சார் போஸ்ட்” பக்கத்து வீட்டுக்கு கவர் ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்று கொண்டிருந்த போஸ்ட்மேனைப் பார்த்தபடி கோபத்துடன் நின்று கொண்டிருந்த சாந்தாவை,
“சாந்தா” என்ற தயாமணியின் மெல்லிய குரல் அழைத்தது. உள்ளே சென்றாள். நார்கட்டிலில் நாராகப்படுத்திருந்த ஏக்கம் நிறைந்த விழிகள், சாந்தாவின் கரங்களை நோக்கியது.
“இன்னைக்கும் வரலையம்மா” குரல் நடுங்கியது.
“இல்ல பாட்டி” சாந்தாவின் விழிகள் கலங்கின. அதைக் கவனித்த தயாமணி சாந்தாவை அழைத்து , அணைத்துக்கொண்டாள்.
நீ ஏம்மா அழறே? அழாதேடா கண்ணு!” தயாமணியின் நடுங்கும் விரல்கள் சாந்தாவின் விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டன. தயாமணியின் விழிகள் மூடின.
30ஆண்டுகள் பின்நோக்கிச் சென்றது அவள் நினைவு. இருபத்தெட்டு வயது நிரம்பியிருந்த அவளை தனியே விட்டுவிட்டு இறைவனடி போய்விட்டான் அவள் அன்புக் கணவன் டேவிட். அவன் அவளுக்கென்று விட்டுச் சென்ற சொத்து மூன்று வைரங்கள் அதாவது நண்டும் சிண்டுமாக மூன்று குழந்தைகள். அவள் குழந்தைகளை வைரமாகத் தான் நினைத்தாள். அழுதழுது ஓய்ந்தவிட்ட அவள், வாழ்க்கையோடு போராட ஆரம்பித்தாள்.
ஆசிரியைப்பணி செய்து வந்தவள், வீட்டிலும் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்தாள். இரவெல்லாம் தையல் மிஷினோடு போராடினாள்! தேவனிடம் ஜெபத்தில் மன்றாடினாள். தந்தையில்லை என்ற குறையை குழந்தைகள் உணரா வண்ணம் வளர்த்தாள்.
“மெரிட் ஸ்காலர்ஷிப்” வாங்கி நன்கு படித்த மூத்த மகன் ஜெபராஜை அவன் விருப்பப்படி டாக்டருக்குப் படிக்க வைத்தாள். படித்து முடித்து பட்டத்துடன் தன்னுடன்படித்த மாலாவை மணம் முடித்து வீடுவந்து, தாயைப் பார்த்தான் ஜெபராஜ். திகைத்தாள் தயாமணி! பணக்காரப்பெண் மாலாவின் குடும்பத்துடனே திருச்சியில் தங்கிவிட்டான் இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறான் ஜெபராஜ்.
அடுத்தவன் ஜெயராஜ் கோயம்புத்தூரில் இருக்கிறான், ஒரு நல்ல கம்பெனி மானேஜராக! சொந்தக்காரப்பெண் சுமதியை அவனுக்கு மணம் முடித்தாள் தயாமணி.
மூன்றாவதான தன் மகளை தன் சக்திக்கும் மிஞ்சி கடன்பட்டு பணக்கார இடத்தில் மணம் முடித்துக் கொடுத்தாள்.
தன் கடமைகளை முடித்த தயாமணி ஓய்வு பெற்ற ஆசிரியையானாள். கிராஜுவிடி, நலநிதி அனைத்தும் கடன்களுக்குச் சரியாகிவிட்டது. மூத்தமகன் குடும்பத்துடன் போய் தங்க முடியாது. இளையமருமகளோ தன் ஆடம்பர வாழ்வுக்கு அத்தை குறுக்காக இருப்பார்களோ என எண்ணினாளோ என்னவோ, தயாமணியை வீட்டோடு வைத்துக்கொள்ள முன்வரவில்லை. தனித்தவளானாள் தயாமணி!
ஓய்வூதியத்துடன் தன் காலத்தை ஓட்ட ஆரம்பித்தாள். உழைத்து உழைத்து களைத்த உடல் தேய்ந்திருந்தது. அவள் மனமோ அன்பிற்கு ஏங்கியது. தன்னை “அம்மா என அழைக்கும் எதிர்வீட்டு சுந்தரை தன் மகனாகக் கண்டாள். அவன் மனைவி சுந்தரியை தன் மகளாகக் கருதினாள். அவர்கள் மகள் சாந்தாவை தன் பேத்தியாகப் பாவித்தாள். 15வயது நிரம்பிய சாந்தாவும் “பாட்டியம்மா, பாட்டியம்மா” என அவளைச் சுற்றிச் சுற்றி வந்தாள். திருமறையில் வரும் சம்பவங்களை கதைகளாக சாந்தாவிற்கு கூறுவதில் ஒருவாறு மனஅமைதியும் சந்தோஷமும் அடைந்தாள் தயாமணி.
