துரதிர்ஷ்டவசமாக, சில கிறிஸ்தவ பிரசங்கிகள் ஆவிக்குரிய சேவையை விலைக்கு விற்கிறார்கள். மாணவர்களுக்கு பேனா விற்பது, வியாதிபட்டவர்களுக்கு எண்ணெய், இப்படி பல புதுமைகள் அடங்கும். குறைவான விசுவாசம் கொண்ட ஜனங்கள் அல்லது தேவனைப் பற்றி சரியான புரிதல் இல்லாதவர்கள் இது தேவ ஊழியரிடமிருந்து கிடைக்கும் தேவனின் ஏற்பாடு என்று நினைக்கிறார்கள். பரீட்சைக்கு அந்த பேனாவை வைத்து எழுதும் போது அது வேலை செய்யாமல் இருப்பதைக் கண்டனர், நல்லவேளை அவர்களிடம் வழக்கமாக எழுதும் பேனாக்கள் இருந்தது. தீர்க்கதரிசியும் ஆசாரியர்களும் தங்கள் வர்த்தகத்தை தேசத்தில் நடத்துகிறார்கள், அவர்களுக்கு அறிவு இல்லை (எரேமியா 14:18) என்பதாக எரேமியா தீர்க்கதரிசி எழுதினார்.
அறிவு இல்லை:
அத்தகைய தீர்க்கதரிசிகள் மற்றும் ஆசாரியர்கள் தேவனுடைய வார்த்தையைப் பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள் என்றார் எரேமியா. அநேகமாக, அவர்கள் சடங்குகள், பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் மதத்தின் வெளிப்புற வடிவங்களை அறிந்திருக்கலாம், ஆனால் தேவனைப் பற்றிய உண்மையான அறிவைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் மதத்தின் வெளிப்புற வடிவங்களைப் பின்பற்றினர், ஆனால் மோசேயின் பிரமாணத்தைப் படிக்கவோ கேட்கவோ, சிந்திக்கவோ அல்லது தியானிக்கவோ இல்லை. அவர்கள் தெய்வீகத்தையும் ஆவிக்குரிய காரியங்களையும் ஒரு சூத்திர தொகுப்பு அல்லது மந்திரம் அல்லது இயக்கவியல் என்று தவறாகப் புரிந்து கொண்டனர். வரலாற்றில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்களை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்று கண்டனம் செய்தார் (மத்தேயு 23:27-28).
தவறான நம்பிக்கை:
அறிவு இல்லாமல், அவர்கள் தவறான நம்பிக்கை, உறுதி, உத்தரவாதங்கள் மற்றும் வாக்குறுதிகளை வழங்கினர். விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் இல்லாமல், தேவனிடமிருந்து ஆசீர்வாதங்கள் இல்லை. இருப்பினும், இந்த தலைவர்கள் பலிகள், உபவாசங்கள் மற்றும் பிற காரியங்கள் என அவர் மதத்தின் வெளிப்புற வடிவத்தில் மகிழ்ச்சியடைகிறார் என்பதாக தேவ மக்களுக்கு தவறான எண்ணத்தை அளித்தனர். நவீன கால சில ஊழியர்கள் தங்கள் ஊழியத்திற்கு நன்கொடை அளிப்பதன் மூலம் தேவ ஆசீர்வாதங்களைக் கொண்டுவரலாம் என்று மக்களை நம்ப வைக்கிறார்கள்.
தங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ளுதல்:
வாடிக்கையாளரையும் நுகர்வோரையும் ஈர்ப்பதற்காக பொதுவில் வணிகம் செய்வது என்பது இந்தச் சொல்லின் பொருளாகும். அதிக வருமானம் மற்றும் லாபத்துடன், ஒரு பெரிய தொகுதியைப் பெறுவதே நோக்கம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் ஊழியத்தின் நோக்கம் பணம், தேவன் அல்ல. ஆம், காசே தெய்வம். தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் நாடு முழுவதும் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அதாவது அவர்கள் எல்லா புவியியல் பகுதிகளிலும் ஊடுருவி, மக்களை தேவனிடம் திருப்புவதற்குப் பதிலாக, தங்கள் பக்கம் திருப்பினார்கள்.
தேவன் மகிழ்ச்சியடையவில்லை:
இந்த மதத் தலைவர்கள் தாங்கள் தேவனைப் பிரியப்படுத்துவதாகவும், கனப்படுத்துவதாகவும், ஊழியம் செய்வதாகவும், பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் நினைத்து தங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றிக்கொண்டனர். அவர்கள் கர்த்தாவே கர்த்தாவே என்று அழைக்கலாம் மற்றும் அற்புதங்களைச் செய்வதில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாகக் கூறலாம். ஆனாலும் தேவன் அவர்களை; “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்” என்று சொல்லுவார் (மத்தேயு 7: 21-23).
நான் கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் சரியாய் அறிந்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்