கோதுமை வயல்களும், திராட்சைத் தோட்டங்களும் நிரம்பிய கலிலேயா நாட்டிலே நாசரேத் என்னும் சிற்றூரில் ஒரு இல்லம்... மரியாள் மேலாடைக்கு பூ தைத்துக்கொண்டிருந்தாள். எஸ்தரும் ரெபேக்காவும் உள்ளே வந்தனர்.
“என்ன மரியா... பூப்போடுகிறாயா? உனக்கா இல்லை அவருக்கா?” எஸ்தர் கேலி பண்ணினாள்.
போடி எஸ்தர்!” மரியாவின் வதனம் செக்கர்வானமாகச் சிவந்தது. நீள் விழிகள் நிலம் பார்த்தன. அவள் முகத்தில் படர்ந்த நாணம் அவள் அழககுக்கு அழகு ஊட்டியது. அவளையே கண்கொட்டாமல் பார்த்த ரெபேக்கா, “மரியா! வேதம், தியானம், ஜெபம் என்று வாழும் உன்னைப் பார்த்து நான் ஆச்சரியப்படுபவள். நீ ஒரு சாதாரணப் பெண் அல்ல. தெய்வீகப் பெண் என்றே உன்னை மதிந்திருந்தேன். உனக்கு திருமணப் பேச்சு பேசவும் 'நீ எப்படி இல்லற வாழ்வில் ஈடுபடுவாய்?' எனக் குழம்பினேன். ஆனால் இன்று உன் வதனத்தில் படர்ந்த நாணமும், கண்களில் குமிழியிட்ட கற்பனையின் ஊற்றும், நீயும் ஒரு சாதாரணப் பெண்தான் என உணர்ந்து கொண்டேன்'' நெஞ்சத்தின் அடித்தளத்திலிருந்து வந்த உண்மைச் சொற்களை உதிர்த்தாள்.
“அக்கா! சாதாரணப் பெண் என்றால் பக்தியாக இருக்கக் கூடாது என அர்த்தமா? என்னைப் பொறுத்தவரை என் வாழ்வில் அன்றும், இன்றும், என்றும் முதலிடம் யெகோவாவிற்குத்தான் (கடவுளுக்குத்தான்). அதன் பின்தான் மற்றவர்க்கு'' அழுத்தமாகச் சொன்னாள்.
இவர்கள் பேச்சிற்கு இடையே புகுந்தாள் எஸ்தர்.
“ரெபேக்கா அக்கா! மரியா திருமணத்திற்காக விளக்கை ஆயத்தம் பண்ணிவிட்டேன். எண்ணெயும் கூடக் கொண்டு வரவேண்டும் இல்லையா?”
“ஆமாம். கட்டாயம் கொண்டு வர வேண்டும். யோசேப்பு, அதிக நேரம் உங்களைக் காக்க வைக்க மாட்டாரென எண்ணுகிறேன்”' சிரித்தாள் ரெபேக்கா.
“அக்கா! திருமணம் எப்படி நடக்கும்? சொல்லுங்களேன்”' சிறு பிள்ளையைப் போல கெஞ்சினாள் எஸ்தர். திருமணமாயிருந்த ரெபேக்கா கடந்த ஆண்டு நடைபெற்ற தனது திருமணத்தை நினைவு கூர்ந்தாள். புத்தம் புதுமலராய் இன்றும் அவள் நெஞ்சத்திலே மஞ்சம் கொண்டிருக்கும்! மகிழ்ச்சியான தினமல்லவா அது?
“மணமகளின் வீட்டில் மணமகள் திருமண அலங்காரத்துடன், தன் தோழிப் பெண்களுடன் காத்திருப்பாள். பின் இரவுவேளையில் மணமகன் தன் நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ மண அலங்காரத்துடன் ஒளி வெள்ளத்தில் அழைத்துக் கொண்டு வரப்படுவான் இசை வெள்ளமும் மகிழ்ச்சி ஆரவார முழக்கமும், மணமகன் வருகையை மணமகள் வீட்டிற்கு அறிவிக்கும். உடனே மணமகளின் தோழியராகிய கன்னிப் பெண்கள் கைகளில் விளக்கேந்தி மணமகனுக்கு எதிர்கொண்டு போய் அவரை வரவேற்று அழைத்து வருவார்கள். மணமகனின் இல்லத்தில் திருமணச் சடங்கு நடைபெறும். அதன் பின் நண்பர், உறவினர் சூழ மணமகளை அழைத்துக் கொண்டு மணமகன் தன் இல்லத்திற்கு ஊர்வலமாகச் செல்வான். ஊர்வலத்தில், கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் கையில் விளக்கு வைத்திருக்க வேண்டும். மணமகன் வீட்டில் விருந்து நடைபெறும். கையில் விளக்கில்லாதவர் ஊர்வலத்திலோ, விருந்திலோ கலந்து கொள்ள முடியாது”.
அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் மரியாளும், எஸ்தரும்.
