என் நண்பர்களில் ஒருவருக்கு பட்டர் சிக்கன் (butter chicken) என்றால் மிகவும் பிடிக்கும். அவர் எப்போது ஹோட்டலுக்கு (உணவகத்திற்கு) சென்றாலும் பட்டர் சிக்கனைதான் ஆர்டர் செய்வார். இப்படி இருக்கும் போது, கொரோனா காலத்தில் ஊரடங்கின் காரணமாக வெளியில் செல்ல இயலவில்லை. சரி பட்டர் சிக்கனை நாம் வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுவோம் என்று நினைத்தார்; அதை எப்படி செய்வது அதற்கு தேவையான பொருட்கள் என்ன என்று இணையதளத்தில் தேடிப் பார்த்தார். இப்போதெல்லாம் யூடியூப் போன்ற வலைதளங்களில் செய்யும்முறை எளிதாக கிடைக்கின்றதே, அதையெல்லாம் பார்த்த பின் பட்டர் சிக்கன் செய்ய தேவைப்படும் பொருட்களை ஆர்டர் செய்தார். இருப்பினும் சில பொருட்கள் அவர் மனதிற்கு பிடிக்கவில்லை, ஆகவே பிடிக்காத பொருட்களை தள்ளி வைத்து விட்டு மீதமுள்ள பொருட்களுடன் சமைத்தார். அதன் விளைவோ பயங்கரமான உணவு பேரழிவு என்று தான் சொல்ல வேண்டும். பட்டர் சிக்கனாக அது வரவில்லை. அதாவது ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை இருக்கிறது. அதை சேர்த்தால் தானே அதற்கான சுவை கிடைக்கும். ஆக, அனைத்து பொருட்களும் சேர்க்கப்படாதபோது அந்த தயாரிப்பு முழுமையற்றது, பூரணமற்றது மற்றும் சில நேரங்களில் ஆபத்தானதும் கூட.
ஆம், இப்படிதான் வேதாகமத்திலும் தேர்ந்தெடுத்து படிக்க விரும்பும் அநேகர் உள்ளனர். சிலர் மலைப்பிரசங்கத்தை மட்டுமே விரும்புகிறார்கள். வேதாகமத்தின் மற்ற பகுதிகளை அவர்கள் விரும்புவதில்லை. கர்த்தராகிய இயேசுவின் உவமைகள் சிலரை கவர்ந்திழுக்கின்றன, நீதிமொழிகள் அநேகரை ஈர்க்கின்றது, ஏனெனில் அது தார்மீக மதிப்பீடுகளைக் கொடுக்கிறது, சிலர் வெறும் சங்கீதங்ளை விரும்புகின்றனர். தேவனுடைய வாக்குறுதிகள் பலரால் விரும்பப்படுகின்றன, அவற்றை மட்டுமே படிக்கின்றனர்.
தேவன் தன்னை வெளிப்படுத்தினார் மற்றும் வேதாகமத்தின் மூலம் முழு அறிவுரையையும் வழங்கியுள்ளார் (அப். 20:27). தேவனுடைய முழு ஆலோசனையைப் பெறுவதற்குப் பதிலாக, பலர் அங்கும் இங்குமாக சில பொருட்களை (பகுதிகளை) எடுத்து தங்களுக்கென்று சொந்த 'வேதாகமத்தை' உருவாக்க விரும்புகிறார்கள். அது ஆபத்தான அணுகுமுறை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சாத்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சோதிக்க வேதாகமத்தில் இருந்து ஒரு வாக்குறுதியை அல்லவா மேற்கோள் காட்டினான். "உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்" (சங்கீதம் 91: 11-12) என்றான். ஆனால் ஆண்டவர்; "உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக" (உபாகமம் 6:16) என்ற வேத வசனத்தை மேற்கோள் காட்டி அவனை தோற்கடித்தார். முழு வேதாகமத்தின் சூழலில் இந்த இரண்டு வசனங்களையும் புரிந்து கொள்ளாமல், ஒரு நபர் சாத்தானிடம் சிக்கிக்கொள்ள முடியும்.
அதாவது வேதாகமத்திலிருந்து நம் விருப்பங்கள் அல்லது நம் தெரிவுகள் என்பது அல்ல, நாம் வேதாகமத்தை நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும், தியானிக்க வேண்டும் மற்றும் முழு சத்தியத்தையும் நம் வாழ்வில் பயன்படுத்த வேண்டும், அப்பியாசப்படுத்த வேண்டும்.
நான் தேவனுடைய முழு ஆலோசனையையும் தேடுகிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran