"ஒரு மரக்காலிலே பத்திலொரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடனே படைப்பாயாக" (யாத்திராகமம் 29:40). பல்வேறு பலிகளில் பயன்படுத்தப்படும் திராட்சரசத்தின் அளவும் தரமும் பட்டியலிடப்பட்டுள்ளன (எண்ணாகமம் 15:4-10; 28:7). இரத்த பான பலிகள் தேவனால் தடைசெய்யப்பட்டது (சங்கீதம் 16:4; 106:37-38). முதல் கனி, பெந்தெகொஸ்தே மற்றும் கூடாரப் பண்டிகைகளுடன் பான பலி குறிப்பிடப்பட்டுள்ளது (லேவியராகமம் 23:13; 18; 37). "காற்படி திராட்சரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே கர்த்தருக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படக்கடவது" (எண்ணாகமம் 28:7) இது வேதவாக்கியத்தின் நிறைவேற்றமாக காணப்பட்டது.
1) முதல் பான பலி:
யாக்கோபு தான் முதலில் பானபலி செலுத்தியவன் (ஆதியாகமம் 35:14). தேவன் யாக்கோபின் வாழ்வை மாற்றியமைப்பதற்கான காரியங்களை மேற்கொண்ட பின்பு அவன் அவருக்கு பானபலி கொடுத்தான். அவன் தேவ அழைப்பைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது, அவனால் ஆசீர்வாதங்களைப் பெற முடியவில்லை, லாபான் மற்றும் ஏசாவுடன் சமாதானம் செய்து, ஆசீர்வாதத்தையும் புதிய நாமத்தையும் பெற மல்யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. யாக்கோபு நாடு விட்டு நாடு போய் லாபானின் வீட்டில் இருந்து விட்டு மீண்டுமாய் தன் தகப்பன் வீட்டிற்கு திரும்பி வந்தான், அப்படியாக அவனுடைய ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. ஆதலால் யாக்கோபு பானபலி கொடுத்து, தேவனுடைய வீட்டிற்குத் திரும்பினான்.
2) தாவீதின் ஆட்கள்:
தாவீதின் ஆட்கள் அவனை மிகவும் நேசித்தார்கள், அவர்கள் பெத்லகேமிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். மூன்று பேரும் பெலிஸ்தியர்களின் முகாமை உடைத்து, பெத்லகேமுக்குச் சென்று, தாவீது விரும்பிய தண்ணீரைக் கொண்டு வந்தனர். ஆனால் "தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்றுசொல்லி," தாவீது அதை குடிக்கவில்லை (1 நாளாகமம் 11:15-19). சில விளக்கவுரையாளர்கள் அந்த மூவர் யோசேப்பாசெபெத், எலெயாசார் மற்றும் சம்மா என கருதுகின்றனர் (2 சாமுவேல் 23:25).
3) விலை உயர்ந்த வாசனை திரவியம்:
ஒரு பெண் கர்த்தராகிய இயேசுவிடம் வந்து, அவரை அபிஷேகம் செய்வதற்காக (முந்நூறு டெனாரி; ஒரு வருட சம்பளம்) விலையேறப்பெற்ற வாசனை திரவியத்தை கொண்டு வந்து ஊற்றினாள் (மத்தேயு 26:7; யோவான் 12:5). மற்றவர்கள் கோபமடைந்தனர், கர்த்தராகிய இயேசு அது அவருடைய அடக்கத்திற்காக செய்யப்பட்டது என்று கூறினார். இதுவும் பானபலி போன்றதே.
4) பவுலின் வாழ்க்கை:
பவுல் தனது வாழ்க்கையை தேவனுக்கு ‘பானபலி’யாக செலுத்தியதாக எழுதுகிறார் (பிலிப்பியர் 2:17; 2 தீமோத்தேயு 4:6). தேவனிடம் முழுமையாக அர்ப்பணிப்பதைக் குறிக்க அவர் தன்னை 'ஜீவ பலி' என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்.
என் வாழ்க்கை கர்த்தருக்குப் பான பலியாகுமா?
Author : Rev. Dr. J. N. Manokaran