மிகப்பெரிய சபை ஒன்றில் பேச ஒரு வேதாகம ஆசிரியர் அழைக்கப்பட்டார். சபையின் முக்கிய உறுப்பினருடன் அவர் உரையாடினார். உறுப்பினர் தனது விசுவாசப் பயணத்தைப் பற்றி பெருமையாகப் பேசினார். “பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த சபைக்கு வந்த போது சைக்கிளில் வந்தேன். அப்போது தேவன் எனக்கு ஒரு மோட்டார் சைக்கிளை அருளினார். இப்போது என்னிடம் ஹூண்டாய் கார் உள்ளது. அடுத்த வருடம், ஹோண்டா சிட்டி வாங்க திட்டமிட்டுள்ளேன். எனது இரண்டு குழந்தைகளும் இப்போது நகரத்தில் உள்ள சிறந்த ஆங்கில வழிப் பள்ளியில் படிக்கிறார்கள். மேற்படிப்பை வெளிநாட்டில் படிக்க திட்டமிட்டுள்ளனர். இரண்டு அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த நாங்கள் நான்கு அறைகள் கொண்ட பெரிய இடத்திற்கு மாறியுள்ளோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், தேவன் எங்களைச் செழிப்பாக்கியுள்ளார் மற்றும் எங்கள் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தினார் என கூறி முடித்தார்.
அப்போது வேதாகம ஆசிரியர்; “அடடா, அற்புதமான சாட்சி; கர்த்தருக்கே மகிமை. அது சரி; தேவன் ஏன் நம் செல்வத்தை பெருக்குகிறார் என்று தெரியுமா?” எனக் கேட்டார்.
அதற்கு அவர்: "இந்த உலகில் நாம் செழிப்பாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும், செல்வந்தர்களாகவும், ஐசுவரியவான்களாகவும் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்" என பதிலளித்தார்.
"ஆசீர்வாதம் அளித்ததற்கு அல்லது செழிப்புக்கு ஏதேனும் தேவ நோக்கம் உள்ளதா?" என்று கேட்டார் வேதாகம ஆசிரியர். தான் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன் என்று சொன்னவருக்கு ‘ஏன்’ தேவன் தன்னை உயர்த்தினார் என்று சொல்ல தெரியவில்லை.
வேதாகம ஆசிரியர் இப்படியாக விளக்கினார்; அதாவது நாம் சிறந்த உக்கிராணக்காரர்களா இல்லையா என அறிந்துக் கொள்ள, நம்மைச் சோதிக்க நம் வாழ்க்கைத் தரத்தை தேவன் உயர்த்துகிறார். அப்படி வாழ்க்கைத் தரம் உயரும்போது, நமது கொடுக்கல் தரமும் உயர வேண்டும் அல்லவா.
எல்லாவற்றையும் கேட்ட அவர் ஒரு அசட்டுச் சிரிப்பை சிரித்தார். தொடர்ந்து வேதாகம ஆசிரியர்; “சகோதரரே நீங்கள் சைக்கிளில் வரும்போது தேவனுக்கு 10% தசமபாகம் கொடுத்தீர்கள், மோட்டார் சைக்கிளில் வரும்போதும் அதே சதவீதம்; நீங்கள் உங்கள் காரில் வரும் போதும் அதே சதவீதம். ஆக, கர்த்தர் உங்களை உயர்த்தும் போது உங்கள் கொடுக்கும் சதவீதத்தையும் அதிகரித்துவிட்டீர்களா?" என்றார்.
கொடுப்பது என்பது ஆவிக்குரியச் செயல்
பறிப்பதும், பதுக்குவதும், பணம் கொடுக்காமல் இருப்பதும் மனித இயல்பு. கொடுப்பது என்பது சீஷர்களிடையே காணப்பட வேண்டிய ஆவிக்குரிய பண்பு. கர்த்தர் தம்மையே கொடுத்தது போல், நன்மை செய்வதற்கும், தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டுவதற்கும், மக்களை வெளிச்சத்திற்கு அழைத்து வருவதற்கும் நம்மையே அர்ப்பணிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
உழை, சம்பாதி, கொடு
உலகம் உழைக்கவும், சம்பாதிக்கவும், சேமிக்கவும் கற்றுக்கொடுக்கிறது, ஆனால் சீஷர்கள் உழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும், தேவையில் உள்ளவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். "ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே" (2 தெசலோனிக்கேயர் 3:10) என்று பவுல் எழுதுகிறார். "பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று" (அப்போஸ்தலர் 20:35) லூக்கா எழுதுகிறார்.
கொடுப்பதில் எனது தரம் உயர்ந்துள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்