பெத்தேலுக்கு வடக்கே பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்கு கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்கே எப்ராயீம் மலைப்பகுதியில் சீலோ அமைந்துள்ளது (நியாயாதிபதிகள் 21:19). இது எருசலேமுக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது யோசுவா, நியாயாதிபதிகள், 1 சாமுவேல், 1 இராஜாக்கள், சங்கீதம் மற்றும் எரேமியாவின் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடாரம் சீலோவில் 369 ஆண்டுகள் பிரதான ஆசாரியனான ஏலி இறக்கும் வரை இருந்தது. அந்த நேரத்தில், உடன்படிக்கைப் பெட்டி கிமு 1050 இல் பெலிஸ்தியர்களால் கைப்பற்றப்பட்டது (1 சாமுவேல் 4). பின்னர் அசீரியர்கள் இஸ்ரவேலின் வடக்கு இராஜ்ஜியத்தைக் கைப்பற்றினர் (சங்கீதம் 78:58-60).
தேவன் சீலோவைக் காப்பாற்றவில்லை என்றால், அவர் எருசலேமையும் காப்பாற்ற மாட்டார் என்று எரேமியா எருசலேமில் உள்ள ஆலயத்தின் வளாகத்தில் தைரியமாக அறிவித்தார். "என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர்குகையாயிற்றோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்" (எரேமியா 7:11,12).
1) பிரமாணத்தைப் பற்றிய அலட்சியம்:
நியாயாதிபதிகளின் காலத்தில் மோசேயின் நியாயப்பிரமாணம் மறக்கப்பட்டது. ஒவ்வொரு நபரும் தங்களுக்கு ஏற்றமாதிரி அல்லது தங்களுக்கு எது சரியோ அல்லது எளிதானதோ அதை நியமித்துக் கொண்டு அதனையே பின்தொடர்ந்தார்கள் (நியாயதிபதிகள் 21:25).
2) தேவனைப் பற்றிய அலட்சியம்:
பிரதான ஆசாரியனாகிய ஏலியின் உபயோகமற்ற மகன்கள் உட்பட தேசத்திலுள்ள பலர் கர்த்தரை அறியவில்லை. "ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை" (1 சாமுவேல் 2:12).
3) பலிகளைப் பற்றிய அலட்சியம்:
ஏலியின் மகன்கள் கூடாரத்தில் பலிகளை அலட்சியம் செய்ததற்காக பேர் போனவர்கள். இவர்கள் பலியிடுகிற மனுஷனிடமிருந்து பலி செலுத்தும் முன்னரே தங்களுக்கு விருப்பமான இறைச்சித் துண்டுகளைப் பறித்தனர் (1 சாமுவேல் 2:12-17).
4) பரிசுத்ததைப் பற்றிய அலட்சியம்:
கர்த்தர் தன்னை பரிசுத்தராக வெளிப்படுத்தினார். கர்த்தர் பரிசுத்தர், ஆகையால் அவரை தொழுதுகொள்பவர்களும் பரிசுத்தர்களாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இந்த ஏலியின் மகன்களோ ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடுகிற ஸ்திரீகளோடே விபச்சார உறவு வைத்திருந்தார்கள் (1 சாமுவேல் 2:22).
5) தலைமைத்துத்தைப் பற்றிய அலட்சியம்:
பிரதான ஆசாரியனான ஏலி முற்றிலும் தோல்வியடைந்தார். அவர் தனது அதிகாரத்தை தனது வீட்டிலோ அல்லது தேசத்திலோ பயன்படுத்த முடியவில்லை.
கோத்திரம், சமூகம் மற்றும் தேசம் என எதுவாக இருந்தாலும் நியாயந்தீர்க்கப்படலாம்.
நான் பரிசுத்தமான தேவனை பயபக்தியுடன் தொழுது கொள்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran