பிடிவாதமான நபர் தான் விரும்பியதைச் செய்வதில் உறுதியாக இருப்பார், யாருடைய பேச்சையும் கேட்கவும் மாட்டார். அந்த நபர் செவிசாய்த்தாலும், தன்னுடைய நோக்கங்களுக்கும் முடிவுகளுக்கும் பொருந்துமாறு விபரீதமாக விளக்குவார். பிடிவாதம் ஆபத்தானது மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும். "அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார். அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்" (உபாகமம் 29:19-20) என மோசே போதித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பம்:
அந்த நபர் உடன்படிக்கை, கிருபை மற்றும் பாதுகாப்பிற்கான வாக்குத்தத்தம் என எல்லாம் புரிந்துக் கொண்டாலும் மீறலுக்கான விளைவுகளும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார். இன்றும் பலர், வாக்குறுதிகளை விரும்புகிறார்கள்; ஆனால் வாக்குத்தத்தங்கள் நிறைவேற வேண்டுமானால் தேவன் கோரிய நிபந்தனைகளை பின்பற்ற மறுக்கிறார்கள்.
புற பக்தி:
துரதிர்ஷ்டவசமாக, யூத மதத்தின் மதத் தலைவர்கள் வேதவசனங்களைத் தேடினர், ஆனால் சத்தியத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. "வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை" (யோவான் 5:39-40). அவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் போல இருந்தார்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்பட்டாலும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்; ஆம், தங்களை நீதிமான்கள் போல வெளியில் காட்டினாலும் தங்கள் இருதயத்திலோ அசுத்தத்தைக் கொண்டிருந்தார்கள் (மத்தேயு 23:27-28).
பரிசுத்தமும் தீர்ப்பும்:
தேவன் பரிசுத்தமானவர், நீதியுள்ளவர். மனந்திரும்ப விரும்பாத, தேவனுக்கு எதிராகக் கலகம் செய்து, பாவ வாழ்க்கையைத் தொடர்ந்து வசதியாக வாழும் பாவிகளை தேவன் தண்டிக்கிறார். அப்படி பாவிகளைத் தண்டிக்கவில்லை என்றால், பாவத்துடனும் பாவிகளுடனும் சமரசம் செய்து கொள்வது போலாகுமே.
பொறுப்புத் தன்மையைக் கோருதல்:
தேவன் மனிதர்களை பொறுப்புள்ள தார்மீக மனிதர்களாக படைத்துள்ளார். எனவே, தேவன் ஒவ்வொரு நபரின் கணக்கையும் விசாரிக்கிறார், அவரின் சோதனைக்கு எதுவும் தப்புவதில்லை. ஒரு நபர் தான் சரியான வழியில் செல்வதாக நினைக்கலாம், தனக்கு எதுவும் நேராது என நம்பலாம். ஆனால் தேவன் அவருடைய நோக்கங்களை எடைபோட்டு அவரை நியாயந்தீர்க்கிறார். "மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்" (நீதிமொழிகள் 16:2).
தாழ்மையான இதயம்:
மனிதர்கள் தேவனுக்கு முன்பாக தாழ்மையுடன் இருக்க வேண்டும், அதாவது அவர்கள் பாவம் செய்ததற்காக வருத்தப்பட வேண்டும், மனந்திரும்ப வேண்டும், பாவத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி மன்னிப்பு தேட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். அப்படி இருக்கும் போது அவர்கள் மன்னிக்கப்படுவார்கள் மற்றும் பாவத்தை வெல்லும் ஆற்றலையும் பெறுவார்கள்.
எனக்கு தாழ்மையான இருதயம் உள்ளதா அல்லது பிடிவாதமான இருதயம் உள்ளதா? சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்