கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிரிக்கவோ அல்லது நகைச்சுவையாகப் பேசவோ அல்லது புன்னகைக்கவோ இல்லை என்றும், அவர் எப்போதும் கடுமையாக இருந்தார் என்பதாக ஒரு போதகர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். ஒரு சிறுமி எழுந்து நின்று, “போதகரே, இல்லை, நீங்கள் சொல்வது தவறு. ஆண்டவராகிய இயேசு புன்னகையுடன் தான் இருந்தார்" என்ற பெண்ணிடம், கோபம் கொண்ட போதகர் விளக்கமும் ஆதாரமும் கேட்டார். அதற்கு அந்தப் பெண் சொன்னாள்; “ஆண்டவராகிய இயேசு சிரித்த முகத்துடன் காணப்படவில்லை என்றால், அவரிடம் குழந்தைகள் வந்திருக்கவே மாட்டார்கள்” என்றாள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் குழந்தைகளை வரவிடாமல் தடுத்த பன்னிரண்டு சீஷர்களைப் போல இந்த போதகர் இருந்தார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேவனிடம் கொண்டு வர மிகவும் உற்சாகமாக இருந்தனர். ஆனால், அவருடைய சீஷர்கள் அவர்களைத் தடுத்தனர். கர்த்தர் கோபமடைந்து, பிள்ளைகள் தன்னிடம் வருவதைத் தடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார் (லூக்கா 18:15-17; மத்தேயு 19:13-15). சீஷர்களுக்குப் புரிதல் இல்லை, அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும்.
1) கர்த்தராகிய இயேசுவின் இருதயம்:
பிரசங்கம் மற்றும் கற்பித்தல் ஊழியத்தின் மத்தியில், கர்த்தருக்கு குழந்தைகளுக்காக நேரம் கிடைத்தது. ஒதுக்கப்பட்டவர்களை, ஒன்றுமில்லாதவர்களை மற்றும் தாழ்ந்தவர்களை தேவன் மிகவும் நேசிக்கிறார். பல கலாச்சாரங்களில், குழந்தைகளை ஒரு பொருட்டாக எண்ணுவதே இல்லை. கர்த்தராகிய இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்க விரும்பினார்.
2) பெற்றோரின் நோக்கம்:
நல்ல பெற்றோர் குழந்தைகளின் ஆவிக்குரிய வளர்ச்சியை விரும்புகிறார்கள். யூதப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை யூத பெரியவர்களிடம் அழைத்துச் சென்று அவர்களை ஆசீர்வதித்து, பாவநிவாரண நாளின் மாலையில் அவர்களுக்காக ஜெபிக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்த போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள அழைத்து வந்தார்கள்.
3) குழந்தைகளின் மகிழ்ச்சியான விருப்பங்கள்:
குழந்தைகளின் சிறப்புப் பகுத்தறியும் தன்மை, அவர்களை நேசிக்கும், அக்கறை காண்பிக்கும், உன்னத குணம் கொண்டவர்களிடம் அழைத்துச் செல்கிறது. இயற்கையாகவே, குழந்தைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் கூடுகிறார்கள்.
4) ஆவிக்குரிய கொள்கைகள்:
கர்த்தராகிய இயேசு அவர்களை வரவேற்று, பிள்ளைகளை தன்னிடம் வர அனுமதிக்கும்படி சீஷர்களைக் கண்டித்தார். குழந்தைகள் ஆவிக்குரிய நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளில் இருந்து தடுக்கப்படக்கூடாது. அவர்கள் மீது கைகளை வைத்து ஆண்டவர் ஆசீர்வதித்தார். கைகளை வைப்பது என்பது ஆசீர்வாதத்தின் அடையாளம்.
5) ராஜ்ய மதிப்புகள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மக்களை ஒரு குழந்தையைப் போல ஆக அழைத்தார், ஏனென்றால் தேவனுடைய ராஜ்யம் சிறுபிள்ளையைப் போல மனம் படைத்தவர்களால் நிரப்பப்படும். "நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு 18:3). பிள்ளைகள் அன்பாகவும், நம்பிக்கையுடனும், கீழ்ப்படிதலுடனும் இருக்கிறார்கள்.
தேவனிடம் வரும் குழந்தைகளுக்கு நான் சுறுசுறுப்பாக உதவுகிறேனா அல்லது தடுக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்