யாக்கோபு ஏசாவின் ஆசீர்வாதங்கள் உட்பட முதற்பேறான உரிமைகளை பறித்துக் கொண்டான். அதனால் ஏசா யாக்கோபைக் கொல்ல விரும்பினான் (ஆதியாகமம் 27:41). அப்போது புத்திசாலித்தனமாக, ரெபெக்காள் யாக்கோபைத் தன் சகோதரன் லாபானுடைய இடத்திற்கு வெகு தூரத்தில் அனுப்பினாள். யாக்கோபு அங்கு திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தனது வீட்டிற்குத் திரும்புகிறான். அண்ணன் ஏசாவை நினைத்து பயமும் இருந்தது, தன்னை பழைய கோபத்தில் கொன்று விடுவானோ என நினைத்தவனாய் திரும்ப வந்துக் கொண்டிருந்தான். சரி மனிதர்களால் ஒப்புரவாகுதல், மன்னிப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளல் என்பது முடியுமா? யாக்கோபுவினால் சரியாக ஜெபிக்க கூட முடியவில்லை, ஒருவித பயமும் பெருமூச்சோடும் வேண்டுதல் செய்பவனாய், தன் சகோதரனை சமாதானப்படுத்தும் முயற்சியில் வெகுமதிகளை அனுப்புகிறான் (ஆதியாகமம் 32:11; 13-20). ஒருவேளை, தான் கொள்ளையடித்ததைத் திருப்பிக் கொடுப்பது, தான் ஏமாற்றியதை ஈடுகொடுக்கலாம் என்று யாக்கோபு நினைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி அழுதார்கள், யாக்கோபு தன் குடும்பத்தாரை ஏசாவிடம் அறிமுகம் செய்தான், அவர்களும் தங்கள் மரியாதையைத் தெரிவித்தனர்; ஆனால் ஒரே இடத்தில் இணைந்து ஒன்றாக வாழவில்லை (ஆதியாகமம் 33:4).
மனம் திருந்திய மகன்:
ஊதாரி மகனின் உவமையில், இளைய மகன் தன் தந்தையுடன் ஒப்புரவாக விரும்பினான். தகப்பனானவர் தன்னை மகனாக அல்ல, வேலைக்காரனாக கூட ஏற்றுக் கொள்ளட்டும் என தாழ்ந்த நிலையை ஏற்கத் தயாராக இருந்தான். ஆனால் இரக்கமுள்ள தந்தை அவனை மீண்டும் மகனாகவே ஏற்றுக் கொண்டார் (லூக்கா 15:11-32).
முறிந்த உறவு:
ஆதாமும் ஏவாளும் தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிட்டு தேவனுக்கு எதிராக பாவம் செய்தபோது, அவர்கள் எதிர்கால சந்ததியினரையும் தேவனுடனான உறவு இல்லாதபடி முறித்தனர்.
தேவனுடனான ஒப்புரலாகுதல்:
பரிசுத்த தேவன் பாவமுள்ள மனிதருடன் ஒருபோதும் ஒப்புரவாக முடியாது. ஆம், பாவத்தின் சம்பளம் மரணம். பாவிகளை தண்டிக்காமல் தேவன் பாவத்தோடு ஒப்புரவு செய்து கொள்ள முடியாது. எனவே, தேவ குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மாம்சமாகி, தேவக் கோபத்தை, மரண தண்டனையைத் தானே எடுத்தார். கர்த்தரின் பரிசுத்த குமாரன் மனிதகுலத்தின் சார்பாக மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறினார்.
முன்முயற்சி:
தேவன் ஒப்புரவாக்குதலின் செயல்முறையைத் தொடங்கினார். மனிதர்களால் முறிந்த உறவில் கர்த்தராகிய ஆண்டவர் ஒரு அப்பாவி, இதில் குற்றவாளிகள் மனிதர்கள். ஆனால் கிருபையுள்ள தேவன் நம்மைத் தம்முடன் ஒப்புரவாக்கி ஒப்புரவாக்குதலின் ஊழியத்தைச் செய்தார், அது பரிசுத்த நீதியைப் புறக்கணிப்பது என்று அல்ல. தேவனுடைய குமாரனின் நீதியான பலியில் தேவனுடைய பரிசுத்த கோரிக்கைகள் திருப்தியடைந்தன (2 கொரிந்தியர் 5:18-20).
ஒப்புரவாகுதலின் ஊழியம்:
தேவனோடு ஒப்புரவாகுதல் செய்து, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நீதிமான்களாக்கப்பட்ட விசுவாசிகள், பாவமுள்ள மனிதர்களை தேவனோடு ஒப்புரவாக செய்யும் ஊழியத்தை நிறைவேற்ற அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.
நான் ஒப்புரலாக்குதலின் ஊழியத்தை நிறைவேற்றும் ஒரு தூதராக செயல்படுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்