“காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது”. என்று தனது மணவாளனைப் பற்றி மணவாட்டி மணவாளனின் உன்னதமான, வித்தியாசமான ஆள்தத்துவத்தை இங்கே வர்ணிக்கிறாள் (உன்னதப்பாட்டு 2 :3). கிச்சிலிமரம் தன்னைச் சுற்றியுள்ள காட்டுமரங்களுக்குள்ளே வித்தியாசமாக காணப்படுகிறது. கிச்சிலிமரம், காட்டில் வழி தெரியாமல் போன ஒரு பயணிக்கு தனது பழத்தின் மூலம் புத்துயிர்ச்சி அளிக்கிறது. இதேபோல், பிதாவின் ஒரேபேறான குமாரன் கிச்சிலிமரமாக தன்னை வித்தியாசமாக காட்டு மரங்களாகிய குமாரருக்குள்ளே (sons) காணப்படுகிறார். குமாரர்கள் தேவனது ஒரேபேறான குமாரனின் இடத்தை எடுத்துக்கொள்ளமுடியாது. அவர் ஒருவரே "தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும்" பாத்திரராயிருக்கிறார் (வெளி 5:3,9). காட்டு மரங்களாகிய தேவ ஊழியர்கள் தேவ குமாரனின் நாமத்திற்குரிய மகிமையைம் புகழ்ச்சியையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. பிதாவின் ஒரேபேறான தேவகுமாரனை தேவ குமாரர்களுடன் ஒப்பிட்டு போதிக்கும் எந்த தத்துவமோ வேதத்திற்கு புறம்பானதுதான். ஜீவ தண்ணீர் கொடுப்பது கிறிஸ்து தான். ஒரு தேவ ஊழியர் அந்த ஜீவ தண்ணீரை சுமந்து செல்லும் ஒரு கருவியே!
இன்று அநேக மக்கள் சுவிசேட கூட்டங்களிலிருந்து தேவனிடமிருந்து ஆசிர்வாதம் பெறாமல் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். ஏனென்றால், அவர்கள் கிச்சிலிமரமான கிறிஸ்துவிடம் போகாமல் காட்டுமரங்களிடம் போய் கிச்சிலிப் பழத்தைத் தேடி, ஏமாற்றப்பட்டு திரும்புகிறார்கள். கிறிஸ்த்துவிடம் தாகத்தோடு போகிற எவரும் காலி கையோடு திரும்பி வருவதில்லை.
உன்னதப்பாட்டின் கூறப்பட்ட, கிச்சிலி மரத்தை சுற்றிநிற்கும் காட்டு மரங்கள், உன்னதமான, கவர்ந்து இழுக்கும் கிறிஸ்துவின் ஆள்தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு உண்மையான தேவ ஊழியர் கிறிஸ்துவின் மகிமையை மாத்திரம் வெளிப்படுத்தி காண்பிக்கவேண்டும். பவுல் சொல்கிறார், "நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்" (2 கொரி 4:5). இன்று அநேக ஊழியர்கள் தங்களைப் பற்றியும் தங்களின் ஊழியங்களைப் பற்றியும் பெருமையாக பேசி வருகிறார்கள். தங்களின் சுய விளம்பரத்தை
TV channels, பத்திரிகை, YTube, Internet மூலமாக செய்துவருகிறார்கள். இயேசுவினிமித்தம் "உங்கள் ஊழியக்காரரென்றும்" என்று தான் பிரசிங்கிக்கவேண்டும். தேவ ஊழியர்கள் என்று அல்ல! நீங்கள் சேவை செய்யும் மக்களின் ஊழியக்காரர்கள் தான்! ஒருவனும் தேவனுக்கு தனது கைகளால் ஊழியம் செய்யமுடியாது!
"நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக..." என்று பவுல் கூறுகிறார் (காலா 6:14). நமது ஊழியத்தைக் குறித்தோ, நமது ஆவிக்குரிய வரங்களைக் குறித்தோ மேன்மைபாராட்டாதிருப்போமாக! சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறு எதையும் குறித்தோ மேன்மைபாராட்டாதிருப்போமாக!
பின்வாங்கிப்போன மணவாட்டி தனது மணவாளனின் பிரசன்னத்தை இழந்து ஆவிக்குரிய காட்டில் அலைந்துதிரிந்து காட்டின் மரங்களுக்குள் கிச்சிலி மரத்தை தேடுகிறாள். ஆனால் கிச்சிலி மரத்தை சுற்றியுள்ள மரங்கள் தங்களின் கனிகளைக் காண்பித்து கிச்சிலி மரத்தை அண்டவிடாமல் செய்கிறார்கள். கிச்சிலி மரமானது உன்னதமாகவும், வித்தியாசமாகவும் காட்சியளிக்கிறது. இன்று, போதகர்கள்,
அங்கலாய்க்கும் மணவாட்டியை குற்றம் கண்டுபிடித்து, இழிவாக பேசி கிறிஸ்துவிடம் வரவிடாமல் விரட்டியடிக்கிறார்கள். இவர்கள் பரிசேயர் சதுசேயர் விட மோசமானவர்கள். நீதியுள்ள கிறிஸ்துவோ இந்த மணவாட்டியை தன்னண்டை வர ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறார்.
Author: Dr. Job Anbalagan