தொடர் - 22
நிர்வாகி மாற்றம்! பழைய நிர்வாகிக்கு வழியனுப்பும் விழா! தலைமையாசிரியர் பட்டும் படாமல் விலக, உதவித்தலைமையாசிரியர் உதவியுடன் ஜெபாவின் உழைப்பில் மாணவர்களின் ஒத்துழைப்பால் சிறப்பாக நடைபெற்றது. புதிய நிர்வாகி கருணாகரனுக்கு வரவேற்பு, வைபவம் தலைமை ஆசிரியர் தலைமையில் தடபுடலாக நடந்தது. கணித ஆசிரியர், கந்தசாமி, கருணாகரனை வானளாவப் புகழ்ந்தார். பள்ளியின் தரம் இடையில் சீர்கெட்டுப் போனதாகவும், அதைத் திரும்ப புதிய நிர்வாகியின் நிர்வாகத்தில் சீர்பெறுமென தான் நம்புவதாகவும் எடுத்துரைத்தார். விழா வெகு சிறப்பாக விருந்துகளுடன் முடிந்தது. பள்ளியில் பல மாறுதல்கள் நிகழ ஆரம்பித்தன. பொதுப் பிரார்த்தனை மறைந்தது. பள்ளி ஸ்டோர் உதவித் தலைமையாசிரியரிடமிருந்து குருசாமி கைக்கு மாறியது. ஸ்டோரில் நோட்டுகள் கலர் பாக்ஸ் அனைத்து பொருட்கள் விலையும் அதிகமாகயிருந்தது. மாணவர்கள் வெளியே வாங்க அனுமதிக்கப்படவில்லை. டியூஷன் அலை வீச ஆரம்பித்தது. நன்கு படிக்கும் பிள்ளைகளும் டியூஷன் படிக்க வற்புறுத்தப்படடன். இல்லையெனில் ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வியடைய நேரிடும் என அச்சுறுத்தப்பட்டனர். வசதியற்ற மாணவர்கள் வாடினர். வேதனையில் வெந்தனர்.
மிஸ் கவிதா வேலையை ராஜினாமா செய்துவிட்டுப்போய்விட்டாள். அந்த இடத்திற்கு பதில் ஆள் நியமிப்பதில் நாணயம் (நேர்மை) நா நயத்தின் நர்த்தனத்தால் நாணயங்கள் சலசலக்க தகுதியற்ற ஒருவருக்கு அவ்வேலை கிடைத்தது. இதையெல்லாம் கண்டும் காணாதவர்களாக சிலர் ஒதுங்கினார்: சிலர் பொறுமினர். ஆனால் தலைமையாசிரியரிடமோ, நிர்வாகியிடமோ துணிந்து கேட்க ஜெபாவையும் தினகரனையும் விட்டால் வேறே ஆள் இல்லை.
மாணவர்கள் ஒருங்கே கூடினர். தங்கள் பிரச்சனைகளை தெளிவாக எழுதி நிர்வாகிக்கும், தலைமையாசிரியர், உதவி ஆசிரியர்களுக்கும் அனுப்பினர். மாதமிரண்டு உருண்டோடியதே தவிர விமோசனம் ஒன்றும் பிறக்கவில்லை. உதவித்தலைமையாசிரியர் வற்புறுத்தலின் பேரில் இன்று ஸ்டாப் மீட்டிங் நடந்தது. காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.
தினகரன் : நீதி, நேர்மை என்பவற்றை கற்றுக் கொடுக்க வேண்டிய நாமே அநீதியாக அதிக லாபத்திற்கு பொருட்களை விற்பதும், இங்குதான் வாங்க வேண்டுமென மாணவர்களை வற்புறுத்துவதும் மாபெரும் தவறு. ஒன்று! நியாயமான விலையில் பொருட்களை விற்பனை செய்யுங்கள் அல்லது இங்குதான் வாங்க வேண்டுமென மாணவர்களை வற்புறுத்தாதிருங்கள்.
கந்தசாமி : ஸ்டோர் பொறுப்பு தன்னை விட்டுப் போய்விட்டதே என்ற ஏக்கம் வார்த்தையாக வருகிறதோ?
தினகரன் : பொறுப்பு போய்விட்டதே என்ற ஏக்கம் எனக்கு என்றும் வரப்போவது இல்லை. அதே சமயம் உங்கள் செயல்களைக் கண்டும் காணதவர்களாக ஒதுங்கும் ஒரு சிலரைப் போன்ற தூக்கமும் வரப்போவதில்லை.
குருசாமி : நியாயமாக வாழவேண்டியவர்! உங்கள் அளவுக்கு அதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களைப் பற்றி கவலை வேண்டாம்.
ஜெபா : உங்கள் சொந்த வாழ்க்கையில் இருக்கிற நியாயங்களைப் பற்றி நாங்கள் கேட்கவில்லையே, பள்ளி பொதுவானது. அதில் அநீதி காணப்பட்டால் அதைக் கேட்க இங்குள்ள எல்லோருக்குமே உரிமை உண்டு. டியூஷன் என்பது படிப்பில் தரத்தில் குறைந்தவர்களுக்கே ஏற்படுத்தப்பட்டது. நன்கு படிக்கும் மாணவர்களை டியூஷன் படிக்கும்படி வற்புறுத்துவது தவறான காரியம்.
த.ஆ : தவறான காரியத்தைச் செய்யும்படி உங்களை யாரும் வற்புறுத்தவில்லையே! (அலட்சியம் அவர் சொற்களில் மிளிர்ந்தது).
தினகரன் : நீங்கள் வற்புறுத்தினாலும் அவர் அப்படிப்பட்ட காரியங்களை செய்யப்போவதில்லை. மாணவர்கள் அனுப்பிய மனுவிற்கு உங்கள் பதில் என்ன என்பதுதான் எங்கள் கேள்வி கந்தசாமி : மாணவர்களை நிர்வாகியும், தலைமையாசிரியரும் கவனித்துக்கொள்வார்கள். அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். (அதுவரை பொறுமையாக இருந்த இப்ராஹீம் பேச ஆரம்பித்தார்).
இப்ராஹீம் : அவர் உதவித் தலைமை ஆசிரியராய் இருப்பதாலும், அவருக்கும் மனு வந்திருப்பதாலும் அவர் கேட்கிறார். (மற்ற ஆசிரியர்கள் கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும், செவிடராய் எந்த சம்பந்தமுமில்லை என்பதுபோல் அமர்ந்திருந்தனர்)
ஜெபா : மிஸ்.கவிதா வேலை ராஜினாமா செய்யவும், அந்த இடத்தில் பதில் ஆளை நியமித்தபோதும் அவர் சொல்லைத் தூக்கி எறிந்தீர்கள் நியாயமா எதையும் கேட்கக்கூடாது என்றால் பின் எதற்கு அவரை உதவித்தலைமை ஆசிரியராக வைத்திருக்கிறீர்கள்?
குருசாமி: உதவித் தலைமை ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்துவிட வேண்டியதுதானே! (அவசரமாகச் சொன்னார்).
இப்ராஹீம் : பதவி வெறியும் அவருக்கு இல்லை. பண ஆசையும் அவருக்கு இல்லை. அவர் உதவித் தலைமை ஆசிரியராக இருக்கும்போதே ஒரு நியாயமும் கிடைக்கவில்லையே! பதவியைத் தூக்கி எறிஞ்சிட்டா மாத்திரம் நியாயம் கிடைக்கப்போகுதா?
தினகரன் : “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பார்கள். வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும். மாணவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்காதீர்கள். விபரீதங்கள் விளைந்துவிடப்போகிறது.
த.ஆ : நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்களே மாணவர்களைத் தூண்டிவிடுவீர்கள் போலிருக்கிறதே! (சிடுசிடுத்தாற்).
ஜெபா : பின் விளைவு இப்படியும் போகலாம் என்று அவர் சொன்னாரே தவிர மாணவர்களைத் தூண்டிவிடப் போவதாகச் சொல்லவில்லை.
தினகரன் : நம் மாணவர்கள் எலிமெண்டரி ஸ்கூல் சின்ன பாப்பாக்கள் அல்ல. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் “இளங்கன்று பயமறியாது” அதைத்தான் சொன்னேன்.
த.ஆ : மாணவர் போராட்டம் வந்தால் நாங்கள் பார்த்துக்கொள்வோம். நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம் (எடுத்தெறிந்து பேசினார்)
ஒரு வழியாக ஸ்டாப் மீட்டிங் முடிந்தது. வாரம் ஒன்று ஓடி மறைந்தது.
இதன் தொடர்ச்சி போராட்டம்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.