தேவன் இஸ்ரவேலை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, வாக்களிக்கப்பட்ட தேசத்தை நோக்கி அழைத்துச் சென்றார். சவக்கடலின் கிழக்கே யோர்தானில் உள்ள நவீன வாடி அல் முஜிப் என்ற அர்னோனின் ஆற்றுக்கால்களை இஸ்ரவேலர்கள் கடந்தார்கள். மோவாபியர் மற்றும் அமோரியர் பிரதேசங்களுக்கு இடையே அர்னோன் நதி எல்லையாக இருந்தது. அங்கே, கர்த்தர் மோசேக்கு தண்ணீர் கொடுப்பதற்காக மக்களை ஒன்று சேர்க்கும்படி கட்டளையிட்டார். "அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள். நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்" (எண்ணாகமம் 21:17-18).
வாக்குத்தத்தம்:
எகிப்தின் மீதே ஏக்கத்தைக் கொண்டிருந்த பழைய தலைமுறையினர் அடிக்கடி திரும்பிச் செல்ல நினைத்து வனாந்தரத்தில் மடிந்துவிட்டனர். மிரியம் இறந்தார், ஆரோன் இறந்தார், விரைவில் மோசே இறந்துவிடுவார், ஒரு சகாப்தம் முடியும். இரண்டாம் தலைமுறையினருக்கு எகிப்தின் கசப்பான கடந்த கால நினைவுகள் இல்லை, எனவே அவர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தின் எதிர்காலத்தை நோக்கியிருந்தனர். தேவனால் கட்டளையிடப்பட்ட மோசே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பற்றி மக்களுக்கு நினைவூட்டுவதற்காக மக்களை ஒருங்கிணைத்தார்.
முன்னேற்பாடு:
ராஜாக்கள் காலத்தில் தோண்டப்பட்ட கிணறு அங்கு இருந்ததாக நம்பப்படுகிறது, ஆனால் புதர்கள், சேறு மற்றும் இலைகளால் மூடப்பட்டிருந்தது. அவர்கள் மண்வெட்டிகள் அல்லது பிற கருவிகளைக் கொண்டு தோண்டத் தேவையில்லை. செங்கோல் மற்றும் கம்பிகளைப் பயன்படுத்தி, மூடி அகற்றப்பட்டது, மேலும் தண்ணீர் பெருக்கெடுத்தது.
பாடல்:
இப்பாடலை ஆராதனை, கொண்டாட்டம், துதி, நன்றி, ஜெபம் எனப் புரிந்து கொள்ளலாம். இந்த பாடல் கிழக்கில் பயணிக்கும் வணிகர்களின் பாடலின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இஸ்ரவேலர்கள் அதை தேவனின் முன்னேற்பாடாக பார்த்தனர், ஆம், பரலோகத்திலிருந்து வந்த வரம்.
ஆசீர்வாதம்:
மோசே பாறையை அடிக்க, தண்ணீர் பாய்ந்து வந்தது. இதேபோன்ற செயலில், அவர்கள் பூமியைத் தாக்கி, தண்ணீர் மேலே ஏறும் அல்லது ஊற்றெடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். வாக்களிக்கப்பட்ட தேசத்தின் வெற்றியின் தொடக்கத்தையும் இந்தப் பாடல் குறிக்கிறது.
ஆவிக்குரிய பயன்பாடு:
“இயேசு தம் சிலுவைக் கோலால் கிணற்றைத் தோண்டினார்; ஆனால், ஜீவத் தண்ணீரின் ஊற்றாக இருக்கும், நித்தியத்திலிருந்து ஊற்றப்பட்டு, அதன் மூலத்திற்குத் திரும்புகிற ஆவியானவர், அதிக அளவு மற்றும் சக்தியுடன் அதற்குள் வவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்" என்பதாக அலெக்சாண்டர் மக்லாரன் எழுதுகிறார்.
ஆண்டவரின் வாக்குத்தத்தம், முன் ஏற்பாடுகள், ஆசீர்வாதங்களுக்காக நான் அவரை துதிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்