தொடர் - 15
காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. மாலை மயங்கிய வேளை! முழு நிலா நாள்! தண்ணிலவு விண்ணிலே தவழ்ந்தது. மேல்மாடியில் படுத்திருந்த ஜெபசிங்கின் எண்ணப் பறவை சிறகடித்து கடந்த கால நினைவுகளை நோக்கிப் பறந்தது.
துரைராஜும், இராமசாமித் தேவரும் இணைந்தனர். உயிர்த்தெழுந்த திருநாளில் புத்துயிர் பெற்ற இராமசாமித் தேவர் குடும்பம் ஞானஸ்நானம் பெற்றது! டேனியல் சுந்தாராஜ் சிகரெட்டை மறந்தார்! தினகரன் தனக்கெனத் திருமறையை வாங்கி ஆழ்ந்து படிக்க ஆரம்பித்து விட்டார்! சந்தேகங்கள் புரியாதவைகள் தென்படும்போது ஜெபசிங்கை அணுகி விளக்கம் கேட்டு வந்தார். “ஜெபசிங் சாந்தி” திருமணம் பெற்றோர் பூரிக்க, உற்றார் உவகை கொள்ள, நண்பர் நல்வாழ்த்துப் பாட, மாணவர் குழாம் மகிழ்கொண்டாட, மிகச்சிறப்பாக நடைபெற்றது. அண்ணன் தங்கை குடும்பம் இணைந்து வாழ ஆரம்பித்தது.
மல்லிகை மணம் கமழ, மெல்ல நடந்து வந்தாள் சாந்தி! நினைவலைகள் அடங்க, உறங்குவது போல் கண்ணை மூடிக்கொண்டார் ஜெபா! கட்டிலில் அமர்ந்தவள் ஜெபசிங்கின் முகத்தை நோக்கினாள். தனக்கு இப்படிப்பட்ட அன்பான அருமையான கணவர் கிடைப்பாரென அவள் நினைத்தே பார்த்ததில்லை! “முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும்” என்ற தேவன், அவரைத் தேடும் போது இகபர நன்மைகளால் நிரப்புவதை எண்ணி பூரித்தாள். தென்றல் காற்றிலே ஜெபாவின் சுருண்ட கேசம் நெற்றி மீது மெல்ல அசைந்தது. நெற்றி மீதும் காணப்பட்ட தழும்பினை உற்றுப் பார்த்தாள் அவளை அறியாமலே தழும்பினை தடவினாள். சிரித்தபடி கரத்தை இறுகப் பற்றிக் கொண்டார் ஜெபா! ஜெபா உறங்கவில்லை என உணர்ந்த சாந்தியின் முகம் சிவந்தது! கரங்கள் மெல்ல நடுங்கின.
“திருமணத்திற்கு முன்பே தன் வருங்காலக் கணவர் உயிர் பெற்று எழ இரவு பகலாக உபவாசமிருந்து ஜெபத்தில் மன்றாடும் அருமையான. மனைவி எனக்குக் கிடைத்திருக்கும் போது, இந்தத் தழும்பு எம்மாத்திரம்? “புன்னகை பூத்தான்.
“என் அப்பா இயேசுவின் குணமாக்கும் தழும்புகள் தான் உங்களை சுகமாக்கியது! ஆனால். ..எவ்வளவு வேதனை உங்களுக்கு..!” அவள் விழிகளில் நீர் நிரம்பியது.
“சாந்தி! இந்தத் தழும்பு ஏற்பட்டதால் ஒரு குடும்பமே எம்பெருமான் இயேசுவை அறிந்து. கொண்டதே! கடவுள் இல்லை என்று வாதிடும் தினகரன் கர்த்தரைத் தேட ஆரம்பித்து விட்டாரே! பெயர் கிறிஸ்தவரான உன் மாமா உண்மைக் கிறிஸ்தவரா மாறிட்டாரே! சாந்தி! என் பரம தந்தையின் மந்தையில் ஆடுகள் சேருவதற்காக எப்பேர்ப்பட்ட தழும்புகளையும் ஏற்க நான் தயார். சாந்தி தயார்!” என்ற ஜெபாவின் குரல் வெண்கலமணி ஓசை போல் ஒலித்தது! அவர் விழிகள் வல்லமையோடே உதிக்கிற சூரியனைப் போல் பிரகாசித்தது!
இலட்சியவாதியான தன் கணவனின் இலட்சிய தீபம் சுடாவிட்டு எரியச் செய்ய வேண்டிய தன் மகத்தான பணியினை உணர்ந்தாள்! தன் பணியைச் செவ்வனே செய்ய தன்னைப் பலப்படுத்த வேண்டி அவள் இதயம் ஜெபதூபம் ஏறெடுத்தது.
