தொடர் - 1
நீல வண்ண வானில் வெண்ணிலவு பவனி வந்து கொண்டிருந்த முன்னிரவு வேளை! விருதுநகர் நோக்கி விரைந்து கொண்டிருந்தது அந்தப் புகைவண்டி சாளரத்தின் அருகே அமர்ந்திருந்த அந்தக் கன்னியின் இதயம் படபடவென இயல்புக்கு மாறாக அதிவேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. ஒரு தாயும் அவருடைய செல்வக் குமாரனும் ஏறினார்கள். பரிசுத்தத்திற்கு இலக்கணம் வகுத்துத் தரும் அந்த அன்னையின் திரு முகத்தில் அன்பும், பண்பும் போட்டியிட தெய்வீகக் கலை காணப்படுகிறது. அவரோடு பெட்டியில் ஏறிய
சேஷ்டபுத்திரனுடைய முகம் மண்ணிலே வெண்ணிலாவென பிரகாசித்தாலும், அதிலும் வாலிபப் பிராயத்துக்குரிய குறும்பல்ல, தன் அன்னையின் பரிசுத்தமே மேலோங்கி நின்றது.
மலரத்துடிக்கும் லீலிமொட்டெனத் திகழ்ந்த அந்த வனிதையின் வதனத்தில் மலர்ச்சியோடு, பெண்மைக்குரிய நாணமும் போட்டியிட கரம் குவித்தாள். இதயத் துடிப்பின் வேகமும் அதிகரித்தது. சாதாரணமாக பேச ஆரம்பித்தார் அந்த அன்னை.
சற்று நேரத்தில் அந்த இளைஞன், ''நான் இன்றைக்கு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் நல்ல வேலையில் இருக்கிறேன். எனக்கு பதவி உயர்வு தேடிவரும். அதில் சந்தேகமில்லை. ஆனால் என் மனதில் ஊழிய வாஞ்சை அதிகம் எந்த நேரத்தில் ஆண்டவர் அழைத்தாலும் பதவியைத் துறந்து விட்டு ஊழியத்திற்குச் சென்று விடுவேன். அது உனக்கு சம்மதந்தானா?'' அந்தக் காரிகையின் கண்களை ஆர்வமுடனும், தீர்க்கமுடனும் நோக்கினார். பட்டாம்பூச்சியின் இறக்கைகள் என படபடவென இமைகள் துடிக்க, தன் தலையை அழகாக அசைத்து சம்மதம் தெரிவித்தாள் அந்த இளமங்கை.
இதற்குள் புகைவண்டி கோவில்பட்டியை அடைந்தது. ““இனிப்பு வாங்கு, உன் மாமா வீட்டிற்குக் கொடுத்துவிடு'' அன்னையின் ஆணையை அன்புமகன். நிறைவேற்றும் வண்ணம் இனிப்புப் பலகாரங்களை வாங்கிக் கொடுத்தார். இருவரும் விடைபெற்றுச் சென்றனர்.
யார் இவர்கள்?
இயேசுகிறிஸ்து என்ற நற்கந்தத்தை தன் இதயப் பேழையில் ஏற்று அவருக்கு சேவை செய்து கொண்டிருந்ததால் தானும் அவ்வாறே மணம் வீசிய பரிமளம் என்ற அம்மையாரும், அவருடைய திருக்குமாரன் பேட்ரிக் ஜாஷ்வா அவர்களும்தான்.
ஆயுள் காப்பீட்டுக்கழகத்தில் (டெவலப்மெண்ட்) வளர்ச்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவருக்கு திருமணம் முடிக்கப் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். ''நாதர் இயேசுவை நாடெல்லாம் அறிய வேண்டும்! நலிந்திருக்கும் சமுதாயம் நலம் பெற வேண்டுமென உழைத்துவரும் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவில் ஆர்வமுடன் இணைந்து தம்மால் இயன்ற பணிதனை, ஆற்றிவரும் இளைஞர் பேட்ரிக் அவர்கள், தனக்கு வரப் போகும் வாழ்க்கைத்துணையும் அவ்வித தாகமுடையவராய் இருக்க வேண்டுமென எதிர்பார்த்ததில், விரும்பியதில் வியப்பொன்றுமில்லையே! கூட்டுறவுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் திரு. ஆர்.வி. சகாயம் என்ற நீதிமானுக்கும், திருமதி. நல்லம்மாள் என்ற நல்லாசிரியைக்கும் , பிறந்த செல்லக் குமாரத்தி சுசீலா தான் அந்த நங்கை நல்லாள்.
