தொடர் - 2
மறுநாள் மாலை! கவிதாவை ஹாஸ்டலில் காணாததால் ஹாஸ்டலுக்குப் பின்புறமிருந்த தோட்டத்திற்கு வந்தாள் குளோரி. ஒரு மரத்தடியில் அமர்ந்து அதிக கவனத்துடன் படித்துக் கொண்டிருந்தாள் கவிதா, மெல்ல நடந்து வந்த குளோரி, கவிதாவின் அருகில் வரவும், திடுக்கிட்ட கவிதா பட்டென்று புத்தகத்தை மூடினாள். “கவிதா! பாடப் புத்தகத்திற்குள் மறைத்து வைத்து, ரொம்ப கவனமாகப் படிக்கும் அளவிற்கு அது என்ன புத்தகம்?
குளோரி! அது... அது .. ஒரு கதைப்புத்தகம், நல்லா இருக்கு குளோரி! ஒரு புகழ் பெற்ற ஆசிரியர் எழுதியிருக்கிறார்! அந்தக் கதையில ஒரு பெண் தன் குடும்பத்தைக் காப்பாற்ற என்ன பாடுபடுகிறாள் தெரியுமா?”
“கவிதா! ஒரு பெண்கதை தான் இந்தப் புத்தகத்திலே இரு. ஆனால் எங்கிட்ட இருக்கிற புத்தகத்திலே தன் குலம் "வாழ்வதற்காக தன்னுயிரையும் பொருட்படுத்தாது, துணிந்து மன்னனிடம் மன்றாடி, மரண நாளை மகிழ்ச்சி நாளாக்கிய பெண்! எதிரிகளுக்கு அஞ்சி நடுங்கிய தன்நாட்டு மக்களுக்கு வீரவுணர்வூட்ட, தன் நாடு வாழ போர்முனைக்கே சென்ற வீராங்கனை! இறந்த சகோதரனை மீண்டும் பெற்ற பக்தியுள்ள பாவை! ஊசியினால் உயிர் பெற்ற பெண் ! தன் கணவன் அடி பின்பற்றிய கற்புக்கரசி! குடும்பம் தேவனுக்குப் பிரியமான குடும்பமாகத் திகழ அன்பான கணவன் மனங்கோணதபடியும், இறைவன் திருவுளச்சித்தம் நிறைவேறவும்: விவேகமாக நடந்த இல்லத்தரசி ! இருதாரச் சண்டைகள் ! வீண்பேச்சு பேசச் சென்று வாழ்வை இழந்த வனிதை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் எத்தனை பெண்கள் தெரியுமா? அத்தனையும் உண்மைச் சம்பவங்கள்!
ஏய் குளோரி! உண்மையாகவா சொல்ற... நீ கதைப் புத்தகம் படிக்க மாட்டாயே?” சிறிது நிறுத்தியவள் தொடர்ந்தாள். “குளோரி, கதைப்புத்தகம் படிப்பதால் எந்தத்தவறும் இல்லை அப்படித்தானே ! பைபிளில் கதைப்புத்தகம் படிக்கக்கூடாது என்று ஒரு இடத்தில் கூட போடவில்லையே!
அப்படியா கவிதா? பைபிள் முழுவதும் வாசித்திருக்கிறாயா? ஒரு தடவையாவது வாசித்திருக்கிறாயா?
அசடு வழிந்தது கவிதாவிற்கு, நாம் வாசிக்காவிட்டால் என்ன? இந்த உலகில் நிறைய ஊழியக்காரர்கள், பாஸ்டர்ஸ் எல்லாம் படித்துத்தான் நமக்குச் சொல்லுகிறார்களே!
“கதைப்புத்தகம் படிக்கக் கூடாது' என்று எழுதியிருந்தால், தெருத் தெருவிற்கு. அதை சுவரொட்டியாக எழுதி ஒட்டிவிடமாட்டார்களா? தான் அதிக ஞானமாகப் பதில் கொடுத்ததாக கேலியாகக் கூறியவள், ஏய் குளோரி, நீ வைத்திருக்கும் கதைப் புத்தகத்தைக் கொடுடி. பத்திரமா படிச்சிட்டுத் திருப்பித்தந்துடுறேன்” கெஞ்சினாள் கவிதா.
நீ கேட்டவுடனே நான் கொடுக்கணுமோ? அது விலையேறப்பட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தை களங்கமில்லாத ஞானப் பால் என்று கூடச் சொல்லியிருக்கிறார்கள். இந்த உலகத்திலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க் கப்பட்ட புத்தகம் அதுதான் தெரியுமா? மனிதரை மாற்றும் மகத்தான புத்தகம் அது!”