ஜெபா தான் பற்றிய சாந்தியின் கரங்களை இழுத்து அவளை அணைத்தபடி “ஈசாக்குக்கு ரெபேக்காளைத் தந்த தேவன் இந்த ஜெபாவிற்கு சாந்தியைத் தந்திருக்கிறார். எனக்கேற்ற மனைவியா நீ இருப்பாய்ன்னு நம்புகிறேன். அவருடைய சொற்களில் பாசம் மட்டுமல்ல! நம்பிக்கையின் உறுதியும் தொனித்தது. விண்மீன்களும் கண்சிமிட்டி அதை ஆமோதித்தன!.
இதன் தொடர்ச்சி மழலைக் கனவுகள்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.
நீல வண்ண வானத்தை எட்டிப் பிடிப்பது போல் நெடிதுயர்ந்து நின்றது அந்த பச்சை மலை! உயர்ந்த மரங்கள்! மரங்களைச் சுற்றிப் படர்ந்த கொடி வகைகள். பல வண்ண மலர்களை தன் முகங்களாகக் காட்டி அசைந்து நின்ற செடிகள்! என அந்த மலை பெயருக்கேற்றார் போல் பசுமை பொங்க விளங்கியது.
ஓங்கி உயர்ந்து நின்ற அரச மரநிழலில் அமர்ந்திருந்தனர் டேனியலும் அவன் மனைவி அனிதாவும். அமைதி நாடி வந்த தம்பதியினர் அமைதியாகவே அமர்ந்திருந்தனர், ஆனால் இருவர் உள்ளத்திலும் எண்ண அலைகள் அலைமோதி சீறியடித்துக் கொண்டிருந்தன.
சிறுசிறு கற்களைப் பொறுக்கி எதிரேயிருந்த குளத்தில் வீசி எறிந்து கொண்டிருந்தான் டேனியல்.
அனிதாவே பேச்சைத் துவக்கினாள். அத்தை நேற்று வந்திருந்தார்கள். அத்தை சொன்ன யோசனை எனக்கும் சரியென்றே பட்டது. மெல்லச் சொன்னாள்.
சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான் டேனியல்,
நீ என்ன சொன்ன?" அவசரமாகக் கேட்டான்.
உங்களிடம் சொல்வதாகச் சொன்னேன்! பொங்கி வந்த துயரத்தை அடக்கிக் கொண்டாள். அவள் ஏன் பெண்ணாகப் பிறந்தாளோ? என்ன பாவம் செய்தாள்?”
எத்தனை மகுத்துவம் பார்த்தாகி விட்டது? எத்தனை ஊழியரிடம் சொல்லி ஜெபித்தாகி விட்டது. அவள் வேண்டாத வேண்டுதலா? வடிக்காத கண்ணீரா?கடைப் பிடிக்காத உபவாசமா? ஏன் அவளுக்கு மாத்திரம் தேவன் தம் ஆசீர்வாதக் கதவை அடைத்துவிட்டார். அன்னாளின் கண்ணீருக்கு பதில் தந்த தேவன் இந்த அனிதாவை மட்டும் மறந்து விட்டாரோ?
திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. அவளுக்கு குழந்தை மட்டும் இல்லை. ஊராரின் கேலிப் பேச்சுக்கும், உற்றாரின் ஏச்சுக்கும் அவள் இலக்கானாள். சிறு குழந்தை என்றாலே தானும் குழந்தையாக மாறி அவர்களோடு விளையாடும் தன் கணவன், இன்னும் சில காலம் கடந்தால் தன்னை வெறுத்து ஒதுக்கி விடுவானோ என பயந்தாள். அதற்கு முன் தானே விலகிக் கொள்வது நல்லது. மாமியாரிடமும் நற்பெயர் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்து விட்டாள் அனிதா எப்படி அவனிடம் கூறுவது எனத் திகைத்துக் கொண்டிருந்தபோது அவனே இன்று அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறான்.
“*உனக்கு உண்மையாகவே சம்மதம்தானா”* அவன் அவளை ஊடுருவிப் பார்த்தான்.
தன் மனதைக் கல்லாக்கி கொண்ட அனிதா சம்மதத்திற்கு அறிகுறியாக தலையை வேகமாக அசைத்தாள்...
“நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு பதில் சொல். இதே குறை எனக்கிருக்குமானால், நீ வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக
இருப்பாய் அப்படித்தானே!”? கோபமாகக் கேட்டான்.
