எரேமியா தேவனின் கண்ணோட்டத்தில் இருந்து மூன்று ஆச்சரியமான, பயங்கரமான மற்றும் திடுக்கிடும் காரியங்களை விவரிக்கிறார் (எரேமியா 5:30-31). இஸ்ரவேல் தேசத்தில் தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் மற்றும் அசாதாரணமான, ஆன்மீகமற்ற அல்லது அநீதியான நடத்தை கொண்ட மக்கள் இருந்தனர்.
தீர்க்கதரிசிகள்:
தீர்க்கதரிசிகள் தேவனுடைய வார்த்தையைப் பேசவும், வெளிப்படுத்தவும், கற்பிக்கவும் வேண்டும். ஆனால் அவர்கள் தேவ ஆவியினால் பேசுவதாகக் கூறினர், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த வார்த்தைகளையேப் பேசினர். அவர்கள் தேவனால் அனுப்பப்படவில்லை என்பதால், அவர்கள் தேவனைப் பற்றி தவறான பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த வார்த்தைகளை பேசுவதால், அவர்களின் போதனை தவறானது மற்றும் தேவனின் குணாதிசயம் மற்றும் சித்தத்திற்கு எதிரானது. அவர்கள் எந்த அதிகாரமும் தகுதியும் இல்லாமல் சுயமாக நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசிகள். உண்மையான தீர்க்கதரிசிகள் தேவனுக்கு உண்மையான ஊழியர்கள், நீதியுள்ள தேசத்தின் நண்பர்கள். கள்ளத் தீர்க்கதரிசிகள் ஒரு தேசத்தின் எதிரிகள்.
ஆசாரியர்கள்:
ஆவிக்குரிய தலைவர்களும் தேசத்தின் தலைவர்களும் மக்களை தேவனின் அன்பிலோ அல்லது தேவ நியமனங்களின் படியோ வழிநடத்தவில்லை. மாறாக, அவர்கள் மேய்க்காமல், அவர்கள் மீது இறுமாப்பாய் ஆண்டார்கள் (1 பேதுரு 5:3). கர்த்தராகிய இயேசு பணிவிடைகார தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார், மேலும் ஆதிக்கம் செலுத்துவதையும், ஆணையிடுவதையும் அவர் ஏற்கவில்லை (மத்தேயு 20:25-26). தேவனின் மற்றும் வேதாகமத்தின் அதிகாரம் இல்லாமல், அவர்கள் தங்கள் சொந்த மனம், யோசனைகள், ஞானம் மற்றும் துன்மார்க்கத்துடன் ஆட்சி செய்தனர். அர்த்தமில்லாமல் சடங்குகளிலும் மரபுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.
ஜனங்கள்:
துரதிர்ஷ்டவசமாக, கள்ளத் தீர்க்கதரிசிகள், ஊழல் தலைவர்கள் மற்றும் பொல்லாத ஆட்சியாளர்களால் மக்கள் முற்றிலும் மகிழ்ச்சியாக இருந்தனர். கடிந்து கொள்ளாமல், கண்டிக்காமல், திருத்தம் செய்யாமல் தங்கள் பாவங்களில் வசதியாகத் தொடர முடியும் என்பதால் அவர்கள் அதை விரும்பினர். தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் மக்களை அழிக்க ஒன்றுபட்டனர், மக்கள் அத்தகைய தலைமைக்கு மனமுவந்தனர்; "ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்" (2 தீமோத்தேயு 4:3-4) என்பதாக பவுல் எச்சரிக்கிறார்.
தண்டனை மற்றும் தீர்ப்பு:
கள்ளத் தீர்க்கதரிசிகள், போலி மதவாதிகள் மற்றும் ஊழல் தலைவர்கள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டால், அவர்கள் தேவனின் தீர்ப்புக்கு தயாராக இருக்கிறார்கள். பெருமழை, பெருவெள்ளம், காற்று ஆகியவற்றைத் தாங்க முடியாத மணலில் கட்டிய வீடு போலல்லவா இருக்கிறது (மத்தேயு 7:24-27).
எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்த நாட்களிலிருந்து இன்று உலகம் வேறுபட்டதல்ல.
நான் தீமையை எதிர்க்கிறேனா, நன்மை செய்கிறேனா, நீதியை அங்கீகரிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்