நகை! 11 லட்சம் ரொக்கம்! சீர்வரிசை.... என்று அவர் செய்தது கொஞ்சமா? “மாப்பிள்ளை குடிகாரரா?” அவரால் தாங்க முடியவில்லை.
பியூலா வந்து மாதங்கள் சில உருண்டோடி விட்டன. வேதனையின் விளிம்பில் தவித்தவள் வேதத்தை வாசிக்க ஆரம்பித்தாள். ஆறுதல் தேடி கன்வென்ஷன் கூட்டங்களிலெல்லாம் கலந்துகொண்டாள். வீட்டில் மயான அமைதி நிலவியது. பணக்கார மாப்பிள்ளை வீட்டார் பியூலாவை அழைக்க வரவில்லை. தானே தன் மகளை அவர்கள் வீட்டில் கொண்டு போய்விட டேனியலின் சுயமரியாதை இடம் தரவில்லை.
இதன் தொடர்ச்சி விழி திறந்தது! வழி கிடைத்தது! என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.