பக்கவாட்டில் நகரும் நண்டுக்கு, நேராக நடக்கக் கற்றுக்கொடுக்கப்படும் ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்று உண்டு. அதற்கு பயிற்சி கொடுத்து பகலில் நண்டு நேராக நடக்கும். ஆனால் வீட்டிற்குச் சென்றதும், அது அதன் வழக்கமான நடைமுறைக்கு திரும்பும். விரக்தியடைந்த பயிற்சியாளர்கள் உனக்கு என்ன தான் பிரச்சனை என்று கேட்டார்கள்? அதற்கு நண்டு; “நான் வீட்டிற்குச் சென்றால், என் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகள் என அனைவரும் ஒருபக்கமாக சாய்ந்தபடி நடக்கிறார்கள். எனவே, நான் அவர்களைப் பின்பற்றுகிறேன்", என்றது. ஆம், சரிதான் பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒழுக்கம், மதிப்புகள், அணுகுமுறை மற்றும் உலகக் கண்ணோட்டத்தை கவனிக்கிறார்கள் மற்றும் உள்வாங்குகிறார்கள்.
ஒரு போதகரின் குடும்பம், கீழ்ப்படியாத தங்கள் டீன் ஏஜ் மகனுக்காக உதவி கேட்டு ஆலோசகரிடம் வந்தனர். தந்தையின் புகார் என்னவென்றால், தனது மகன் தகவல் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதாகவும், அவன் விரும்பிய நேரம் வீட்டிற்கு வருவதாகவும் தெரிவித்தார். ஞானமுள்ள திறமையான ஆலோசகர் இச்சிக்கலை விரைவாகப் புரிந்துகொண்டார். அவர் உடனடியாக அப்போதகரின் மனைவியிடம் திரும்பி, “உங்கள் கணவர் வெளியில் செல்லும்போது உங்களிடம் தெரிவிப்பதுண்டா?" என்று கேட்டார். அதற்கு அப்போதகரின் மனைவி; “இல்லை" என்றார். அவருக்கு திடீரென மொபைலில் அழைப்பு வரும்; அவர் பேசுவார். உடனே அத்தொலைபேசியை அவரது சட்டைப் பையில் வைப்பார், அவர் எதுவும் சொல்லாமல் போய்விடுவார் என்றார். அதுபோல தாமதமாகும் சமயங்களில் வீட்டிற்கு போன் செய்து தான் வீட்டிற்கு வர தாமதமாகும் என்று சொல்லும் பழக்கம் இருக்கிறதா என்று ஆலோசகர் கேட்டார். அதற்கும் ‘இல்லை’ என்ற பதிலே வந்தது. அப்போது ஆலோசகர் கூறினார்; “ஒழுக்கம் என்பது கற்றுக் கொடுத்து வருவதில்லை; முன்மாதிரியாக திகழ்வோரின் செயலைப் பார்த்து வருகிறது" என்றார். ஆம், உங்கள் மகன் ஒழுக்கமின்மையின் உதாரணத்தைப் பின்பற்றுகிறார். அவரும் உங்களைப் போல் எப்போது வேண்டுமானாலும் போகலாம், வரலாம் என்று நினைக்கிறார். உங்களை நீங்களே ஒழுங்குபடுத்தி முன்னுதாரணமாக நடந்து கொண்டால் மட்டுமே உங்கள் மகனை மாற்ற முடியும் என்பதாக ஆலோசகர் ஆலோசனையை அளித்தார்.
"மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்" (1 கொரிந்தியர் 9:27) என்பதாக பவுல் எழுதுகிறார். அதற்காக பவுல் தான் சிறந்த போதகர், பிரசங்கியார் மற்றும் பெரிய எழுத்தாளன் என்பதாக நினைத்து அதில் திருப்தி அடையவில்லை. அவர் எதைப் பிரசங்கிக்கிறாரோ, அதைக் கடைப்பிடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்த விரும்பினார்.
துரதிர்ஷ்டவசமாக, இன்றும் சமூகத்தில் முன்மாதிரிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. வீடுகளில் பெற்றோர்கள் முன்னுதாரணமாக இருக்கத் தவறுகிறார்கள். சபையில், போதகர்கள் மற்றும் மூப்பர்கள் தேவனுக்கான தரங்களின் அடையாளத்தை இழக்கிறார்கள். பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் வீழ்ச்சியடைந்து தோல்வியடைகிறார்கள். சமுதாயத்தில் அனைத்து துறைகளிலும், வீழ்ச்சியடைந்த தலைவர்கள், வீழ்ச்சியடைந்த மதிப்புகள் என இருப்பதால் அது தேசமும் உலகமும் வீழ்வதற்கல்லவா வழிவகுக்கும்.
என்னுடைய சூழலில் நான் ஒரு உதாரணமாக அல்லது நற்செயல்களின் முன்மாதிரியாக திகழ்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran