28 வயது இளைஞருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த மனிதனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது, அதாவது தனது புன்னகை ரசிக்கும் படியாக இல்லை என்று அவன் நினைத்தான். எனவே, ஹைதராபாத்தில் உள்ள பல் மருத்துவ மனையில் அவனது திருமண விழாவிற்குத் தயாராகும் வகையில் "ஸ்மைல்-என்ஹான்ஸ்மென்ட்" (புன்னகையை மேம்படுத்துதல்) அறுவை சிகிச்சை செய்து கொண்டான். துரதிர்ஷ்டவசமாக, அவன் இனி ஒருபோதும் சிரிக்க முடியாது, ஏனெனில், அறுவை சிகிச்சையின் போது, அவன் இறந்தான் (NDTV, பிப்ரவரி 20, 2024) ஒரு இளைஞன் எந்த நோக்கமும் இல்லாமல் இறந்தான், அவனுடைய வாழ்க்கை அவனுக்கும் மற்றவர்களுக்கும் அர்த்தமற்றதாகிவிட்டது.
வெளி அழகு:
பலர் தங்கள் வெளிப்புற தோற்றம் அல்லது அழகு அல்லது செளந்தரியத்தைப் பற்றி கவலைப்படுவதைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் தங்கள் உள்ளான வாழ்க்கையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு சொன்னது போல், அவை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள், உள்ளான அசுத்தங்கள் (மத்தேயு 23:27-28). ஒப்பனை அறுவை சிகிச்சை வெளிப்புற கவர்ச்சியை அதிகரிக்கலாம் ஆனால் உள்ளான ஆத்துமாவை சுத்தப்படுத்த முடியாது.
உள் வசீகரம்:
தேவையானது உள் அழகே. இருதயத்தில் சுவிசேஷ ஒளி பிரகாசித்தால், துப்புரவின்மை, அசுத்தம், பாவம், அவமானம், மாசு ஆகியவை நீங்கும். கிறிஸ்துவின் இரத்தம் ஒரு நபரை எல்லா பாவங்களிலிருந்தும் சுத்தப்படுத்துகிறது (1 யோவான் 1:7). வெளிப்புற மேம்பாடு எந்தவொரு நபருக்கும் ஆவிக்குரிய மதிப்பைச் சேர்க்காது.
இரட்சிப்பின் மகிழ்ச்சி:
மகிழ்ச்சியான இருதயம் மகிழ்ச்சியான முகத்தை உருவாக்குகிறது (நீதிமொழிகள் 15:13). உள்ளான மகிழ்ச்சி இல்லாமல், முகத்தில் மகிழ்ச்சியோ புன்னகையோ இருக்க முடியாது. விசுவாசிகளை எப்பொழுதும் கர்த்தரில் களிகூரும்படி பவுல் ஊக்குவிக்கிறார் (பிலிப்பியர் 4:4). கர்த்தருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் எந்நேரமும் சந்தோஷமாக இருப்பார்கள்.
களிகூரு; இயேசு உன்னை நேசிக்கிறார்:
இது மக்களுக்கு சுவிசேஷம் செய்ய பயன்படுத்தப்பட்ட ஒரு முழக்கம். ஆம், தேவ அன்பு ஜனங்களின் முகங்களில் புன்னகையை வரவழைக்கிறது. தேவ ஜனங்கள் மீது ஒரு ஆசீர்வாதத்தை உச்சரிக்க தேவன் ஆரோனுக்கு கட்டளையிட்டார், அதாவது கர்த்தருடைய முகம் அவர்கள் மீது பிரகாசிக்கிறது என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறது (எண்ணாகமம் 6:23-26).
சோதனைகளுக்கு மத்தியிலும் மகிழ்ச்சி:
சோதனைகள், உபத்திரவம் மற்றும் பிற துன்பங்களை ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கான ஆதாரமாகக் கருதும்படி விசுவாசிகளை அப்போஸ்தலனாகிய யாக்கோபு ஊக்குவிக்கிறார். எனவே அவற்றை மகிழ்ச்சியாக எண்ணுங்கள் (யாக்கோபு 1:2-4).
ஆசிர்வதிக்கப்பட்ட பெண்களுக்குள் இருக்கும் சந்தோஷம்:
ஆசீர்வதிக்கப்பட்ட தெய்வீகப் பெண்கள் எதிர்காலத்தைப் பற்றி பயப்படுவதில்லை, உண்மையில் வருங்காலத்தைப் பற்றியும் மகிழ்கிறாள் (நீதிமொழிகள் 31:25). அதாவது, அவர்கள் எதிர்காலத்தை புன்னகையுடன் எதிர்கொள்கிறார்கள். தேவன் மீதான நம்பிக்கையும், எதிர்காலத்தை எதிர்கொள்ளும் தைரியமும் அவர்களை மகிழ வைக்கிறது.
தேவ அன்பை உலகில் பிரதிபலிக்க நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்