இயேசு ஒரு புதிய விடியல் - புதிய ஆரம்பம். உலகத்தில் அநேக புதிய காரியங்கள் இயேசுவின் பிறப்பால் பிறந்தது. இந்த விடியல் இன்றும் மறையவில்லை.
1. அரசாங்க செயல்திட்டத்தில் புதிய விடியல்
இராஜாங்கத்தின் புதிய செயல்திட்டம் வந்து பழைய சட்டத்திற்கு முற்றுப்புள்ளி (மத்.5) வைக்கப்பட்டு புதிய சட்டத்திற்காக புதிய விடியல் ஆரம்பமானது: அது அன்பு, சமாதானம், மகிழ்ச்சி மற்றும் நீதியை மையமாகக்கொண்ட செயல்திட்டமாயிருக்கிறது. பலிக்குப்பலி என்னும் விதி மாறி மன்னிப்பு, விரோதிகளையும் நேசித்தல், சபிக்கிறவர்களை ஆசீர்வதித்தல், துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபித்தல், நீதிக்காக துன்பம் அனுபவித்தல், சத்தியத்திற்காக உயிர்கொடுத்தல், அத்துடன் முடிவில்லாத அரசாங்கம் - வீழாத அராசங்கம் - வீழ்த்த முடியாத அரசாங்கம் பற்றி ஏசா.9:7 கூறுகிறது. தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
2. அரசனுடன் தனிமனித உறவுக்கு புதிய விடியல்
அரசனுக்கும் குடிமக்களுக்கும் இடையே தனிமனித உறவுக்கு புதிய விடியல். குடிமக்கள் அடிமைகளாக அல்ல அரசனின் குழந்தைகளாக கலா.4:7 ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய் என்று பவுல் கூறுகிறார். தேவனுடைய இராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது என்று இயேசு பிரசங்கித்து அந்த அரசுடன் உறவுக்கு அழைத்தார்.
3. அனைத்து சுதந்திரத்திற்கான புதிய விடியல்
பூரண சுதந்திரத்திற்கான புதிய விடியல். மனிதர்கள் அனைவருக்குமான சுதந்திர விடியல். அனைத்து பாவங்கள், வியாதிகள், பிசாசின் தந்திரங்கள், போன்றவற்றிலிருந்து முழுமையான விடுதலை. சரீர, சிந்தை, சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற அனைத்து கட்டுகளிலிருந்தும் விடுதலை மத்.1:21அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.
4. அனைவருக்குமான வழிக்கு புதிய விடியல்
அனைவரும் செல்லக்கூடிய பொதுவான வழிக்கு புதிய விடியல். இயேசு உலக இரட்சகர்: ஜாதி, மதம், பிராந்தியம் போன்ற எந்த பாகுபாடும் இல்லை. இயேசுவைத் தவிர நித்திய வாழ்விற்கான வழி இல்லை: நானே வழி, வாய்மை, வாழ்வு. நானே நல்ல மேய்ப்பன்: எனக்கு முன்பாக வந்தவர்கள் கள்ளரும் கொள்ளைக்காரர்களுமாக இருந்தார்கள். அவர்களுக்கு ஆடுகள் செவிகொடுக்கவில்லை. யோ.10:8.
5. இந்தியாவில் புதிய விடியல்
மாமிச இரத்தம் கொடுக்கும் மிருகபலிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இயேசு அறிமுகம் செய்த சைவ வழிபாடு தோமா மூலம் ஆரம்பமானது. மனிதனாகப் பிறந்த கடவுளின் பிறப்பு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகியவற்றின் புறநிகழ்வின் அக உருவுக்கு புறஉருவங்கள் கொடுக்கப்பட்டு புராணங்கள் வடிவம் பெற்றது. இதனால் இந்தியாவில் தோன்றிய நாத்திகம் இந்தியாவிலிருந்து துரத்தியடிக்கப்பட்டது.
இயேசு நம்வாழ்வில் பிறந்தால் நம் வாழ்விலும் மங்காத மறையாத புதிய விடியல் ஏற்படும்.
Author. Rev. Dr. C. Rajasekaran