பெத்லகேமில் ஒரு தாழ்மையான பிறப்பு
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பெத்லகேம் என்ற சிறிய ஊரில் பிறந்தார். பல நாடுகளிலிருந்து பயணிகள் அந்த இடத்தைப் பார்க்க வருகின்றனர். அந்த இடம் ஒரு குகை வடிவில் இருக்கும். அந்த குகைக்குள் செல்லும்போது தலை குனிந்தோ அல்லது மண்டியிட்டுக் கொண்டோ தான் அதற்குள் செல்ல முடியும். அதனாலேயே அந்த நுழைவு 'தாழ்மையின் கதவு' என்றழைக்கப்படுகிறது. உலகில் அத்தனை நகரங்கள் காணப்பட்டும் ஏன் பெத்லகேம் தேர்ந்தெடுக்கப்பட்டது?
1) தாழ்மையான நகரம்:
அரசியல் அதிகாரம் கொண்ட ரோம் அல்லது மதத்தின் நகரமான எருசலேமில் பிறந்திருந்தால், இந்த நகரங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்து பிறந்த இடம் என்று பெருமையும் உரிமையும் கொள்ளும். ஆக, வேறு எந்த நகரமும் பெருமை கொள்ள முடியாதபடி தேவன் தாழ்மையான பெத்லகேம் நகரத்தைத் தேர்ந்தெடுத்தார்.
2) தாழ்மையான இடம்:
தேவன் முன்னணையை தேர்ந்தெடுத்து சத்திரக்காரன் பெருமை கொள்ளாதபடி செய்தார். மக்களால் நிராகரிக்கப்பட்ட தேவன் தாழ்மையான இடத்தை தேர்ந்தெடுத்தார். அதில் முன்னணை என்பது விலங்குகளுக்கு உணவு வைக்கும் இடமாகும்.
3) ஜீவ அப்பம்:
தொழுவத்தின் முன்னணையே தேவனின் பரிசுத்த பந்திக்கான மேசை, அதன் மேல் கந்தைத் துணியில் சுற்றிக் கிடத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவே ஜீவ அப்பம்.
4) ஜீவ தண்ணீர்:
பெத்லகேம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பாதாம் மற்றும் ஒலிவ மரங்கள் வளர்க்கப்படுகின்றன. கி.மு. 200 முதல் இங்கிருந்து எருசலேமுக்கு நீர் வழங்கப்படும் அளவிற்கு நல்ல நீர் ஆதாரம் உள்ளது.சாலொமோன் உருவாக்கிய குளங்களும் நகரத்தை சுற்றி உள்ளன. இவையெல்லாம் கர்த்தராகிய இயேசுவே ஜீவ தண்ணீர் என்பதைக் குறிக்கிறது.
5) தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற:
மேசியா பெத்லகேமில் பிறப்பார் என்று மீகா தீர்க்கத்தரிசி முன்னறிவித்திருந்தார் (மீகா 5: 2). மரியாளும் யோசேப்பும் நாசரேத்தில் வாழ்ந்து வந்த போதிலும் குடிமதிப்பு எழுதுவதற்காக பெத்லகேமிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் அங்கே மரியாளுக்கு பிரசவமும் நேரிட்டது.
6) தாவீதின் உடன்படிக்கை:
மேசியா ‘தாவீதின் மகன்’ என்று அழைக்கப்பட்டார். பெத்லகேம் தாவீது நகரம் என்று அழைக்கப்பட்டது, தாவீது அங்கேயே பிறந்து அங்கு ஆட்சியும் செய்தார். அதுபோலவே கர்த்தராகிய இயேசுவும் பெத்லகேமில் பிறந்தார், அங்கேயே மரித்தார், பின்பு அவருடைய தெய்வீக தன்மையை நிரூபிக்கும் விதமாக எருசலேமிலே உயிர்ந்தெழுந்தாரே.
7) தேவ ஆட்டுக்குட்டி:
ஏதேர் என்ற கோபுரம், கண்காணிப்பு கோபுரமாக பெத்லகேமுக்கு வெளியே இருந்தது. அதன் அருகே புல்வெளிகள் இருந்தன, அங்கு பலிக்கான ஆட்டுக்குட்டிகளை வளர்த்தார்கள். அந்த பலிக்கான ஆட்டுக்குட்டிகள் தனித்துவமாக அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவே துணிகளால் கட்டியிருந்தார்கள். மேசியாவை அடையாளம் காண யோவான் ஸ்நானகன் பயன்படுத்திய சொல் 'தேவ ஆட்டுக்குட்டி’ என்பதாகும்.
கிறிஸ்துமஸ் காலங்களில் ‘வாருங்கள் அவரை பணிந்து தொழுது கொள்வோம்'.
Author : Rev. Dr. J. N. Manokaran