கடவுள் மனிதனாகப் பிறந்தார் என்று உறுதியாக நம்புகிறவர்களில் உலகிலேயே சைவர்கள் மற்றும் வைணவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது. காரணம், கடவுள் மனிதனாக ஏன் பிறந்தார் என்று கேட்டால் அவர் மனிதர்களின் பாவத்தைப் போக்கும் பலியாகப் பிறந்தார் என்று கிறிஸ்தவ சமயம் கூறுகிறது. பாவத்திற்காக பலியிடும் மிருகத்தின் மாம்சத்தை மட்டுமே புசிக்க வேண்டும், பசிக்காகவோ அல்லது நா ருசிக்காகவோ மாம்சத்தை உண்பது, மிருகங்களை வெட்டுவது வேள்வியில் இல்லாத விதி. ‘கொன்றால் பாவம்: தின்றால் போச்சு’ என்றால், பாவத்திற்காக எதைக் கொள்கிறோமோ அதையே சாப்பிட்டால்தான் அந்தப் பாவம் நம்மைவிட்டு போனதாக அர்த்தம். அதைத்தான் வேதங்கள் கூறுகின்றன. இதனை அப்படியே கடைபிடிப்பது மேற்கூரிய இரண்டு மதங்களேயன்றி கிறிஸ்தவ மதம் அல்ல. காரணம் கிறிஸ்தவ சமயம் மாம்சம் உண்பதை தடைசெய்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான இந்தியர்கள் மாம்சத்தை நா ருசிக்காக சாப்பிடுகிறார்கள்.
கடவுள் மனிதனாகப் பிறந்தார், எல்லா ஐசுவரியங்களையும் உடைய கடவுள் ஒன்றுமில்லா ஆண்டியாக வளர்ந்தார் என்று முருகனையும், அவரே ஆதிமூலமாக உள்ள ஓம்காரமாகவும் இருந்தார் என்பதை ஓம் என்னும் வார்த்தையின் நடுவில் முருகனை நிறுத்தி வைப்பது ‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை உருவமானது’ என்று இயேசுவின் சீடர் யோவான் சொல்வதை உருவகப்படுத்தியிருக்கிறது. பார்வதியின் உடலில் இருந்து நீக்கப்பெற்ற அழுக்கில் உருவானவர் சிவனால் கொலை செய்யப்படுவதும், அவரே மீண்டும் அவருக்கு உயிரும், புது தலையும் கொடுத்து ஓம் என்னும் வார்த்தையாக தலையும், மனித உடலும் கொண்ட கடவுளின் மூன்றாவது தன்மையான அருஉருவாக வடிப்பது உலகில் எந்த சமயங்களிலும் இல்லை.
கடவுள் மனிதனானார் என்று பலரை பலவிதங்களில் மனிதர்கள் காலகாலமாகக் கூறிவருகிறார்கள். ஆனால் கன்னிகழியாத ஒரு பெண் மூலம் மனிதனாகப் பிறந்து, உலகத்தின் பாவத்திற்காக நான் பலியாகிறேன் என்று வெளிப்படையாக உரிமைக்கொண்டாடி, மீண்டும் உயிரோடு எழுந்து பாவநிவாரணத்தை ஏற்படுத்தி சென்றதை இயேசுவைத் தவிர உலகில் எந்த மனிதரும் தனக்கென சொந்தம் பாராட்டவில்லை. வரலாற்றில் நடந்த இந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்ட புராணக்கதைகள் உலகிலேயே இந்தியாவில் உள்ள சைவம் மற்றும் வைணவ சமயங்களில் தான் காணக்கிடக்கின்றன. சிலுவையில் பலியாகி மீண்டும் உயிர்பெற்று வருதலைக் குறிக்கும் காவடியும், கடவுள் மரித்து, உயிரோடு எழுந்து, விண்ணுலகில் மறைவதை காட்டும் பிள்ளையார் சதுர்த்தியும் சைவ சமயத்தில் உள்ள சிறப்பு.
கடவுளை மனிதனாக இயேசு வெளிப்படுத்தினார். இயேசு கடவுளின் அன்பையும், இரக்கத்தையும், சக்தியையும் காட்டுகிறார். அருவான கடவுள், நம்மிடையே உருவத்தில் வந்தவர், இன்று அருஉருவாக நம் இதயத்தில் பிறக்க ஆசைப்படுகிறார். அவர் வரலாற்றில் ஒரு ஏழையின் குடும்பத்தில், மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார், அதனால் நம் உள்ளமும் இல்லமும் எப்படி இருந்தாலும் அவர் நம் உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்க விரும்புகிறார். அவர் பிறக்கும் இடம் தீமைக்கு அழிவு. நன்மைக்கும், வாழ்வுக்கும், உயர்வுக்கும், நற்பண்புகளுக்கும், நல்உறவுக்கும், மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் புதுபிறப்பு. வரலாற்றில் பிறந்து கி.மு மற்றும் கி.பி என்று பிரித்தவர் நம் வாழ்வில் பிறந்து பழைய வாழ்வு, புது வாழ்வு என்று இரண்டாகப் பிரிக்கிறார். மனிதனாகப் பிறந்த கடவுள் மனிதர்களாகிய நம் வாழ்வில் பிறந்தால் கடவுளின் அச்சடையாளங்களுடன் அவருடைய பிள்ளைகளாய் மாறுவோம். இறையருள் நம்முடன் என்றும் இருப்பதாக.
Author. Rev. Dr. C. Rajasekaran