தொடர் - 23
பள்ளி வளாகம் கலகலத்தது. மாணவர்கள் ஒருங்கே குழுமியிருந்தனர். “மாணவர்களை அடிமைகளாகக் கருதாதே”
பள்ளிக்கூடமா? கொள்ளைக்கூடமா?”
“நீதி போதனையா? அநீதி சாதனையா?”
“நீர் கொடுப்பது கல்வியா? கடைச்சரக்கா?”
“நீதி தரவேண்டிய நீர்வாகியே நல்ல பதில் தாரும்”
வாசகங்கள் தாங்கிய அட்டைகளை ஏந்திய மாணவர்கள் கோஷமிட்டனர். பள்ளியில் பொது, பெரிய கதவருகே மாணவர் தலைவனைக் கொண்ட ஒரு குழு நின்று ஆசிரியர்களை உள்ளே போகவிடாமல் தடுத்தது. செய்தியறிந்து நிர்வாகி தேடி வந்தார். அவருடைய கார் வளாகத்தின் உள்ளே நுழைய முடியவில்லை. தலைமையாசிரியரின் காட்டுக் கத்தல் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. ஜெபா செய்தியறிந்து வந்தார். ஜெபாவின் ஒளிப்பிழம்பான விழிகளைக் கண்ட மாணவர்குழாம் ,கோஷமிடுவதை நிறுத்தினர். விறுவிறுவென்று வளாகத்தின் உள்ளே சென்றார். யாரும் அவரைத் தடுக்க முன் வரவில்லை. கொடிக்கம்ப மேடையில் ஏறினார். “என் அருமைத் தம்பியரே! என்ன இது? இதுதான் நீங்கள் கண்ட வழியா?” மகுடி ஓசைகேட்ட நாகம் போல் அப்படியே நின்றனர். மாணவர் தலைவன் முன் வந்தான்.
“நீதி கேட்டோம் அண்ணா... கிடைக்கவில்லை. போராடி பெற முடிவெடுத்தோம். முதலில் போராட நாங்கள் நினைக்கவில்லை. ஏன் தெரியுமா? உங்களுடைய போதனைகள் எங்கள் உள்ளத்தில் பணிவையும், பொறுமையையும் வளர்த்திருந்தது. மனு கொடுத்தோம். மனு, மண்ணோடு மண்ணாகிவிட்டது போலும். எனவே, போராடியாவது நீதியைப் பெற வேண்டுமென முடிவெடுத்தோம். உங்களுக்குத் தெரிவித்தால்" இதை தடுத்து விடுவீர்களென உங்களுக்குத் தெரியாமலேயே செய்தோம். தவறு என்றால் மன்னித்துக்கொள்ளுங்கள். நாங்கள் எந்தப் பொருளையும் சேதப்படுத்தவில்லை. யாருக்கும் எந்த நஷ்டமும் தரவில்லை. எங்களுக்கு நீதி வேண்டும். அது கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நாங்கள். நகர மாட்டோம். செத்தாலும் சாகிறோம். முந்தைய சீர் வரட்டும். எங்கள் பின் சந்ததியாவது வாழட்டும்!”
உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. போலீஸ் வேன் உள்ளே நுழைந்தது. தலைமையாசிரியர் போலீஸுக்கு தகவல் அனுப்பிவிட்டுத்தான் வந்திருந்தார். தலைமையாசிரியர் வரவேற்றார். “மாணவர்களைத் தூண்டி விடுபவர்கள் அவர்கள் தான்” அவர் சுட்டுவிரல் ஜெபாவையும், தினகரனையும் சுட்டிக் காட்டியது. சுட்டிக்காட்டும் அவர் கரத்தின் மூன்று விரல்கள் அவரையே காட்டுவதை அவர் அறியவில்லை. மாணவர்கள் கோஷமிட ஆரம்பித்தனர். இன்ஸ்பெக்டர் முன்னால் வந்தார் “கலைந்து செல்லுங்கள்” ஆணையிட்டார்.
“மாட்டோம்! அடியுங்கள்! வாங்கிக் கொள்கிறோம். எங்களுக்கு நீதி வேண்டும்! நீதியின் காவலரே அநீதியை உடைத்து எங்களுக்கு நீதி வாங்கித் தாருங்கள்”.
“அமைதி” ஜெபாவின் குரல் கணீரென ஒலித்தது. “கலைந்து செல்லுங்கள், நீதி கேட்டீர்கள்.... கிடைக்கும்!”
மாணவர் கூட்டம் ஒரு கணம் செயலற்று நின்றது. “உம்... செல்லுங்கள், இறையருளை வேண்டிக் கொண்டே செல்லுங்கள். கடவுள் கருணை காட்டுவார்” கூட்டம் கலைந்தது. இன்ஸ்பெக்டருடன் ஜெபா, தினகரன், மாணவர் தலைவன் ஆகியோர் சென்றனர். நிர்வாகியையும், தலைமையாசிரியரையும் இன்ஸ்பெக்டர் அழைத்தார். அவர்களும் சென்றனர் காவற்கூடம். இன்ஸ்பெக்டர் தன்முன் அமர்ந்திருந்த ஒவ்வொருவரையும் கூர்ந்து நோக்கினார். நிர்வாகி எழுந்தார்.
