பெண்துணையின்றி பிறந்த ஒரே பெண் ஏவாள். ஆனால் முதலில் பிசாசால் வஞ்சிக்கப்பட்டவளும் அந்தப் பெண்ணே! ஒரு பெண் வஞ்சிக்கப்பட்டதால் அவள் மூலமாய் ஈன்றெடுக்கப்பட்ட மனித குலம் அனைத்தும் பாவத்தையும் அதன் சாபத்தையும் சுமந்துகொண்டிருக்கிறது. ஏவாள் பிசாசால் வஞ்சிக்கப்பட்டபோது கடவுள், வஞ்சித்த சர்ப்பத்தையும் வஞ்சிக்கப்பட்ட ஏவாளையும் இணைத்து “உன்வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்: அவளுடைய குமாரன் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்று நம்பிக்கையின் நற்செய்தியை அறிவித்தார். ஆண்துணையின்றி உருவாக்கப்பட்ட ஏவாளைப் போன்று ஆண்துணையின்றி பிறந்த இயேசு பிசாசின் தலையை நசுக்கவே வந்தார். ஒரு பெண்ணின் அவநம்பிக்கை, கீழ்படியாமை, தனது தவற்றை பிறர் மேல் சாட்டிய குற்றம் அனைத்தையும் ஒரு பெண்ணின் வழியே வந்த இயேசு ஏற்று அதன் சாபத்தை நீக்கிவிட்டார். “மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.” (1தீமோ-2:14).
கடவுள் தோட்டத்தில் உள்ள எல்லாவிதமான கனிகளையும் சாப்பிடலாம் ஆனால் நன்மை தீமை அறியத்தக்க கனியை மாத்திரம் புசிக்கக்கூடாது என்றார் ஆனால் பிசாசு அனைத்து கனிகளையும் புசிக்கக்கூடாது என்று சொன்னாரா என்று சந்தேகத்தை எழுப்பினான். அத்துடன் அப்படி நீங்கள் சாப்பிட்டால் சாகவே சாவீர்கள் என்று கடவுள் சொன்னதை மாற்றி இவளுடைய பெலவீனமான இச்சையை தூண்டிவிட்டு உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது நீங்கள் சாப்பிட்டால் சாக மாட்டீர்கள் அத்துடன் உங்கள் கண்கள் திறக்கப்பட்டு தேவர்களைப் போலாவீர்கள் என்று சொன்னான். மரணம் என்றால் என்னவென்று தெரியாத ஏவாள் பிசாசின் வார்த்தைகளை நம்பி அவனுக்கு கீழ்படிந்து தன் கணவன் ஆதாமுக்கும் அந்த பழத்தைக்கொடுத்து இருவரும் கடவுளுடைய கட்டளைக்கு மீறி அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு நிர்வாணிகள் என்பதை உணர்ந்து வெட்கம் உண்டாகி தங்களுக்குத்; தாங்களே மீட்பைத்தேடிக்கொள்ள ஆரம்பித்தனர். அத்துடன் இதை அறிந்த கடவுளிடமே தவற்றை ஒத்துக்கொள்ளாமல் பழியை பிறர் போட்டாள். இப்படியாக வஞ்சகத்திற்குள் மாட்டிக்கொண்ட ஏவாளின் அனைத்து தீய குணங்களும் இன்று மனுகுலத்தை பீடித்திருக்கிறது. அதனைப்போக்கவே இயேசு மரியாளின் கன்னித்தன்மையை கழிக்காமலே கர்ப்பம் தரிக்கப்பட்டு பிறந்தார்.