இந்நிலையில் சுகவீனம் அடைந்தாள் தயாமணி. முதலில் சாதாரண சுரம் என நினைத்தாள். ஆனால் உள்ளூர் மருத்துவர் கொடுத்த மருந்துக்குக் கட்டுபடாமல் படுத்த படுக்கையாக மாற்றியபோது . சாந்தா குடும்பத்தினா் திகைத்தனர். அவர்கள்தான் தயாமணியை கவனித்து வந்தனர். தன் மக்கள் மூவருக்கும் கடிதம் எழுதச் சொன்னாள்!
நாட்கள் உருண்டன. மாமியார் கொடுமைக்கு ஆட்பட்ட மகளிடமிருந்து கண்ணீர் கடிதம் வந்தது. மகன்களிடம் இன்றுவரை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து கொண்டிருந்தாள்.
நனவுலகிற்கு வந்தாள் தயாமணி. அவள் இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. குடும்பப்போட்டோவை எடுத்துத் தரும்படி கேட்டாள். குழந்தைகளாகப் புன்முறுவலுடன் வீற்றிருந்த தன் பிள்ளைகள் மூவரையும் முத்தமிட்டாள்! தன் உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்து தான் வளர்த்த பிள்ளைகள் இன்று தன்னை வெறுத்து ஒதுக்கி விட்டார்களே என எண்ணினாள்! கண்ணீர் முத்துக்கள் உருண்டன.
“மகளே” கனிவு நிரம்பிய அழைப்பு! நிமிர்ந்தாள் தயாமணி. அன்பே உருவான இறைவேந்தன் இயேசுகிறிஸ்து நின்றிருந்தார். “பாவத்தில் வீழ்ந்துவிட்ட மனுக்குலத்தை மீட்க விண்மகிமை விட்டிறங்கி மானிடனாகப் பிறந்த இயேசுவை சிலுவையில் ஆணியடித்துக் கொன்றார்களே! அவரால் கண்திறக்கப்பட்ட குருடா்களும், சுகமாகிய குஷ்டரோகிகளும் நன்மைகள் பெற்ற பலரும் வேதபாரகா்களுக்கும், ஆசாரியரா்களுக்கும் பயந்து அன்று வாய்மூடி மெளனமானார்களே! நீ பட்ட கஷ்டங்கள் உன் பிள்ளைகளுக்காகத்தானே! “என்று அவள் மனம் அவளுக்கு ஆறுதல் கூறியது.
இயேசு கிறிஸ்துவின் முகம் மலர்ந்து, கரங்கள் அவளை நோக்கி நீண்டன! தயாமணியின் முகம் பிரகாசமடைந்தது. விழிகள் ஒளி சிந்தின.
அதோ!....... என் தெய்வம் இயேசு நிற்கிறார்............ அதோ! என் கணவர்! சாந்தா! உன் தாத்தா நிற்கிறார்” கூவினாள் தயாமணி! சாந்தா பார்த்தாள்! அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை! பயம் அவளைக் கவ்வியது.
சாந்தாவின் தலைமீது தன் வலது கரத்தை வைத்து, “மகளே! கர்த்த உன்னை ஆசீர்வதிப்பாராக” என்றாள் தயாமணி. சாந்தாவின் தலைமீதிருந்த தயாமணியின் வலதுகரம் துவண்டு விழுந்தது. இதயம் அடங்கியது. விழிகள் மூடின. மாறாத புன்னகை முகத்தில் நிலைத்தது. நல்ல போராட்டத்தை போராடிய அவள் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.
“பாட்டி! பாட்டி!” கதறினாள் சாந்தா அந்நேரம் கஞ்சி கொண்டுவந்த ரமா, கஞ்சியை கீழே போட்டுவிட்டு “அம்மா, அம்மா,” எனக் கதறினாள்! செய்தி பறந்தது.
மூன்று கார்கள் அடுத்தடுத்து அந்த சின்னவீட்டை நோக்கி விரைந்தன. ஒவ்வொரு காரிலிருந்தும் ஆளுயர ரோஜா மலர் மாலைகளுடனும், கண்ணீருடனும் இறங்கினர். மாலைகளும், மலர்களும் தயாமணியின் உடல்மீது குவிந்தன.
உயிரோடு இருந்தபோது ஒரு அன்பு வார்த்தை கூறாதவர்கள் அழுது ஆதரவற்றதும், ஒரு வாய் அன்னமிட்டு ஆதரிக்க மனமற்றவர்கள் மலர் மாலைகளைக் குவிப்பதும் ஏனென்று பிஞ்சு உள்ளங்கொண்ட சாந்தாவிற்குப் புரியவில்லை!
பெண் ஒரு மெழுகுவர்த்தி மெழுகுவர்த்தியாகிய அவள் மணநாளாம் புனித நாளன்று ஏற்றப்படுகிறாள். அன்று முதல் அழகாக ஒளி சிந்தி எரிகின்றாள். பிறருக்கு ஒளிதர.... ஆம் பிறர்வாழ அவள் கரைய வேண்டும். அவள் தியாகத்தால்தான் குடும்பம் வாழ்கிறது. இன்னும் ஏற்றப்படாத மெழுகுவர்த்தியாகிய சாந்தாவிற்கு இது எப்படிப் புரியும்? எரிந்து கரைந்து மறைந்துவிட்ட மெழுகுவர்த்தியாம் தயாமணியின் உடலைச் சுற்றி மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. .
இந்த கதை இதயம் தந்த பரிசு என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.