மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வமுள்ள ஒரு பெண் தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் (NEET) பங்கெடுத்தார், ஆனால் அமைப்பில் சில செயலிழப்பு ஏற்பட்டது. வினாத்தாள்கள் கசிந்தன, சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன, சிலருக்கு சரியான மதிப்பெண்கள் கிடைக்காததால், விடைத்தாள்கள் கிழித்தெறியப்பட்டன. அப்பெண் இவ்வாறாக கூறினாள்; "நான் தேர்வில் தோல்வியடையவில்லை, அமைப்பு என்னைத் தோல்வியடையச் செய்தது" (தி பிரிண்ட், ஜூன் 11, 2024). நல்லது செய்ய உருவாக்கப்பட்ட அமைப்பு அல்லது சட்டம் அவளைத் தவறவிட்டது. இது மாதிரியான அனுபவத்தைப் பற்றி பவுல் எழுதுகிறார். “நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது” (ரோமர் 7:12). நியாயப்பிரமாணம் மனிதர்களை அவர்களுடைய பாவங்களைப் பற்றி உணரவைக்கிறது மற்றும் பிரமாணத்தை நிறைவேற்ற முடியாத இயலாமையையும் வெளிப்படுத்துகிறது.
மத அமைப்புகள்:
பல மத அமைப்புகள் உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பல குருக்கள் அல்லது தலைவர்கள் தங்கள் சொந்த குழுக்களையும் வழிபாட்டு முறைகளையும் உருவாக்குகிறார்கள். மக்களை காப்பாற்றுவதாக தான் அனைவரும் கூறுகின்றனர். இந்த ஆன்மீகங்கள் அனைத்தும் அனுமானங்கள், எதிர்பார்ப்புகள், மனித வலிமை, மனநல திறன்கள், மர்மமான அறிவு மற்றும் கடுமையான நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும் கடவுளைத் தேடிச் சென்று அடைய முயற்சிப்பது அவர்களின் மத அமைப்பின் சுருக்கமாகும். அவை சிருஷ்டிகரான கடவுளிடமிருந்து வந்த உண்மையான வெளிப்பாடுகள் அல்ல.
தன்னை வெளிப்படுத்தும் தேவன்:
மனித மனம் வரம்பிற்குட்பட்டது. தேவனோ முடிவில்லாதவர். குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட மனமும், அதற்கேற்ற அறிவாளித்தனத்தினாலும் மனிதர்களால் தேவனையும் அவருடைய பண்புகளையும் அறியவோ, புரிந்து கொள்ளவோ, கண்டுபிடிக்கவோ அல்லது விளங்கிக் கொள்ளவோ முடியாது. எனவே, தேவன் இயற்கை, பிரமாணம் (அவரது வார்த்தை) மற்றும் குமாரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் தம்மை வெளிப்படுத்தினார்.
பிரமாணத்தின் இயலாமை:
பிரமாணத்தால் செய்ய முடியாத இரண்டு விஷயங்கள் நியாயப்படுத்துதல் மற்றும் பரிசுத்தப்படுத்துதல் ஆகும். பிரமாணம் ஒரு பள்ளி ஆசிரியரைப் போன்றது, அது பாவம், தண்டனையின் அளவு மற்றும் ஒப்புரவாக்குதல் மனந்திரும்புதலின் அடிப்படையில் பலியை வரையறுக்க முடியும். அதாவது கிறிஸ்து வரும் வரை பிரமாணம் நமது எஜமானனாக இருந்தது. இயேசு வந்த பிறகு நாம் விசுவாசத்தின் மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆனோம் (கலாத்தியர் 3:24). ஆயினும்கூட, கல்வாரி சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை காண நியாயப்பிரமாணம் சாட்சி அல்லது வழிகாட்டுதலை அளிக்கிறது.
நீதிமானாக அறிவிக்கப்படல்:
நியாயப்பிரமாணம் ஒருவரை நீதிமான் என்று அறிவிக்க முடியாது என்று பவுல் எழுதுகிறார். மீட்பிற்காக தம் இரத்தத்தை சிந்திய ஆண்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே தம்மீது விசுவாசம் கொண்ட ஒருவரை நியாயப்படுத்துகிறார். பிரமாணத்தின் ஆவி ஒரு நபரை அடிமைப்படுத்த முடியும், ஆனால் கிறிஸ்துவின் ஆவி ஒரு நபரை விடுவிக்கும். எல்லா அமைப்புகளும் தோல்வியடையும், ஆனால் கர்த்தராகிய இயேசு ஒருபோதும் தோல்வியடைவதில்லை.
நான் என்றும் குறையாத எதிலும் தவறாத ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் பாதுகாப்பில் இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்