*“அய்யைய்யோ! தன் காதை இறுகப் பொத்திக் கொண்டாள். அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் மளமளவென்று வழிந்தது.
அவள் கண்ணீரைத் துடைத்த டேனியல் பேச ஆரம்பித்தான். அனிதா! கர்த்தர் சந்நிதியில் கணவனும் மனைவியுமாக இணைந்த நாம், அன்று கொடுத்த வாக்கின்படி இன்பத்திலும், துன்பத்திலும் மரணம் நம்மைப் பிரிக்கும்வரை இணைந்திருக்க வேண்டும். மரணம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் நம்மைப் பிரிக்கக் கூடாது. தாயே ஆனாலும் தவறான யோசனைகளைப் புறக்கணிக்க வேண்டும் அனிதா!
உலகம் நம்மைக் கேவலமாகப் பேசுகிறதுக்கு முடிவு வேண்டாமா? முழங்காலில் முகம் புதைத்துக் கேவினாள்.
அவள் முகத்தை நிமிர்த்தி, “*அதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கத்தான் இன்று, இங்கு உன்னை அழைத்து வந்தேன். தெளிவாகத் திருத்தமாகப் பேசினான்.
அவனை ஆவலோடு ஏறிட்டு பார்த்தாள்.
போன வாரம் அலுவலக விஷயமாக திருச்சி சென்றிருந்தேன் அல்லவா? அங்கு பெற்றோரால் விடப்பட்ட சிசுக்களை பராமரித்து வளர்க்கும் “மழலையர் பூங்காவிற்குச் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கு இரு பாதங்களே நிரம்பிய ஒரு பெண் குழந்தையைப் பார்த்தேன் ௮க்குழந்தையைப் பார்த்தது முதல் எனக்கு அக்குழந்தையை நாம் தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணமே இடைவிடாமல் வருகிறது. நீ ஏற்றுக் கொள்வாயா என்ற சந்தேகம் எனக்கு? நிறுத்தினா டேனியல்.
உண்மையாகவா? எனக்கு பரிபூரண. சம்மதங்க! இத சொல்றதுக்கா இத்தனை யோசனை பண்ணிட்டு இருந்திங்க? ஆவல் அதிகரிக்க மலர்ந்த முகத்தோடு
கூறினாள்,
இன்னொரு விஷயமும் இருக்கிறது. நம் ஆலயத்தில் "நவ ஜீவன் சேவா மண்டல்” நடத்தும் விடுதிகளில் பயிலும் பிள்ளைகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, நவஜீவன் பணிகளைப் பகிர்ந்து கொண்ட போதே நினைத்தேன்.
ஒரு பிள்ளையை நாம் தத்து எடுப்போம்” என்று நீயும் சொன்னாய், எனவே என் மனதிலே போராட்டம் “இதைச் செய்வோமா? அல்லது அதைச் செய்வோமா! என்று.”
“இரண்டையுமே செய்வோமே! பட்டென்று பதில் சொன்னான் அனிதா.
“வெரிகுட்! இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்
“அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவார்களாய் தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும், ஆம் சகலமும் நன்மைக்கேதுவாகவே நடைபெறுகிறது. என்ற வசனத்தின் படி நமக்கு குழந்தைச் செல்வம் இல்லாததும், இரு குழந்தைகளை நம் செல்வங்களாக எடுத்து வளர்த்து வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவே! புரிந்ததா? நீண்ட பிரசங்கமே பண்ணியவன்.
“சசி புறப்படலாமா? என்றான்.
என்னங்க! கொண்டு வந்த சாப்பாடு, டீ எல்லாம் அப்படியே இருக்குங்க!”
“நல்ல முடிவுக்கு வத்தபின் அதை செயல்படுத்துவதில் தாமதம் இருக்கக் கூடாது. உடனே புறப்பட்டுபோய் இராணிப் பேட்டைக்கும், மழலையர் பூங்காவிற்கும் கடிதம் எழுதி இன்றைக்கே தபாலில் சேர்த்து தான் சாப்பாடு, டீ எல்லாம்!? சொல்லிக் கொண்டே எழுந்தான். மகிழ்வோடு அவனைத் தொடர்ந்தாள் அனிதா
அன்பான கணவனைக் கொடுத்த கர்த்தர், அருமையான குழந்தைகளைத் தனக்குத் தந்துவிட்டார் என விசுவாசித்தாள். அவள் உள்ளம் பலகோடி ஸ்தோத்திரங்களை பரமதேவன் பாதத்தில் படைத்து மகிழ்ந்தது.
Author: Sis. Vanaja Paulraj