இளமைப் பருவம் :
தங்கள். சொந்த ஊரான நாசரேத்-ஐ விட்டு வேலையின் நிமித்தம் விருதுநகரில் குடியிருந்தனர். விருதுநகர் வரும்முன் புதூரில் குடியிருந்தனர் சகாயம் தம்பதியினர். அவர்களின் மூத்த மகன் தாம்ஸன் சிறு பையன். சுசீலா கருவில் வளரும் சமயம். அவர்கள் குடியிருந்த வீடு பழங்காலத்திய வீடு, மண்தரை. ஒருநாள் இரவு நல்லம்மாளின் தலையை ஏதோ தட்டுவது போல் உணரவே பாயை எடுத்துக் கொண்டு, வேறு பக்கம் போய்ப் படுத்தார்கள். தூக்கம் வரவில்லை. மனது அலைபாய்ந்தது. எழுந்து விளக்கைப் போட்டார்கள். கணவரை எழுப்பினார்கள். கழிவு நீர் வெளியேறும் தொட்டியில் பெரிய நல்ல பாம்பு படுத்திருந்தது.
ஏற்கனவே குடியிருந்தவர்கள் பாம்பு வளர்த்து வந்ததாக பின்னர் அறிந்தனர். தான் முதலில் படுத்திருந்த இடத்தைப் பார்த்தார். அங்கு பொந்து காணப்பட்டது. பொந்திலிருந்து வெளியே வர முயன்ற பாம்பு பாய் விரித்திருக்கவே உள்ளேயிருந்து கொத்தியிருக்கிறது.
தேவராஜ்யம் பரவ தன்னையும் தன் குடும்பத்தையும் அர்ப்பணிக்கப் போகும் சுசீலாவை கருவிலேயே அழித்திட சாத்தான் முனைந்திருக்கின்றான். தேவகரம் அவர்களோடிருந்ததால், அவனுடைய விஷப் பற்களுக்கு இவர்கள் தப்பிவிட்டார்கள். பாம்பை அடித்துக் கொன்றனர். அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தார் நல்லம்மாள். “சுசீலா மார்கிரேட் பியூலா எனப் பெயர்சூட்டி அகமகிழ்ந்தனர்.
கோயம்புத்தூரில் சிலகாலம் இவர்கள் வசிக்க நேர்ந்தது. அப்பொழுது வீட்டின் அருகே குடியிருந்த மாஜிஸ்டிரேட் குடும்பத்தோடு இவர்களுக்கு நல்லதொரு நட்பு நிலவி வந்தது. மாஜிஸ்டிரேட்டின் மகள் விஜயராணி இறந்துவிட்ட காரணத்தால் அதிக துக்கத்தோடிருந்த குடும்பத்தினருக்கு சுசீலா, ஆறுதல் தரும் அருமருந்தாக, அவர்கள் வீட்டின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தாள். மாஜிஸ்டிரேட்டின் மனைவியும் ''விஜயராணி! விஜயராணி!'' என மனங்குளிர, வாய் நிறைய அழைத்து, கொஞ்சி மகிழ்ந்தனர். அந்த அன்னையின் அன்பு ஆழியில் மூழ்கித் திளைத்த பிஞ்சு உள்ளம் எல்லையிலா மகிழ்வில் வளர்ந்து வந்தது.
இந்நிலையில் விருதுநகரில் கூட்டுறவுத் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றார் ஆர்.வி. சகாயம் அவர்கள் திருமதி. நல்லம்மாள் அவர்கள். விருதுநகர் நகரவைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியேற்றார்.
செந்தில் குமார் நாடார் மீனாட்சி அம்மாள் உயர் தொடக்கப் பள்ளியில் தன் பள்ளிப் படிப்பை ஆரம்பித்தார் சுசீலா! வகுப்பு ஆசிரியை பெயரைக் கேட்க, “என் பெயர் விஜயராணி' என சுசீலா பதில் கூற,
'உன் பெயர் சுசீலா என்றுதானே எழுதியிருக்கிறது' என ஆசிரியை கூறவே,
5 வயது குழந்தைக்கு கோபம் வந்து விட்டது. 'விஜயராணி', 'விஜயராணி' என பாசமழையில் நனைந்த அந்த பிஞ்சு உள்ளம் விஜயராணி என்ற பெயரை மறக்கவே இல்லை.
தன் பள்ளிப்பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு, வகுப்பறையை விட்டு சுசீலா ஓட,
சுசீலா வீட்டுக்கு ஓடுறா டீச்சர்'' என சக மாணவர்கள் ஐந்தாறு பேர் கத்திக் கொண்டே விரட்ட, அவர்கள் பின்னால் ஆசிரியை ஓடிவர அங்கு ஒரு ஓட்டப்பந்தயமே நடைபெற்று விட்டது. பள்ளிக்கு அருகிலேயே இருந்த சுசீலாவின் இல்லத்திற்கு அனைவரும் வந்து சேர்ந்தனர். அன்று எதிர்பாராத விதமாக சுசீலாவின் அன்னையும் அனுமதி விடுப்பு எடுத்துக் கொண்டு. வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
“என்னை . விஜயராணின்னு கூப்பிடலை. நான் ஸ்கூலுக்குப் போகமாட்டேன்'' குழந்தை தன் கோபத்தின் காரணத்தைக் கூறி அழ, அன்னைக்குத் தன் குழந்தையின் கோபம் புரிந்தது.
