கிறிஸ்துமஸ் மரங்கள்
நாங்கள் ஹரியானாவில் மிஷனரிகளாக இருந்தபோது, டிசம்பரில் என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சொன்னார்: “நான் கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்க்க வருவேன்.” நானும் : "வாருங்கள், நான் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் வைத்திருக்கிறேன்'', என்றேன். கிறிஸ்துமஸ் மரம் மற்றும் அலங்காரங்களுக்கு நாங்கள் பொதவாக முக்கியத்துவம் கொடுக்காததால் நான் பெரிதாக விரும்புவதில்லை. நாங்கள் இருந்த பகுதியில் இருந்த இன்னும் அநேகரும் கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்க்க விரும்பினர். இந்த காரியம் எங்களை சிந்திக்க வைத்தது. ஊசியிலை மரக்கிளையை வாங்கி எங்கள் வீட்டில் அமைத்து அலங்கரித்தோம். அது எங்கள் வீட்டின் முன் பால்கனியில் இருந்தது. பலர் வீட்டைக் கடந்து செல்லும்போது மரத்தைப் பார்க்க நிற்பார்கள். நாங்கள் அவர்களை வீட்டிற்குள் வரவேற்று பெத்லகேமின் முதல் கிறிஸ்துமஸ் பற்றி கூறுவோம். பின்னர் டிசம்பர் 24 அன்று நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரை அழைத்து கிறிஸ்துமஸ் நிகழ்வை நடத்தினோம். நிகழ்வில் சில பாடல்கள், ஒன்று அல்லது இரண்டு சாட்சியங்கள், கிறிஸ்துமஸ் பற்றிய ஒரு விளக்கம் மற்றும் ஒரு நற்செய்தி செய்தி இருந்தது. அதன் பிறகு, கேக் மற்றும் தேநீர் தயார் செய்திருந்தோம் (அண்டை வீட்டாரில் பலர் கேக்கில் முட்டை உள்ளதால் தவிர்த்தனர்). பின்பதாக புதிய ஏற்பாடை எடுத்துச் செல்ல விரும்புவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அறிவித்தோம்; வரவேற்றோம்.
ஆக, கிறிஸ்துமஸ் மரம் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பை உருவாக்கியது. ஹரியானாவில் நாங்கள் இருந்தவரை பல வருடங்கள் இதுபோல செய்தோம். எங்கள் நண்பர்கள் பலர் எங்கள் முறையைப் பின்பற்றி சமூகத்தில் நட்பைப் பகிர்ந்துகொள்ளவும் வளர்க்கவும் வாய்ப்பை உருவாக்கினர்.
மேற்கில் பல நகரங்களில், சிறந்த கிறிஸ்துமஸ் மரங்களுக்கான விருதுகள் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக, சாண்டா கிளாஸ், நட்சத்திரங்கள், மரங்கள்... கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே மக்களைச் சென்றடைந்துள்ளன. எனவே, சிறந்த உத்தி எதுவாக இருக்க முடியும்? சத்தியத்தை வழங்க வேண்டுமெனில் அந்த உலகக் கூறுகளின் மீது சவாரி செய்து தானே ஆக வேண்டும். சில நேரங்களில் பாரம்பரியங்களே மக்களை திறம்பட சென்றடைவதற்கான உத்திகளை நமக்கு அளிக்கும்.
"கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்" (சங்கீதம் 92:13) மற்றும் "பாக்கியவான்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பார்கள்; அவர்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்" (சங்கீதம் 1).
*இந்த கிறிஸ்துமஸ் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம்*
Author : Rev. Dr. J. N. Manokaran