பிசாசால் வஞ்சிக்கப்பட்ட ஏவாளின் பாவத்தைப் போக்க மரியாள் என்னும் ஒரு பெண் கணவனை அறிவதற்கு முன்பே பரிசுத்த ஆவியால் கர்ப்பமாக்கப்படுவதை விசுவாசித்து, அதனை நிறைவேற்ற ஏதுவான கிரியைகளை செய்து முடித்து, பெண்ணால் வந்த சாபத்தை பெண்ணால் போக்கும் பாத்திரமானாள் மரியாள். மரியாள் யோசேப்போடே நிச்சயம் செய்யப்பட்டிருந்த காலத்தில் அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: “கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றான். மரியாள் அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: “மரியாளே, பயப்படாதே@ நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்@ கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது” என்றான். மரியாள் தேவதூதனை நோக்கி: “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே” என்றாள். அதற்கு தேவதூதன் “பரிசுத்தஆவி உன்மேல் வரும்@ உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்@ ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்: தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை” என்றான். அதற்கு மரியாள்: “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்றாள் (லூக்கா 1:27-38).
கடவுளையும் அவருடைய கட்டளைகளையும் விசுவாசித்து கீழ்படியாமல் தன் சுய ஆசைக்கு இணங்கிய ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள். ஆனால் நம்பமுடியாத மற்றும் அவமானத்தை சுமக்கவேண்டிய சூழல் இருந்தும் கடவுளுடைய வார்த்தையை ஏற்று அவரையே விசுவாசித்து அவருடைய சொல்படி கேட்டு கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றும் மனுஅவதாரப் புருஷனை பெற்றெடுத்தாள். இயேசு பிறந்தபின்பு அதனை மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்தியை மேய்ப்பர்கள் மரியாளிடம் சொல்லி பின்பு அதனை மற்றவர்களுக்கும் சொல்லி பிரபல்யப்படுத்தியதைக் கேள்விப்பட்ட மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள் (லூக்கா 2:18-19). அவளுடைய விசுவாசம் மிகவும் பெரிது. கானாவூர் கல்யாணத்தில் இயேசு அவருடைய முதல் அற்புதம் செய்தவற்கு ஏதுவாக சீடர்களிடம் “அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே செய்யுங்கள்” என்று விசுவாசத்தோடு சொன்னாள். இறுதியில் மரியாளுக்கு இறுதி பரிசாக இயேசு தன் இடத்தில் யோவானை ஏற்படுத்தி அவளை மகிழ்வித்தார். மரியாளின் விசுவாசம் பெரிது: இயேசுவின் ஊழியத்தில் கடைசிவரை அதாவது பரிசுத்தஆவி பொழிந்தருளப்பட்ட அந்த நாள் வரை மற்ற சீடர்களுடனும் இருந்தாள். இன்றும் கிருபைப்பெற்ற தாயாக போற்றப்படுகிறாள்.
மனிதர்களின் எல்லா வஞ்சகத்தையும் பாவத்தையும் மீறுதல்களையும் தன் இரத்தத்தால் நீக்கவே கடவுள் மனிதனாகப்பிறந்தார். ஒரு பெண் வஞ்சிக்கப்பட்டதால் ஏற்பட்ட தீய விளைவை ஒரு பெண்ணால் நல்விளைவை ஏற்படுத்தும் அவரது திட்டத்தில் மரியாள் இருந்தாள். அவளுடைய விசுவாசம் நம்பமுடியாதததை நம்பவைத்தது, கீழ்படிய முடியாததற்கு கீழ்படியவைத்தது, அமைதி காக்கவேண்டிய இடத்தில் அமைதியையும் பேசவேண்டிய இடத்தில் பேசவும் வைத்தது. கிறிஸ்மஸ் கொண்டாடும் நாம் பிசாசால் பலவிதங்களில் வஞ்சிக்கப்பட்டிருந்தால் அதனைப் இயேசுவின் இரத்ததால் கழுவப்பட்டு விசுவாசத்தினால் கடவுளின் பிள்ளைகளாய் நமது நித்திய தகப்பன், கர்த்தர், சகோதரன் மற்றும் பிரபு என்ற அனைத்து உறவுகளுக்கும் சொந்தக்காரரான இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடி அதன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வோம்.