நிர்வாகி சார்! நான் நிர்வாகப் பொறுப்பேற்றதிலிருந்து இவர்கள் இருவரும் பள்ளியின் எந்தக் காரியத்திலும் எனக்குக் கை கொடுப்பதேயில்லை.
எல்லாவற்றிலும் எனக்கு எதிராகத் தரன் செயல்படுகிறார்கள். மாணவர்களை மயக்கி வைத்திருக்கிறார்கள். நீங்கள்... இன்ஸ்பெக்டர்! உங்கள் குரலுக்குக் கீழ்ப்படியாத மாணவர்கள் இவன் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்துபோகிறார்களே . அதிலிருந்து தெரியல்லையா? போராடத் தூண்டுவது இவர்கள் தான் என்று!” கோபமும், வெறுப்பும் கொப்பளித்தன அவர் சொற்களில் (மாணவர் தலைவன் மணிவண்ணன் எழுந்தான். அவனது விழிகள் சிவந்தன)
மணி : சார்! பள்ளிக்கூடம் கொள்ளைக் கூடமாகி விட்டது. எங்க ஸ்டோருக்கு வந்து பாருங்க சார். எல்லாம் எக்கச் சக்கமான விலை. அங்கு வாங்கக் கூடிய புத்தகங்களை மதுரைக்கு பஸ்சார்ஜ் போட்டு வந்து வாங்கிக் கொண்டு போனால் கூட பரவாயில்லை. விலை குறைவு தான் என்றால் பார்த்துக்கங்க சார். குடிதண்ணீர் வசதி கூட பள்ளியில் குறைவாயிட்டது சார். சார்! டியூஷன் ஒண்ணு இருக்கே அது எதுக்கு சார்? தரம் குறைந்தவர்களை தகுதிப்படுத்தத் தானே டியூஷன்! இப்ப எங்க ஸ்கூல்ல நல்லா படிக்கிற பையன் கூட கட்டாயம் டியூஷன் படிக்கணும். இல்லாட்டா அவன் ரேங்க் எப்படியோ மாயமாய் அடுத்தவனுக்குப் போய்விடும்! ஆசிரியர்களை நியமிப்பதில் தான் அநியாயம். அதை நாங்க கேட்கவாசெய்தோம்?
த.ஆ : மணி (கா்சித்தார் தலைமையாசிரியர். காவற்கூடத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தவர் நிதானமாகப் பேச ஆரம்பித்தார். பள்ளியின் இந்தப் பிரச்சனைகளைப் பள்ளியில் பேசிக் கொள்வோமே (இன்ஸ்பெக்டருக்கு சிரிப்பு வந்தது).
இன்ஸ் : சார்! பள்ளியில் பேச முடியாமல் போலீஸ் ஸ்டேஷன்க்கு வந்த பின் பள்ளியில் பேசலாம் என்று சொல்கிறீர்களே சார்? ஏன் சார் தம்பி சொல்வதெல்லாம் உண்மையா?
த.ஆ : டியூஷன் படிக்க வற்புறுத்தலை! மாணவர்கள் விரும்புகிறார்கள் நாங்கள் எடுக்கிறோம்.
தினகரன் : சுத்தப் பொய்! பொய் என்பதை நிரூபிக்க என்னால் முடியும். ஏழை மாணவர் படும் வேதனை எல்லோரும் அறிந்ததே.
மணி : சார்! ஸ்டோரில் நாங்க வாங்கினால் பில் தர மாட்டார்கள். சிறு பிள்ளைகளுக்கு ஆறு, ஏழு வகுப்பு பிள்ளைகளுக்குரிய விலை விபரம் கொடுப்பார்கள். அதை சேகரித்து வைத்திருக்கிறேன். விலைகளைப் பார்க்கிறீர்களா? சாட்டின் உள்பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கொடுத்தான். (தலைமையாசிரியருக்கு தலை சுற்றியது.)
நிர்வாகி : விலை அதிகம் வைத்துத்தான் விற்கிறோம். ஆடிட்டோரியத்தைப் பெரியதாகக் கட்டப்போகிறோம்.
தினகரன் : இப்பொழுது இருக்கிற ஆடிட்டோரியம் போதுமானதே! மேலும் மாணவர்களுடைய இரத்தத்தை உறிஞ்சி அதில் சாந்து குழைத்து பெரிய ஆடிட்டோரியம் கட்ட வேண்டுமா என்ன?
