பாலகன் பிறந்தார்
ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் குழந்தைகள் பிறந்துக் கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும், இந்த குழந்தை மட்டும் வித்தியாசமானது. பெத்லகேமில் ஒரு குழந்தை பிறந்திருப்பதாக தேவதூதர்கள் மூலமாக மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது. நு.ஸ்டான்லி ஜோன்ஸ் என்பவர் தனது 'விக்டோரியஸ் லிவிங்' என்ற புத்தகத்தில் உலகம் இச்செய்தியை எவ்வாறு எதிர்பார்த்திருக்கும் என்று எழுதியுள்ளார். 'அங்கே ஒரு மாய ஔியை காண்பீர்கள்' என இந்தியா சொல்லியிருக்கலாம்; 'சரியான ஒழுக்க நெறியை நீங்கள் காணலாம்' என சீனா சொல்லியிருக்கும்; 'நீங்கள் ஒரு தத்துவத்தை கண்டடைவீர்கள்' என்பதாக கிரேக்க நாடுகள் சொல்லியிருக்கும். ஆனால் இதனைக் குறித்த தேவனின் செய்தி என்னவென்றால் பிறந்திருக்கும் அக்குழந்தை உலகத்திற்கு ஒரே இரட்சகர். "இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள், இதுவே உங்களுக்கு அடையாளம்" (லூக்கா 2:12).
உலக மதத் தலைவர்கள், சத்தியத்தைத் தேடுபவர்கள் மற்றும் தத்துவஞானிகள் என அனைவரும் தேடியது ஒரு கருத்தாக்கம் அல்லது அறநெறிக்கான ஒரு யோசனையை அல்லது ஒரு குறியீட்டை அல்லது ஒரு மாய ஒளியைத் தேடிக்கொண்டிருந்தனர். ஆனால், தேவன் தன் குமாரனை மனிதர்களிடையே குடியிருக்க அனுப்பினார். இந்த உலகின் ஞானிகளுக்கு இது நினைத்துப்பார்க்க முடியாதது அல்லது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கும். ஆனால் தேவன் இந்த உலகத்திற்கு வந்து தம்முடைய 'கிருபையையும் சத்தியத்தையும்' வெளிப்படுத்தினார்.
1) வலிமையற்ற:
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அதிக வலிமை இருக்காது, அதன் ஆயுசை அல்லது வாழ்வை எளிதாக பறித்துவிட முடியும். மேலும் சொல்லப்போனால் ஏரோதுகூட இயேசுவைக் கொல்ல நினைத்தான். சுகாதரமற்ற முன்னணை, அழுக்கு சூழல் மற்றும் கந்தல் ஆடைகள் என அதுவே குழந்தையை கொன்றுவிடும். மேசியா ராஜா அரண்மனையில் பிறக்கவில்லை, எளிதாக பாதிக்கப்படக்கூடிய இடத்தில்தான் பிறந்தார். வானமும் பூமியும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது, அந்த இறையாண்மை தேவன் பெத்லகேமில் ஒரு முன்னணையில் ஒரு குழந்தையாகிறார்.
2) சார்புடைய:
எல்லா சிருஷ்டிப்பிலும் ஒரு குழந்தை மற்ற எல்லோரையும் அதிகம் சார்ந்து வாழ வேண்டும். கர்த்தராகிய இயேசுவும் மரியாள், யோசேப்பு மற்றும் பிறரைச் சார்ந்து பிறக்கத் தேர்ந்தெடுத்தார். ஒரு குழந்தையால் தானாக சாப்பிடவோ, குடிக்கவோ அல்லது குளிக்கவோ என தனியாக எதையும் செய்ய முடியாது அல்லவா! ஆக, சர்வவல்லமையுள்ள தேவன் தன்னை ஒரு மனிதனாக மட்டுப்படுத்திக் கொண்டார், அதுவும் மனிதர்களால் பராமரிக்கப்பட வேண்டிய ஒரு குழந்தையாக!
3) அடையாளமாக:
பெத்லகேமில் பிறந்ததன் மூலம் கர்த்தராகிய இயேசு தன்னை மனிதநேயமிக்கவராக, உலகளாவிய மனிதநேயம் மற்றும் மனிதநேயத்தின் இறுதி என்பதாக அடையாளம் காட்டினார். தேவன் பரலோகத்திலிருந்து முழு வளர்ந்த மனிதனாக பறந்து வந்து பூமியில் விழவில்லை, ஆனால் பெத்லகேமில் ஒரு குழந்தையாகப் பிறந்தார்.
இவரின் பிறப்பு இந்த உலகம் முழுவதையும் அன்பு, கிருபை மற்றும் வல்லமை என்ற நற்செய்தியுடன் முழுமையாக மாற்றியது. கோடிக்கணக்கானவர்கள் இரட்சிப்பையும், நம்பிக்கையையும், கண்ணியத்தையும், ஞானத்தையும் மற்றும் கிருபையையும் பெறுகின்றனர்
Author : Rev. Dr. J. N. Manokaran