*விஜயராணி' என்ற பெயர் சுசீலாவிற்கு எப்படி வழங்கப்பட்டது என்ற விபரத்தை அன்னை ஆசிரியைக்கு எடுத்துக் கூறவே, ஆசிரியைக்கு சுசீலாவின் மனநிலை புரிந்தது. ஆசிரியை அல்லவா? பிஞ்சு மனத்தின் ஏக்கத்தைப் புரிந்தவர்கள் அவர்கள்தானே.
சுசீலாவை அணைத்துக் கொண்டு, ''உன் பெயர் விஜயராணியா? எனக்குத் தெரியாமப் போச்சே. சரி! இனிமேல் உன்னை விஜயராணி என்றே கூப்பிடுறேன்? என்னம்மா?!” அன்போடு கூற, குழந்தை மனதில் மகிழ்ச்சி பொங்க ஆசிரியையின் கரம் பற்றி பள்ளி சென்றார் குழந்தை சுசீலா.
பள்ளியில் 'விஜயராணி' என்ற பெயரே வழங்கலாயிற்று. மற்றொரு முறை, வீட்டிற்குள் கட்டிலின் கீழே சுசீலா ஒளிந்து கொண்டாள். ''சுசீலா, சுசீலா!” என அழைத்தபடி வீடு முழுவதும் தேடிய தாய், கலவரம் அடைந்தவர்களாக 'எங்கே போய் தேடுவது?'' எனக் குழம்பிப் போய் நின்றார்கள். வீட்டை வீட்டு வெளியே சென்று தேட எண்ணியவர்கள். திடீரென நினைவு வரவே, ““விஜயராணி'” எனக் குரல் கொடுக்க,
*ஊம்'” எனக் குரல் கொடுத்துக் கொண்டே சிரித்தபடி, கட்டிலின் கீழே இருந்து வெளியே வந்த சிறுமி சுசீலா, அன்னையைக் கட்டிக் கொண்டாள்.
“சின்ன விஜய ராணி
செல்ல விஜய ராணி
வடைக்காகப் பாடுகிறாள்
வட்டமிட்டுத் திரிகிறாள்
சின்ன உளுந்த வடையாம்
காரம் போட்ட வடையாம்.
மிளகாய் துண்டு சிறுதுண்டு
கடித்தாளே நறுக்கென்று
துள்ளி துள்ளி குதிக்கிறாள்
தேம்பித் தேம்பிஅழுகிறாள்””
முதலாம் வகுப்பில் கற்றுக் கொடுத்த இந்தப் பாடல் சுசீலாவின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாடலாகும்.
அன்பினால் அநேகரை ஆட்கொள்ளப். போகும் சுசீலாவின் அன்புமனம் குழந்தைப் பருவத்திலேயே வெளிப்பட்டது. இளமையில் நடனம், நாடகம் இவற்றில் விருப்பமுடையவர்கள் விளையாடுவதற்கு நண்பர்கள் கிடைக்காத போது; வீட்டிலுள்ள கோழி, நாய் இவற்றோடும், பொம்மைகளோடும் நாடகம் போல் பேசி விளையாடுவார்கள். தன் தங்கையின் இளமைப் பருவ நாடக விளையாட்டுக்களைப் பற்றிக் கூறும் போது சுசீலா அவர்களின் அண்ணன் தாம்சன், இனிமையான அந்த நினைவுகளில் மூழ்கி, மகிழ்வில் புன்னகைப் பூக்கிறார்.
சுசீலா அவர்களின் தம்பி வில்சன். உடன் பிறந்த மூவருக்கும் விளையாட்டிற்குக்கூட சண்டை வந்தது கிடையாது இவர்களிடையே பாச உணவு அதிகம். நண்பர்களாகவே பழகினார்கள்.
சிறுமி சுசீலா ஆரம்பக் கல்வியை முடித்து 'தங்கம்மாள் பெரியசாமி முனிசிபல். உயர்நிலைப் பள்ளியில் தன் படிப்பைத் தொடர்ந்தார்கள். உயர்நிலைப் பள்ளியில் அடியெடுத்து வைத்த போதுதான், தன்பெயர் பற்றி உணர்ந்து, 'சுசீலா” என தன் பெற்றோர் இட்ட பெயரை அந்தப் பிஞ்சு மனம் ஏற்றுக் கொண்டது. கல்வித்துறையில் சிறந்த பணியாற்றிவரும். பாளையங்கோட்டை சாராடக்கர் கல்லூரியில் தன் கல்லூரிப் படிப்பை முடித்தார்கள். புகழ்பெற்ற சென்னை கிறிஸ்டோபர் டிரைனிங் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியினை திறம்பட முடித்து, பாளையங்கோட்டை சாரா டக்கர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக அமர்ந்தார்கள்.
இதன் தொடர்ச்சி ஞான ஜோதி என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை அணையா தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.