இன்ஸ் : (ஜெபா பக்கம் திரும்பினார்) சார், நீங்க ஒன்றுமே பேசமாட்டேங்கிறீங்களே) இன்ஸ்பெக்டரைப் பார்த்தார்! ஜெபாவின் ஒளி வீசும் விழிகளில் சோகம் ததும்பியது.
ஜெபா : சார்! என் அருமை மாணவச் செல்வங்கள் பிரார்த்தனை மூலம் பலனை அடைய எண்ணாமல் போராட்டம் பண்ணத் துவங்கி விட்டார்களே என வேதனைப்படுகிறேன் சார்.
இன்ஸ் : நீங்கள் தான் போராடத் தூண்டினீர்கள் என்று நிர்வாகியும் தலைமை ஆசிரியரும் கூறுகிறார்கள். நீங்கள் போராட்டம் நடந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறீர்கள் விந்தையாக இருக்கிறது சார்.
மணி : சார்! எங்க ஜெபா சார் எங்களுக்கு வெறும் ஆசிரியர் மட்டுமல்ல! உடன்பிறவா மூத்த சகோதரர், ஆருயிர்... உள்ளத்தின் உணர்வுகளைக்கூட பரிமாறி ஆலோசனை பெறுவோம். இந்த முறை... ஜெபா அண்ணனிடம் நாங்க தெரிவிக்கவில்லை. ஏனென்றால் தெரிந்தால் தடுத்து விடுவார். அவரை, அவர் சொல்லை மீறி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே தெரியாமல் செய்தோம் போராடினால் தவிர நீதி கிடைக்காது என நம்பினோம். குனியக் குனியக் குட்டும் கரங்களை மடக்கிப் பிடிக்க விரும்பினோம்.
இன்ஸ் : (நிர்வாகி தலைமையாசிரியர் பக்கம் திரும்பினார்). உங்கள் மீது தவறுகளை .வைத்துக்கொண்டு காவல் துறைக்கும் வந்துவிட்டீர்கள். பள்ளி ஒழுங்காக நடக்க ஆவன செய்யுங்கள், கல்வி என்பது வியாபாரம் அல்ல. அது தொண்டு, சுய லாபம் கருதி நடத்த வேண்டிய தொழில் அல்ல சுயத்தை வெறுத்து எதிர்கால சமுதாயத்திற்காக தன்னையே தர வேண்டிய தியாகம்! இனியாவது அதை உணர்ந்து செயல்படுங்கள். பகையுணர்வை விட்டு விட்டுப் பாடுபடுங்கள்.
மணி : சார்! ஒரு வேண்டுகோள்! உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். எங்கள் ஜெபா அண்ணனுக்கோ தினகரன் சாருக்கோ எதுவும் ஆபத்து வந்திடக்கூடாது 'சார். என் மனதில் ஏதோ பயம் எழும்புகிறது. நீங்க...(நிறுத்தினான் அவன் கண்கள் கலங்கியிருந்தன.)
(தனது ஆசிரியர்கள் மீது இப்படி ஒரு பாசமா? இன்ஸ்பெக்டர் வியந்தார்)
இன்ஸ் : கவலைப்படாதே! எதுவும் வராது. (நிர்வாகியின் பக்கம் திரும்பினார்) தம்பி சொன்னதை புரிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். கவனமாக இருங்கள். ஆழந்தெரியாமல் காலை விட்டு விட்டுக் கதறாதீர்கள்! கடவுள் கண்மூடி இருக்க மாட்டார். காவல் துறையும் தூங்கி விடாது. சென்று வாருங்கள்!.
அனைவரும் வெளியே வந்தனர். யாருமே எதிர்பாராத ஒரு செயல் அங்கு நடந்தது. மணி சடாரென ஜெபாவின் கால்களில் விழுந்தான்: பதறிப்போய் அவனைத் தூக்கினார் ஜெபா. “என்னை மன்னிச்சிடுங்க சார்! இப்படி ஒரு போராட்டத்தை நடத்திட்டேன். அனுபவமற்ற இளமை வேகம். என்னை மன்னிச்சிடுங்க சார்! விம்மினான்.
“அழாதே மணி! நடந்ததை மற, நடப்பதை நினை!” ஆதரவாக அணைத்துக்கொண்டார்.
தலைமை ஆசிரியருடன் தன் காரில் வந்து அமர்ந்த நிர்வாகியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “என்னைக் கேட்காமல் உங்களை யார் போலீஸுக்கு போன் பண்ணச் சொன்னது? உங்க பேச்சை நம்பி, முழுப்பொறுப்பையும் உங்களிடம் விட்டதற்கு இன்று என் முகத்தில் நன்றாகக் கரி பூசி விட்டீர்கள்? வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தது. தலைமையாசிரியருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. திகைத்துப் போய் அமர்ந்திருந்தார். "
இதன் தொடர்ச்சி புயலுக்குப் பின் அமைதி என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.