நூலகங்களில் இருந்து அதிகம் திருடப்பட்ட இரண்டாவது புத்தகம் வேதாகமம் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பரிசுத்த புத்தகம் நூலகங்களிலிருந்தும் சில சமயங்களில் திருச்சபைப் பீடங்களிலிருந்தும் திருடப்படுகிறது.
மூடநம்பிக்கை:
ஒரு கலாச்சாரத்தில், திருடப்பட்ட தெய்வத்தை தனிப்பட்ட கடவுளாகக் கொண்டிருப்பது மகத்தான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது என்று தவறான கருத்து இருப்பது போல் திருடப்பட்ட வேதாகமங்கள் ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என நம்புகிறார்களோ!.
எளிய மற்றும் முட்டாள்தனம்:
புத்திசாலிகளுக்கு மாறாக முட்டாள்தனம், திருடப்பட்ட தண்ணீர் இனிமையானது என்றும், தடைசெய்யப்பட்ட இன்பம் ஒரு சுகம் என்று எளியவர்களை அழைக்கிறது (நீதிமொழிகள் 9:17). அதனால் தான் திருடுவது ஒரு பழக்கமாக இருக்கலாம்; அதில் வேதாகமத்தைக் கூட திருடுகிறார்கள். புனித அகஸ்டின் கிறிஸ்துவை அறிவதற்கு முன்பே, பழங்களைத் திருடுபவராக இருந்தார். அது பசியால் அல்ல, பாவத்தின் இன்பம். முறையான விஷயங்களை விட சட்டவிரோதமான விஷயங்கள் விரும்பத்தக்கவை என்ற சோதனையையும் இது குறிக்கிறது.
காட்சிப்பொருள்:
சிலர் வேதாகமத்தை திருடி தங்கள் ஷோகேஸில் வைத்திருப்பது அவர்களின் மதிப்பை உயர்த்துகிறது என்பதாகவும் , தங்கள் அலுவலகங்கள் அல்லது வீடுகளுக்குச் வருபவர்களிடம் தங்களை தெய்வீகமானவர்கள் அல்லது பக்தியானவர்கள் எனக் காட்ட வேண்டும் என நினைப்பதுண்டு. மேலும், அவர்கள் தங்களை அறிஞர்கள் அல்லது ஞானிகள் என்று நினைக்கலாம். இப்படிப் போன்றவர்கள் படித்த அல்லது மதம் சார்ந்த காரியங்களில் உயரடுக்கைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தைத் தருவதே தவிர, படிப்பது நோக்கம் அல்ல.
சத்தியத்தைத் தேடுங்கள்:
சிலர் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேதாகமத்தைத் திருடலாம். அனேகமாக, அவர்களுக்கு வேதாகமத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கலாம் ஆனால் அதை எங்கே பெறுவது என்று தெரியாமல் இருக்கலாம். நூலகத்தில் அதைக் கண்டால், அதைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று படிக்கவும், சத்தியத்தைத் தேடவும் ஆசைப்படுகிறார்கள்.
ஆவியின் வாள்:
வேதாகமம் தேவனின் வார்த்தை மற்றும் ஆவியின் வாள் என்று அழைக்கப்படுகிறது. அது செத்த இலக்கியம் அல்ல, வாழ்வை மாற்றும் உயிருள்ள ஆவணம். “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபிரெயர் 4:12). வேதாகமத்தைத் திருடியிருக்கலாம் அல்லது வாங்கியிருக்கலாம் அல்லது கடன் வாங்கியிருக்கலாம், ஆனால் திறந்த மனதுடன் வாசிக்கும் போது மட்டுமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் சந்திப்பார்கள்.
நான் என் வாழ்நாள் முழுவதும் வேதாகமத்தின் மாணவரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்