தொடர் - 24
தந்தையிடமிருந்து தனக்கு வந்த கடிதத்தைப் படித்து முடித்தவர் அமைதியாக இருந்தார். சாந்தியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?” கேட்டே விட்டாள். ஜெபாவிடமிருந்து லேசான சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது.
“எனக்கென்னவோ, இது கடவுளே கொடுக்கிற அழைப்பு என்றுதான் தோணுது. மாமா எழுதியிருக்கிறதைப் போல அவர்களுக்கும் வயதாகிவிட்டது. நாம் அருகில் இருப்பது நல்லது. நல்ல மேய்ப்பன் பள்ளியை நீங்க விரும்புகிறபடி ஒரு இலட்சியப் பள்ளியா நடத்தலாம். இங்க நீங்க போராடிப் போராடி என்ன கண்டீங்க?” சாந்தி தன் ஆவலை.. வெளியிட்டாள்.
“ஒருத்தர் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பைத் தாறார் என்றவுடன் துடிக்கிறாயா சாந்தி” சிரித்தார் ஜெபா.
“உங்களுக்கு எப்பவும் சிரிப்புதான். நான் படும் வேதனை உங்களுக்குத் தெரிய மாட்டேங்குதே, இப்ப போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போக வந்துவிட்டது” துக்கம் அவள் தொண்டையை அடைத்தது.
“கவலைப்படாதே சாந்தி! கர்த்தர் நம்மைக் கைவிட மாட்டார். நம்மை நலமான வழியில்தான் நடத்துவார் “நல்ல மேய்ப்பர் பள்ளி நிர்வாகத்தை ஏற்று நடத்தப்பா” என்று அப்பாவுடைய நண்பர் டேவிட்சன் என்னிடம் முன்பே அடிக்கடி சொன்னதுதான். குழந்தையற்ற அவர் தனக்குப்பின் இந்தப் பள்ளி நிர்வாகம் சீரக்குலையக்கூடாதே என்று நினைக்கிறார் நாம் ஜெபிப்போம் சாந்தி! கர்த்தர் சித்தப்படி நடப்போம்” ஆறுதலாகப் பேசினார்.
நாட்களுக்குத் தான் எவ்வளவு வேகம்? உருண்டோடியது!
வள்ளுவர் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி கருணாகரன் திடீர் திடீரென காரில்லாமலேயே பள்ளிக்கு விஜயம் செய்தார். கணக்கு வழக்குகளைத் தூண்டித் துருவி ஆராய ஆரம்பித்தார். பள்ளியின் உண்மை நிலையை உணர ஆரம்பித்தார். பள்ளியில் யாரும் டியூஷன் எடுக்கக்கூடாது என்ற சட்டம் வந்தது. பள்ளி ஸ்டோர் உதவித் தலைமையாசிரியர் கைக்கு வந்தது.
தன் பணியில் அசதியாயிருக்கும் ஆசிரியர்” கடிந்துக் கொள்ளப்பட்டனர். பள்ளியின் சுகாதாரம் கவனிக்கப்பட்டது. குடிநீர் வசதி சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமையாசிரியருக்கும் நிர்வாகிக்குமிடையே பிளவு பெரிதாகிக் கொண்டே போனது. தலைமையாசிரியர் நிர்வாகியினால் அடிக்கடி கடிந்துக் கொள்ளப்பட்டார். அவருக்கு இதுவரை காவடி தூக்கிய கந்தசாமியும், குரு சாமியும் ஒதுங்கினர். அவரால் இதையெல்லாம் தாங்க முடியவில்லை. இவையெல்லாம் தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதினார். ஒருநாள் தன் வேலையை ராஜினாமா செய்தார். உதவித் தலைமையாசிரியர், தலைமையாசிரியராகப் பணி உயர்வு பெற்றார். பள்ளி சீர்பெற்றது. இந்நிலையில் ஓர் நாள் ஜெபா தன் வேலையை இராஜினாமா செய்தார். நிர்வாகியும், தலைமையாசிரியரும் தடுத்தனர். கடவுளின் திட்டமான வழி நடத்துதல் தனக்கிருப்பதாகக் கூறவே, இருவரும் மிகுந்த மனவருத்தத்துடன் சம்மதித்தனர். கண்ணீருடன் ஜெபாவிற்குப் பிரிவு உபசார விழா நடைபெற்றது!
இதன் தொடர்ச்சி இலட்சிய தீபம் சுடர் விட்டது! என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.