தொடர் – 20
வசந்தியை ஏற்றிக் கொண்ட துரைராஜின் சைக்கிள் பசுஞ்சோலை நோக்கி திரும்பியது. ஆயிரம் ஆயிரமான எண்ணங்கள்! வீட்டை அடைந்தவன் விறுவிறுவென மாடிப் படிகளில் தன்னறையை அடைந்தவன் பொத்தென்று படுக்கையில் விழுந்தான் வசந்தி மெல்ல படிகளில் ஏறினாள். அவள் உள்ளம் பின்னோக்கிச் சென்றது.
மேனேஜர் வீட்டை அடைந்தவள், வீட்டார் அனைவரும் வெளியூர் சென்றிருப்பதை அறிந்தாள். ஊரை விட்டுத் தள்ளியிருந்த அந்தப் பெரிய வீட்டின் உள்ளறையில் தானும் அவரும் மட்டுமே இருப்பதை அறிந்தாள். மேனேஜரின் சிவந்த கண்கள்: தாறுமாறான வார்த்தைகள் அவளைத் திடுக்கிட வைத்தன. வெளிக் கதவு மூடப்பட்டிருப்பதையும் தன் பெண்மை கசக்கி எறியப்படப் போவதையும் உணர்ந்தவள், செய்வதறியாது தவித்தாள். ராதாவின் வார்த்தைகள் செவிகளில் மோதியது.
“என் இயேசுவே! என்னைக் காப்பாற்ற உன்னால் முடியும்” என அவள் கதறவும் “வசந்தி!” என்ற துரைராஜின் குரலையடுத்து ஆவேசமாக அந்த அறையினுள் கதவைத் திறந்து நுழைந்தான் துரைராஜ். வசந்தி காப்பாற்றப்பட்டாள்! நினைவுகள் அறுந்தன.
படிகளில் ஏறிக் கொண்டிருந்த வசந்தியின் ஆணவம், அகம்பாவம், அலட்சியம், அலங்காரம் எல்லாம் அதள பாதாளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
குத்துவிளக்காகத் திகள வேண்டியவள் தெருவிளக்காக எரிந்ததை நினைத்து வெட்கப்பட்டாள். உன்னத தேவனின் கிருபையை வலிமையான கரத்தை உணர்ந்தாள். அறையினுள் நுழைந்தவள் வேதத்தை கையில் ஏந்தினால் விம்மி விம்மி அழுதாள். அடுத்து தன் கணவனை நோக்கினாள். மெல்ல அவனிடம் வந்தவள், அவன் பாதங்களை தன்னிரு கரத்தாள் பற்றினாள். “மன்னிச்சிடுங்கத்தான்” விம்மல் வெடித்தது. துடித்துத் திரும்பினான், அவள் கரங்களிலிருந்து தன் பாதத்தை விடுவித்தவன், அழுதான். இருவரும் சிறிது நேரம் அழுதனர். இருவரது உள்ளமென்ற வானத்தில் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த வெறுப்பு, அலட்சியம் ஆகிய கருமேகங்கள் கண்ணீர் மழையாகக் கொட்டியது. ஒருவர் கண்ணீரை ஒருவர் துடைக்க உள்ளமென்ற வானம் பாசமென்ற நிர்மலமான வானமாகத் திகழ்ந்தது.
“ஜெபிப்போமா?” துரைராஜ் வினவ, வசந்தி மண்டியிட்டாள். இருவர் இதழ்களும் ஸ்தோத்திர பலியைப் படைத்தன. வசந்தியின் வாழ்வில் விந்தை மாற்றம், கயவனது கல்விக் கூடத்தில் ஆற்றிய பணிக்கு வசந்தியும், ராதாவும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். குடும்ப ஜெபத்தின்போது குப்புறப்படுத்துத் தூங்கும் ;வசந்தி, குடும்ப ஜெபத்திற்கு மற்றவர்களை எழுப்ப ஆராம்பித்தாள். வீட்டின் சன்னல்களையும், வாசலையும் அழகிய திரைகள் அலங்கரித்தன. அழகுப்பொருட்கள் வீட்டை அலங்கரித்தன. பின்புறமுள்ள தோட்டத்தில் மலர்ச் செடிகள் பல இடம் பெற்றன. துரைராஜின் தங்கை பானு விதவிதமான ஆடைகள் அணிந்து பள்ளி சென்றாள். மாலையில் சில பெண்களுக்கு தையல் சொல்லிக் கொடுத்தாள். சமையலில் அத்தைக்கு உதவி செய்தாள். நாட்கள் நகர்ந்தன. அதிகாலையில் எழுந்து ஜெபம், வேதவாசிப்பு, தியானம் என அதிக நேரம் செலவிட்டாள். ஓய்வுநாள் பள்ளி ஆசிரியை ஆனாள். பசுஞ்சோலை கிராமத்தில் ஒரு மிஷனெரிக்கூட்டம் நடந்தது. அதன் விளைவால் பல ஜெபக் குழுக்கள் முளைவிட்டன. ஜெபக்குழு சந்திப்பு என்ற பொறுப்பு வசந்தியை அடைந்தது. பொழுது போகவில்லை என்று கவலைப்பட்ட அவள், இன்று பொழுது போதவில்லை (நேரம் அதிகமில்லை) என்ற நிலைக்கு வந்தாள்.
வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள் செண்பகம், அங்கு வந்த சாந்தி " என்ன அத்தை வசந்தியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?" சிரித்துக் கொண்டே கேட்டாள்.
"ஆமாண்ட சாந்தி! வசந்தி இன்றைக்கு விரதம். ஜெபத்திற்கு கீழ்த்தெரு அம்புஜம் வீட்டுக்குப் போயிருக்கிறாள். வாயும் வயிறுமா இருக்கா. இன்னும் காணலையே! அதுதான் பார்த்துக் கொண்டிருக்கேன்" அவர் சொற்களில் தாய்ப்பாசம் தெரிந்தது.
வசந்தியும் ராதாவும் வந்தனர்.
"ராதா உன் புருஷன் வேலையில் போய் சேர்ந்திட்டானா?" பரிவுடன் வினவினாள் செண்பகத்தம்மாள்.
“இயேசு பகவான் கருணையம்மா! நல்ல சுகமாகி வேலையில் போய் சேர்ந்துவிட்டார்” பணிவாக பதில் சொன்னாள் ராதா.
“அதுமட்டுமா? ராதா மகாராணியும் மதுரையில் போய் குடியேறப் போறாங்க!” உற்சாகமாக சிரித்துக்கொண்டே சொன்னாள் வசந்தி.
“ரொம்ப சந்தோஷம்” செண்பகத்தம்மா முகம் மலர்ந்தது. புன்முறுவலோடு “போயிட்டு வரேம்மா” என்றபடி விடைபெற்றாள் ராதா.
“சாந்தி! எல்லாம் அதிசயமா இருக்குடா! கிருஷ்ணன் டி.பி.ன்னு வீட்டுக்கு வரவும் நான் ரொம்ப பயந்துட்டேன். இந்தப் பிள்ளை வாழ்க்கை என்ன ஆகப்போகுதோன்னு?” உண்மை அனுதாபத்துடன் சொன்னாள் செண்பகம்.
“அவர் சுகமில்லாமல் இங்கு வந்தது தான் நல்லதாப்போச்சு! ராதா படுற கஷ்டத்தையெல்லாம் நேரில் பார்த்தார். மகன் சுகவீனத்தில் அதிக செலவாகிவிடுமே என பயந்து ராதாவின் மாமானார் கொஞ்ச நிலத்தைவிற்று மகள் பேரில் பேங்கில் போட்டுவிட்டார். இதையுணர்ந்த கிருஷ்ணன் வேதனையடைந்தார். ஆண்டவரின் அன்பையும்; வல்லமையையும், வழி நடத்துதலையும் உணர்ந்தார். ராதாவின் கண்ணீர் ஜெபம், நம் அனைவரின் வேண்டுதலால் சுகமடைந்த கிருஷ்ணன், வேலையில் சேசர்ந்தார். வருகிற சனிக்கிழமை ராதாவை கூட்டிட்டுப் போகப் போறார்” என்ற வசந்தியை தொடர்ந்தாள் சாந்தி, “எல்லாம் நன்மைக்குத்தான் நடக்கும். தன்னை நம்பிய பிள்ளைகளை ஒருபோதும் தேவன் கைவிடமாட்டார்”.
“நேரமாகுதடா வசந்தி! சாப்பிட்டு அப்புறம் பேசு.... நீயும் வாம்மா சாந்தி” என்றபடி செண்பகத்தம்மா சமையலறை நோக்கிச் சென்றார்.
இதன் தொடர்ச்சி சுனாமி அலை! என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.