ஒரு பேரங்காடி (mall) உரிமையாளருக்கு ஒரு அற்புதமான யோசனை உதித்தது. அவர் ஒரு ஸ்பைடர் மேன் உடையை உருவாக்கி அதை அணிய ஒரு நபரை நியமித்தார், குறிப்பாக குழந்தைகளோடு வரும் குடும்பங்களை ஷாப்பிங் மாலுக்கு அழைப்பது நோக்கமாக இருந்தது. இது அந்த ஊருக்குள் பிரபலமானது, ஊரெங்கும் அதைப் பற்றிய பேச்சானது. மேலும் ஸ்பைடர் மேன் மாலுக்கு வரும் சிறுபிள்ளைகளோடு செய்யும் குறும்புகள் குழந்தைகள் மத்தியில் ஹிட் ஆனது. ஸ்பைடர் மேனைப் பார்ப்பதற்காகவே பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை மாலுக்கு கூட்டிக் கொண்டு வர ஆரம்பித்தார்கள். பல பெற்றோர்கள் ஸ்பைடர் மேனைப் பார்ப்பார்கள், செல்ஃபி எடுப்பார்கள், மாலுக்கு வராமல் அப்படியே சென்று விடுவார்கள். அதனால் மாலின் உரிமையாளர் ஸ்பைடர்மேனின் பயன் ஒன்றுமில்லை என அறிந்து அதை நீக்கினார். ஸ்பைடர் மேனினால் ஈர்க்கப்பட்டு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கடைக்குள் வருவதற்குப் பதிலாக அது வெறுமனே ஈர்ப்பு மையமாக இருந்து அவர்களை உள்ளே வராமல் தடுக்கிறது.
இது சாண்டா கிளாஸ் பிரச்சினை போன்றது. சாண்டா கிளாஸின் யோசனை ஒரு புராணக்கதையாக மாறிய ஒரு வரலாற்று ஆளுமையிலிருந்து பெறப்பட்டது. மிராவின் புனித நிக்கலசு என்பவர் 4ஆம் நூற்றாண்டில், கிரேக்கத்தில், பைசாந்தியப் பேரரசின் ஒரு மாகாணத்தின்(தற்போது இப்பகுதி துருக்கியில் உள்ளது) வாழ்ந்த கிறித்துவப் பேராயர் ஆவார். அவர் ஏழைகளுக்கு கொடுப்பதில் தாராள குணம் கொண்டவர். ஒரு ஏழை கிறிஸ்தவனின் மூன்று மகள்கள் விபச்சாரத்தில் தள்ளப்படாமல் இருக்க அவர்களுக்கு அவர் தாராளமாக பரிசளித்தார் என்பது பிரபலமான கதைகளில் ஒன்றாகும். அவர் கிரீஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் தாடி வைத்த பிஷப்பாக நன்கு அறியப்பட்டார். பானை வயிறு, சிவப்பு உடை மற்றும் பனி போன்ற வெள்ளை தாடியுடன் சாண்டா கிளாஸ் பனியில் சறுக்கி ஓடும் கலைமான் வாகனத்தில் சவாரி செய்து குழந்தைகளுக்கு பரிசுகளை கொண்டு வரும் பாரம்பரியம் மேற்கு நாடுகளில் பிரபலமடைந்தது.
சாண்ட் கிளாஸ் தாராள மனப்பான்மை கொண்டவராகவும், ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தைகளை நேசிப்பவராகவும் சித்தரிக்கப்பட்டார். சாண்டா கிளாஸ் ஏழைகள் வசிக்கும் இடங்களுக்குச் செல்வதால், சபைகள் ஏழைகளுக்கு கொடுத்து உதவியது. துரதிர்ஷ்டவசமாக, உலகமே சாண்டா கிளாஸால் மயங்கியது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எதற்கு, அதன் நோக்கம் என்ன என்ற காரணத்தை எளிதாக்குவதற்குப் பதிலாக, அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கவனத்தை சிதறடித்தார் என்றே சொல்ல வேண்டும். மால் நிர்வாகம் ஸ்பைடர்மேனை நீக்கியது போல, திருச்சபைகளும் சாண்டா கிளாஸ் இல்லாமலாக்க முடியும் அல்லது சாண்டா கிளாஸ், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வரும் மக்களை வேறு வழியில் நடத்துகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கிறிஸ்மஸ் என்பது நம்மை மீட்பதற்காக கர்த்தராகிய இயேசு தம்மையே நமக்குக் கொடுத்தார் என்பதை நினைவூட்டுகிறது (எபேசியர் 5:2; தீத்து 2:14).
நான் கிறிஸ்மஸை கொடுக்கும் பண்டிகையாக கொண்டாடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்