"திருமணச் சடங்கு என்றால்... அது என்ன? எப்படி நடக்கும்?” எஸ்தர் கேட்டாள்.
"நீ எல்லாவற்றையும் கேட்பாய் போலிருக்கிறதே! அதையெல்லாம் சொல்லிவிட்டால்.... வாழ்வின் சுவையே போய்விடும். உனக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும் அப்பொழுது எல்லாவற்றையும் தெரிந்துகொள்.” ௮வள் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினாள் ரெபேக்கா.
“போக்கா! உனக்கு எப்பவும் கேலிதான்...! அப்பா வந்துவிடுவார். அம்மா, அப்பத்திற்கு மாவு திரிக்கச் சொன்னார்கள். நான் வரேன்'' எஸ்தர் புறப்பட்டாள். ரெபேக்காவும் விடை பெற்றாள். தோழியர் சென்றபின் மரியாள் தனித்துவிடப்பட்டாள். ரெபேக்கா கூறியவற்றை அவள் உள்ளம் அசைபோட ஆரம்பித்தது. மரியாளே!'' கனிவான அழைப்பு. திடுக்கிட்டு நிமிர்ந்தாள் எதிரே தூய வெண்ணிற உடையில் செட்டைகளுடன் தேவதூதன் ஒருவர் நின்றிருந்தார்
"இதுவரை அவள் இப்படி ஒருவரை சந்தித்ததே இல்லை. வேதத்திலே.. சிம்சோனின் தாயும், கிதியோனும் ஒரு சிலரும் தேவதூதரை தரிசித்ததாக வாசித்திருக்கிறாள். ஆனால்... தற்போது அதைப் போன்ற தேவதரிசனம் யாருக்கும் கிடைத்ததாக அவள் கேள்விப்படவே இல்லை. எனவே தெய்வீகப் பிரசன்னம், அந்தப் பூங்கொடியை அச்சமுறவைத்தது. முழங்காற்படியிட்டாள். அவளுடைய மெல்லிய சரீரமோ மெதுவே ஆடிக்கொண்டிருந்தது''
மரியாளே! பயப்படாதே நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய். அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக அவர்.. தேவனுடைய குமாரன். யூதர்கள் எதிர்பார்க்கும் மேசியா!”
தேவதரிசனத்தை விட அவள் கேட்ட செய்தி அவளை திகைக்க வைத்தது தான் கர்ப்பவதியாவதா?'': தன், ஐயத்தை மெல்லவே வெளியிட்டள்.
இது எப்படியாகும்? இன்னும் எனக்குத் திருமணமே ஆகவில்லையே!
பரிசுத்த ஆவி உன் மேல் வரும். உன்னதமானவரின் பலம் உன்மேல் நிழலிடும். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் குழந்தை பரிசுத்தமுள்ளது.
உனக்கு உறவினரான எலிசபெத்தும் தன் முதிர் வயதிலே கர்ப்பந்தரித்திருக்கிறாள். மலடி எனப்பட்ட அவளுக்கு அது ஆறாம் மாதம். கடவுளால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
“இறைவன் தன்னிடம் குழந்தையாகப் பிறக்கப் போகிறார்” அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த விலையேறப்பெற்ற மகிமை பொருந்திய இடத்தை தேவன் தனக்களித்தாரே என உணர்ந்தபோது பெருமிதத்தால் அவள் உள்ளம் விம்மியது. அதே விநாடி திருமணத்திற்கு முன்பே கர்ப்பவதியானது தெரிந்தால் தன்னை ஒழுக்கம் கெட்டவள் என இச்சமுதாயம் தீர்ப்பளித்து கல்லெறிந்து தன்னை கொன்றுவிடுவார்களே! என்ற நினைவும் உள்ளத்தே எழுந்தது.
அவள் மனம் அலைபாய்ந்தது.
“சர்வ வல்லமையுள்ள தேவன் சகலத்தையும் அறிவார்” என்பதை உணர்ந்த அந்த பக்திப் பாவை, சுய எண்ணங்களை அழித்தவளாக “இதோ நான் ஆண்டவருக்கு அடிமை, உமது வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என தன்னை அர்ப்பணித்தாள். தேவதூதன் அவளை ஆசீர்வதித்தபடி மறைந்தார்.
தேவனுடைய திட்டத்தை உணர்ந்த மரியாள் தன்னை தூய்மையின் இருப்பிடமாக வைத்துக் கொள்ள வேண்டியதை அறிந்தாள். தன் இளமை நினைவுகளையும், இனிமை கற்பனைகளையும் களைந்தாள். இறைவன் மீது தன் சிந்தனைகளைச் செலுத்தினாள். அவள் உள்ளம் பரமன் மீது பக்திமயமானது. அவளது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இனம் புரியாத ஒரு வேகம், உணர்வு பாய்வதை உணர்ந்தாள். அவள் விழிகள் ஆனந்த கண்ணீர் சொறிந்தன.
இதன் தொடர்ச்சி உள்ளக் கலக்கமும் உன்னதக் களிப்பும் என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.