எங்க இருக்குடி அந்தப்புத்தகம்? சீக்கிரம் சொல்லித் தொலை. விலைக்குக் கிடைச்சாலு வாங்கிக்கலாம்.
உங்கிட்டேயே இருக்குதே!
எங்கிட்ட இருக்கா? ஆச்சரியமாகக் கேட்டாள். ஆமா கவிதா! அந்தப் புத்தகம் பைபிள். எஸ்தர், தெபோராள், மரியாள், தபீத்தாள், சாராள், லேயாள், ராகேல், தீனாள் போன்ற பல பெண்களை உள்ளடக்கிய பைபிள்”? அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் குளோரி.
ஏமாற்றத்தினால் முகம் சுருங்கியது கவிதாவிற்கு “போடி குளோரி! என்னை ஏமாற்றி விட்டாய் !
“கவிதா நான் பொய் சொல்லவில்லை. நீ தொடர்ந்து வேதத்தை வாசி. அநேகரின் வாழ்க்கையை அதில் காண்பாய்!”
குளோரி 1 நான் காலை யிலும் மாலையிலும் 5 வசனம் வாசிப்பேன் . தெரியுமா ? பெருமையாகச் சொன்னாள் கவிதா.
அப்படியா? கெட்டிக்காரப் பிள்ளை தினமும் காலையில் 5 சொட்டு தண்ணீர், மாலையில் 5 சொட்டு தண்ணீர் குடி போதும்!”: சிரிக்காமல் சொன்னாள் குளோரி.
ஏய் என்னை கேலி பண்றையா?””
“பின்ன என்னடி? தண்ணீர் தம் உடலுக்கு எவ்வளவு அவசியமோ அதைவிட நம் ஆத்துமாவிற்கு ஜீவ தண்ணீராகிய வசனத்தை ஆவலோடு எவ்வளவுக்கு எவ்வளவு அள்ளிப் பருகுகிறோமோ? அவ்வளவுக்கு நாம் வாழ்வோம் உயர்வோம்!” என்றவள் அதுசரி! நேற்று உங்க ஆன்டியை மீட்டிங்கில் பார்த்தேன். உன்னைப் பற்றி...” பாதியோடு நிறுத்தினாள்.
தீயை மிதித்தவள் போல் திடுக்கிட்டவள் “என்னைப் பற்றி கேட்டாயா?” அவசர அவசரமாகக் கேட்டாள். பயம் அவள் முகத்தை வெளிரச் செய்தது.
உன்னைப் பற்றி கேட்க நினைத்தேன் கேட்கவில்லை. ”
ஆனால்
ஒரு பெருமூச்சு விட்டாள் கவிதா.
“கவிதா எஃஸாம்' நெருங்குது. நீ மீனாவுடன் சேர்ந்து கொண்டு கண்டபடி உன் நேரத்தை வீணாக்காதே. பள்ளி ஆண்டு விழாவிற்கு காட்டற இண்டரஸ்டை படிப்பில் காட்டேன்”.
கலகலவென சிரித்தாள் கவிதா. *குளோரி! இளமைப் பருவம் கிடைக்க இயலாத பருவம். வாழ்வின் இன்பத்தை எல்லாம் அனுபவிக்க வேண்டிய பருவம். நான் மேடையில் நாடகத்தில் உணர்ச்சிப் பிழம்பாய் மாறி, பிறரை அழவும், சிரிக்கவும் வைக்கும் போது என் உள்ளம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. படிப்பு! சே! ஒரே போர்!
கவிதா! நீ பேசுவது வேடிக்கையா இருக்குடி ! நாம படிக்கத்தான் வந்திருக்கிறோம். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியதுதான் அதே சமயம் படிப்பை விட்டு விடக்கூடாது!””
“குளோரி! நான் என்ன படித்து வேலையா பார்க்கப் போறேன்? எங்கப்பா நல்ல பிஸினஸ் மேன்! நான் பொழுது போகவில்லையே என்று காலேஜ்க்கு வந்திருக்கிறேன். தெரியுமா?'' பணச்செருக்கு அவள் முகத்தில் மிளிர்ந்தது. பேசிக் கொண்டே ஹாஸ்டலை நோக்கி நடந்தனர்.
தேர்வினை சந்தித்து விட்டு வீடுநோக்கி வந்தவளை எதிர்பாராத அதிர்ச்சி எதிர் நோக்கியிருந்தது.
இதன் தொடர்ச்சி சோக கீதம்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.